முக்கிய செய்திகள்

Tuesday, November 8, 2011

நேர் நேர் தேமா


     வைரமுத்து சொன்னது போல "யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அந்த வகையில் தன் பணி நிமித்தம் காரணமாக எடுத்த சில பேட்டிகளை புத்தக வடிவமாக்கி இருக்கிறார் "நீயா நானா " கோபிநாத். திரையில் நாம் காணும் பேட்டி பிரபலங்களின் மனதை மட்டுமே பதிவு செய்கிறது. ஆனால், இந்த புத்தகத்தின் மூலம் பேட்டி எடுப்பவரின்  மனதையும் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு.
      பேட்டிகளை எழுத்தாக்கம் செய்யும் போது எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் வார்த்தைகளைக்  கையாண்டு இருக்கிறார். அதற்காக பேட்டி காணும் முன் ஏற்பட்ட படபடப்பு, மனதில் தோன்றிய கேள்விகள் என அற்புதமாக நம்மை அந்த இடத்திற்கே கூட்டி சென்று விடுகிறார்.

     "ஒரு சுய முன்னேற்ற நூலில் கூறிய அனைத்தும் உனக்கு ஒத்துவராது. உனக்கு என்ன தேவையோ, அதை நீ எடுத்துக் கொள்", என யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல பல்துறை சாதனையாளர்களின் பேட்டிகளின் தொகுப்பு என்ற வகையில் இது முக்கியமான படைப்பாக மனதிற்குப்படுகிறது. 


புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் கூறியுள்ளதாவது:
     அரிச்சந்திரன் நாடகம் பார்த்து காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்வார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையை அது அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்திபோல் முடிவு செய்திருக்க வேண்டும்.

     இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

     என் வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் முன்னேற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

     அவற்றை இனம் கண்டு ஆராய்கிற நுட்பத்தை, தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கிக் கொள்ளும் சிந்தனையைப் புத்தகத்தைப் படிப்பவரே கொண்டு வரவேண்டும் காந்தி கொண்டு வந்ததைப் போல. வேண்டுமானால் இந்த புத்தகம் அதற்குரிய ஆர்வத்தைத் தூண்டலாம்.

     இது சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஏற்பாடு இல்லை. அவர்கள் கடந்து வந்த பாதையில் கற்றுக் கொண்ட உத்திகளை முன்வைக்கிற முயற்சி. 

     இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெலாம் உறுதி தருவதற்கில்லை. தன்னம்பிக்கை நம்முள் இருந்து தான் பிறக்கிறது என்பதை நானும் தீவிரமாக நம்புகிறேன். என்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்த புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும்.

     எழுதியது கோபிநாத் - ஆக இருக்கட்டும்.
     படிக்கிறவர்கள் காந்தி - ஆக இருங்கள்.
     அது தான் என் வேண்டுகோள்.
நன்றியுடன்,
கோபிநாத்.

நூல் விவரம்:- 
பெயர்: நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

No comments:

Post a Comment