முக்கிய செய்திகள்

Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Saturday, July 26, 2014

பொருள்வையில் பிரிதல் தலைவனின் இயல்பு !!!!


''வியாழனில் 4,331 நாட்கள் ஒரு வருடம், செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம், பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம், வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம், புதனில் 88 நாட்கள் ஒரு வருடம், என் அருமை மகளே... நீ விடுப்பில் வருவது பதினைந்து   நாட்கள். அதுதான் எனக்கு ஒரு வருடம்'' 


காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத் துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான்.

சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது...
இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை.

என்னதான் மகன்கள் இருந்தாலும், ஒரு தந்தைக்கு தன் மகள்தான் பிரியமானவளாக இருக்கிறாள். ''நான் பிறந்தபோது அம்மா பூரிப்படைந்தாள். அப்பா நீயோ அடுத்த நொடியில் இருந்து உனக்கான வாழ்வை விட்டுவிட்டு, எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாய்'' அதுதானே உண்மை

என் பொண்ணுக்கு அதுதான் பிடிக்கும் என்று, பிடித்தப் பொருளை வாங்கிக் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது தந்தையின் கடமை. அதற்குப் பிறகு, எல்லாவற்றுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யத் தொடங்குகிறார் தந்தை.


''அவனுக்கு ரெண்டு பொண்ணுப்பா'' என்று உறவுகளும் நட்பும் சொல்லும்போதே அது எவ்வளவு பெரிய பொறுப்பை தந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. பல இடங்களில் பெண் பெற்றவர் என்பது முன்னுரிமைக்கு வழிசெய்கிறது. காரணம் மகள் என்பவள் பாசத்துக்குரியவள்; மகள் என்பவள் குடும்பத்தின் பாதுகாவலி; மகள்தான் குடும்பத்தின் கௌவரம். இதுதான் உலகெங்கும் உள்ள பாசவலை

''அப்பா, என்னை மலை தாண்டியுள்ள ஊரில் கட்டிக் கொடுக்க வேண்டாம். கடல் தாண்டிய ஊரில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். பாதையில்லா ஊரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டாம். நான் நினைத்தால் காலையில் கிளம்பி உன்னை வந்து பார்த்துவிட்டு மாலையில் புகுந்த வீடு திரும்பும்படியான தூரத்தில் மாப்பிள்ளை பார்'' என்று கவிதையாய் சொல்கிறாள் ஒரு மகள். அதுதான் மகளின் தந்தைப் பாசத்துக்கு இலக்கணம்.

தாய் இறந்து போய்விட்ட குடும்பங்களில் உள்ள மகள்தான் அதற்குப் பிறகு அனைவருக்கும் தாயாகிறாள். திருமணத்தை நினைத்துக்கூட பார்க்காமல் தன் தந்தைக்கும் தம்பி தங்கைகளுக்கு தாயாகி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மகளுக்குப் பொருத்தமானவன் என்று தந்தை ஊர் ஊராக சல்லடை போட்டு சலித்து மாப்பிள்ளைத் தேடி நிச்சயம் செய்வதும், திருமணத்துக்கு முன்பே அந்த மாப்பிள்ளையைப் பார்த்து என் சம்பளத்தில் பாதியை தந்தைக்கு அனுப்புவேன் அதற்கு சம்மதமா என்று அந்த மகள் இரைஞ்சுவதும் எத்தனை பெரிய பாச வலை. இந்த உணர்ச்சியும் நேசமும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே மட்டும் நிலவும் பிரத்யேக உலகம். 



சிறு வயதிலேயே மகளுக்கான முக்கியத்துவம் தந்தையிடம் ஆரம்பித்துவிடுகிறது. இருப்பதில் அழகான ஆடை, உயர்வான அணிகலன், சிறப்பான கல்வி என்று தேடித் தேடி சேர்க்க ஆரம்பிக்கிறார் தந்தை. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் குண்டுமணி குண்டுமணியாக தங்கத்தையும் வாங்கி சேர்க்கிறார். கணவன் வீட்டில் மகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக அத்தனை வீட்டு உபயோகப் பொருள்களையும் வாங்கி கொடுக்கிறார். மகளின் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது செய்கிறார். அவர்களைத் தோளில் தூக்கி கொஞ்சி அதில் சுகம் காண்கிறார். இப்படி எத்தனையோ அவதாரம் எடுத்து மகளிடம் அன்பு வளர்க்கிறார்.

அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகனானேன் என்கிறது கண்ணதாசனின் பாடல் வரிகள். அப்படி தன் மகளுக்கு மகனாகும் பாக்கியத்தைத்தான் விரும்புகிறார் ஒவ்வொரு தந்தையும். நம் பண்டைத் தமிழ் மன்னர்கள் மகளை அண்டை தேசத்துடனான உறவுக்கு பாலமாக நினைத்தனர். எதிரி மன்னனை தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து நட்பு நாடாக ஆக்கிக்கொண்ட ராஜ தந்திரிகளாக விளங்கினர். இன்று ஒரு குடும்பத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த மகள், அன்று ஒரு தேசத்தின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறாள்.

என்னதான் கணவன் வீட்டில் ராஜபோகமாக வாழ்ந்தாலும், தன் தந்தையின் நினைவும் பிறந்த வீட்டின் பற்றும் இல்லாத பெண்கள் உண்டா. தாய் வீட்டுக்கு போய்வரும் நாளைத்தான் அவள் வாழ்நாள் முழுவதும் நினைத்து அசைபோடுகிறாள். தந்தை மேலுள்ள ஈர்ப்புதான் அவளை கணவனிடம் தந்தையைத் தேடவைக்கிறது. பொதுவாகவே தாயிடம் மகனும் தந்தையிடம் மகளும் பாசமாக இருப்பார்கள் என்கிறது உளவியல். அதற்குப் பாலின ஈர்ப்புதான் காரணம் என்றும் விளக்கம் சொல்கிறது. ஆனால், அதையும் தாண்டி தகப்பன் மீது மகள் வைக்கும் பாசமும் மகள் மீது தந்தை வளர்க்கும் பாசமும் எந்த உளவியல் கோட்பாடுகளிலும் அடங்காது. அங்கே காரண காரியங்களைத் தாண்டிய அன்பும் பாசமும் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

Wednesday, July 23, 2014

உயிர் பதுமைகள்

குழந்தைகள் நம் உயிர்த்துளியில் உதித்த உன்னதப் பிறப்புகள். பஞ்சபூதங்களின் உயிர்ப் பதுமைகள். பேசும் சித்திரங்கள். பெற்றவரகளின் வாரிசாகத் திகழும் வருங்காலச் சந்ததிகள்.குழந்தைகளைக் கொஞ்சாதவர்கள், மழலைச் சொல் கேளாதவர்கள். சேட்டைகளை ரசிக்காதவர்கள் எவரேனுமுண்டோ?


பள்ளி விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னாலே குழந்தைகள் குதூகலம் ஆகிவிடுவார்கள். காரணம் அதிகப்படியான பாசத்தை தாத்தா வீட்டில் தான் காணமுடியும். 

குழந்தைகள், தாத்தா, பாட்டியிடம் அச்சமின்றி மனம்விட்டு சிரித்துப் பேசி விளையாடி, உண்டு மகிழ்கிறார்கள்.. பெற்றோர்களிடம் கிடைக்காத பாசமும், அரவணைப்பும் அவர்களிடம்முழுமையாகக் கிடைக்கின்றன அவர்கள் சொல்வதைக் கேட்டு,தலையாட்டி, சம்மதித்து நடக்க விரும்பகின்றனர். குழந்தைகள் தாத்தா பாட்டிகளிடம் வளர்வதையும், அடிக்கடி அவர்களைப் பார்த்து மனம் பூரித்து மகிழ்வதையும் பெரிதும் விரும்புகின்றனர். அப்படிப் பார்க்க இயலாவிட்டால் உடல் நலம் குன்றி நோய்
வாய்ப்படுகின்றனர்

இப்படிப்பட்ட அன்புக்குரிய எல்லா தாத்தா, பாட்டிகளின் மேன்மையையும் உணர்த்துவதற்காகவும், உணர்வதற்காகவும் அனுசரிக்கப்படும் தினம்அக்டோபர் 1: உலக முதியோர்கள் தினம்.


முதியோர்களை பாதுகாப்பதில் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்துபவர்கள். நமது கூட்டுக் குடும்ப கலாசாரத்தைப் பார்த்து அந்நியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படிப்பதற்காக,சுற்றுலாவுக்காக என இந்தியா வரும் அயல்நாட்டவர்கள், இந்தியர்கள் உறவுகளோடு ஒன்றாக வாழ்வதை பார்த்து இங்கே திருமணம் செய்து கொண்டுசெட்டில் ஆவதையும் பார்த்திருக்கிறோம். 

அத்தனை பெருமைக்குறிய இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில்தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையையும் வீட்டில்

 வைத்து பராமரிக்க முடியாமல்ரோட்டுக்கு அனுப்பும் அவலமும் நடக்கிறது. 

அதேபோல், பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம் உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது.

ஏன் இந்த நிலை? 

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெண் வீட்டார் முதலில் போடும் கண்டிஷன்,  'கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணும் மாப்பிள்ளையும்தனிக் குடித்தனம் வைச்சுடணும்' என்பது தான்.பிரச்னையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. 'அத்தனை வருடங்கள் வளர்த்து ஆளாக்கும் பெத்தவங்களை விட்டுட்டு நாங்க மட்டும் புகுந்த வீட்டுக்கு வர்றோம்..


ஏன் நீங்க வந்தா என்ன தப்பு?'என புரியாமல் பேசும் பெண்களை என்னவென்று சொல்வது. 

தனக்கும் அப்பா, அம்மா இருக்கிறார்கள் அவர்களின் நிலை என்ன ஆகும் என நினைத்து பார்ப்பதில்லை. பருவ வயதிலிருந்து ஓட ஆரம்பித்து திருமணம்,குழந்தைகள் வளர்ப்பு, அவர்களது படிப்பு,திருமணம் என அனைத்து கடமைகளும் முடித்துவிட்டு நிம்மதியாக கடைசி காலத்தை பெத்த பிள்ளைகள், அவர்களின் பேரக்குழந்தைகளுடன் கழிக்கலாம் என நினைக்கும் பல முதியவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் பிள்ளைகள் தான் இங்கே இருக்கிறார்கள். 


இன்றைய தலைமுறையினர் தங்கள் குழந்தைக்கு பள்ளிப் போக, மற்ற விஷயங்களை கற்றுத்தர இன்டர்நெட் போதும் என நினைக்கின்றனர்.

தொழில்நுட்பத்தை கற்றுத்தரும் இணையதளம்கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத் தராது. ஆனால், வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.குழந்தைகளை மட்டுமல்ல உங்களையும் வழிநடத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. 

வயதாக ஆக முதியவர்களின் உடல் மற்றும் மனதும் குழந்தைப் பருவம் போன்று ஆகிவிடும். இதையே 'செகண்ட் சைல்ட்வுட்' என்பார் ஷேக்ஸ்பியர் எனவே தான் முதியவர்கள் சககுழந்தைகளுடன் மிக அன்பாக பழகுகின்றனர். 


பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய முதியவர்களை வீட்டில் வைத்து பாதுகாப்பது நமது முக்கிய கடமை. நீங்களும் ஒருநாள் தாத்தா பாட்டி ஆவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


சரி இனி பேருந்தில் நின்று கொண்டு வரும் முதியவர்களுக்காவது இடம் கொடுப்பீர்கள் தானே?

Sunday, December 1, 2013

பெற்றோர்களே!! நீங்க எந்த வகை !!!!

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் குணாதிசயங்களைக் கொண்டு

Thursday, May 31, 2012

போய்ச் சேராத பயணங்கள்

ஒரு நாடு... நாமெல்லாம் அதிகம் கேள்விப்படாத ஏதோவொரு நாடுன்னு வச்சிக்குங்களேன். அந்த நாட்டுல என்ன, "விசேஷம்'னா, அங்க விளையற பயிர்களிலேயே, சுண்டைக்காய் தான் ரொம்பச் பெருசு. வேற எந்த பயிருமே அதைவிட சிறுசு தான். இப்படி இருக்குறப்போ, நம்ம நாட்டுல இருந்து, பெரிய மனுஷர் ஒருத்தர், ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க, அந்த நாட்டுக்குப் போறார். நல்ல அழகான அரங்கம்; பிரமாதமான கூட்டம். நம்ம தலைவர் தான், மிக முக்கிய விருந்தினர். அவருக்கு மாலை, மரியாதையெல்லாம் ஏக தடபுடலா நடக்குது. அந்த நாட்டுக்காரர் ஒருத்தர், நம்ம தலைவரை அறிமுகம் செய்து வைக்க வர்றாரு... "நண்பர்களே... தலைவர் பத்தி சொல்லியே ஆகணும்; இவரை மாதிரி ஒருத்தரைப் பார்க்கறதே ரொம்ப அபூர்வம். இவர் செய்திருக்கிற பணிகள் எல்லாம் சொல்லி மாளாது. சுருக்கமா சொல்லணும்னா, இவர் ஒரு சுண்டைக்காய்' என்றார்.

நம்ம தலைவர் அப்படியே, "ஷாக்' ஆயிட்டாரு. இருக்காதா பின்னே...? அத்தனை பேர் முன்னால, தன்னை அவமானப் படுத்திட்டாங்கன்னு, அவருக்கு எக்கச்சக்க கோபம். மேடையை விட்டு, இறங்கறதுக்கு போயிட்டாரு. மேடையில இருந்தவங்க, கீழ உட்கார்ந்துக்கிட்டு இருந்தவங்கன்னு யாருக்கும் ஒண்ணுமே புரியல. அறிமுகம் பண்ணி வச்ச அந்தப் பேச்சாளர் மீண்டும், "தலைவர் கோவிச்சுக்க கூடாது; நாங்க ஏதாவது தப்பா சொல்லியிருந்தா, தயவு செஞ்சி மன்னிச்சிருங்க. நாங்க ஒத்துக்கிடறோம். நீங்க உண்மையிலேயே ஒரு சுண்டைக்காய் தான்...' என்றார். தலைவர் நேரே மைக்கிட்ட வந்தாரு. "யாரைப் பார்த்து சுண்டைக்காய்ன்னு சொல்றே? இன்னொரு தரம் அப்படி சொன்னே... நடக்கறதே வேற'ன்னு, "வெறித்தனமா' அதாவது, இயல்பா கத்த ஆரம்பிச்சுட்டாரு. என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்குமே? அந்த நாட்டை பொறுத்த மட்டும், சுண்டைக்காய் தான் ரொம்பப் பெரிசு. ஆனா, இங்க இருந்து போனவருக்கு, பூசணிக்காய் தான் பெரிசு. ஏன்னா, இவரு பூசணிக்காயை பார்த்திருக்காரு. அதனால, இவருக்கு சுண்டைக்காய் சின்னதுன்னு தெரிஞ்சிருக்கு. அந்த நாட்டுல இருக்கிறவங்களும், பூசணிக்காய்ன்னு ஒண்ணு இருக்கு; அது சுண்டைக்காயை விடவும் ரொம்பப் பெரிசுங்கிறதை புரிஞ்சுப்பாங்க... எப்போ? அவங்களே பூசணிக்காயை நேரில் பார்க்குறப்போ இல்லையா?

எதுக்கு இந்த கதை இப்போ? நம் இந்தியாவில், குறிப்பா தமிழகத்துல, இதுதான் இன்றைய நிலை. சுண்டைக்காய்களைத் தான் நாம் மிகப் பெரியதாகப் பார்த்து, பிரமித்துக் கொண்டிருக்கிறோம். "பெரியோரை வியத்தலும், இலமே... சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே' என, பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, உலகுக்கெல்லாம் பறை சாற்றியது நம் தமிழ்மொழி. ஆனால், இன்றோ? உயர்ந்த சிந்தனை, உலகளாவிய பார்வை, ஊருக்கு நல்லது என்றால் உலகமே எதிர்த்து நின்ற போதும், உரக்கச் சொல்லும் உளத்திண்மை, உண்மைக்காக உயிரையும் தரத் துணியும் உத்தம குணம் எல்லாம், குயில் பாட்டுல பாரதி சொல்வதைப் போல, "பொய்யாய்க் குனவாய்ப் பழங்கதையாய் போனதுவே...' யார் காரணம்? நாம் தான் காரணம். எது நம்மை இப்படி மாற்றியது. "மூளைச் சோம்பல்!' இது என்ன புதிதாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இந்தச் சொல் வேண்டுமானால், புதிதாக இருக்கலாம். இந்தச் செயல் நம்மில் மிகப் பெரும்பாலோர், மிக விரும்பிச் செய்து வருவது தான். மூளைச் சோம்பல் தான், நம்மிடையே இன்று வெகு வேகமாக பரவி வரும், கொடிய நோய். ஆழமான நூல்களைப் படிப்பதில்லை, அறிவார்த்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில்லை, தீர்க்கமாக யோசித்து, தீர்மானமாகச் செயல்படுவதில்லை என்பதில், நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம். எதையும் மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, நுனிப்புல் மேய்வதையே மேதாவிலாசமாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அனைத்தினும் மேலாய், சுயமானதாய் இருந்தே தீர வேண்டும். இத்தகைய அறிவு நிரம்பப் பெற்ற அறிவார்ந்த, சமுதாயமாகத் தான் நாம் இருந்தோம்; படிப்படியாகத் தான், மாறிப் போனோம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில், பெரும்பாலோர் அதிலும் குறிப்பாய் இளைஞர் சமுதாயம், இத்தகைய மூளைச் சோம்பலுக்கு அடிமை பட்டு போய் விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கேளிக்கைககள் தாம், இளமையின் அடையாளம் என, முதன்மைப்படுத்தப் படுகிறது. போதாக்குறைக்கு அறிவார்த்த விவாதம் என்ற பெயரில், அருதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளுடன் வெட்டி மன்றங்கள், ஆண்கள் மீசை வைத்துக் கொள்வது ஏன் என விவாதங்கள், உணவுப் பண்டம் பெயரில் வரும் தமிழ்ப் பண்டிகையின் பெயர் என்ன என்று, கோடி ரூபாய்க்கு வழிகாட்டும் கடினமான கேள்வி... மொத்தத்தில், இது தான் அறிவின் உச்சம் என்று நாம் ஒப்புக் கொண்டு விட்டோம். அரசியல், அதிலும் உள்ளூர் அரசியல்; சினிமா, அதிலும் தமிழ் சினிமா; மற்றும் கிரிக்கெட் ஆகிய மூன்றும் தாம், நம் பொதுஅறிவின் விஸ்தீரணம். இவை பற்றிய புள்ளி விவரங்கள் தான், நம் ஞானத்தின் நீளம், அகலம், உயரம், ஆழம், பருமன், பலம் எல்லாமே என்று ஆக்கி வைத்திருக்கிறோம். இந்த மூன்றின் கூட்டு அல்லது கலவை தான், இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டின் கோடானு கோடி இளைஞர்கள் மீதும், தொடர்ந்து இடையறாது நடத்தப்பட்டு வரும் இந்த படையெடுப்பு தான், நம் தேசத்தின் வளமான எதிர்காலத்துக்கு எதிரான மிகப்பெரிய சவால். பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என, எல்லாமே மிகக்குறுகிய "சிலபஸ்'க்குள் அடங்கி விடுகின்றன; அதற்குள் இருப்பனவற்றை கரைத்துக் குடித்து விட்டால் போதும் என்பது தான் இன்றைய நிலை. மதிப்பெண் மட்டுமே, ஒருவரின் அறிவுக்கான மதிப்பீடாக இருக்க முடியாது. ஆனால், நாம் அதைத் தான் முடிந்த முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். விளைவு... கல்வி வளர்ந்த அளவுக்கு, அறிவு வளராமல் போயிற்று. கேளிக்கை என்ற பெயரில், கேலிக் கூத்துகள்; பொழுதுபோக்கு என்ற போர்வையில், போதை ஊட்டும் காட்சிகள்; "டைம் பாஸ்' வடிவில், "டைம்-பாம்'கள். இது கூடப் பரவாயில்லை. உப்புப் பெறாத விஷயங்களை எல்லாம் ஊதி பெரிதாக்கி, மிகப்பெரிய சிந்தனையாகப் பேசுவதும், விவாதிப்பதும், நம் அறிவை ஆழப்படுத்துவதாக இல்லை; வெறுமனே, "படுத்துவதாக' மட்டுமே இருக்கிறது.

சென்ற தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு தளத்திலும், "பெரியவர்கள்' இருந்தனர். இன்று? அரைக்காசு பெறாத வறட்டுச் சிந்தனைகளைத் தாம், நகைச்சுவை முலாம் பூசி, அறிவார்த்த தத்துவங்களாக அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். நாமும் ஒவ்வொரு விழா நாளிலும் விடாமல் பார்த்தும், கேட்டும், கைதட்டி ரசித்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற அன்றாட உரையாடல்களை, இன்று அரங்கங்களில், "விவாதங்களாக' பார்த்துக் கொண்டிருக்கிறோம். யாருடைய ஆலோசனைகளும் இன்றி, தனது சொந்த புத்தியிலேயே எதையும் தீர்மானித்துக் கொள்ளக் கூடிய சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் உலகளாவிய பிரச்னைகளைப் போல் நீட்டி முழக்கிப் பேசுபவர்களை, சிந்தனையாளர்களாக நாம் வியந்து பார்க்கிறோம். ஆம்... நிஜத்தில் அறிவு என்ற பெயரில், இங்கே அறியாமை தான் கூறு போட்டு விற்கப்படுகிறது. புரிந்து கொள்வோம், மிகச் சிறியதை மிகப் பெரியதாக எண்ணி மயங்கிக் கிடந்தால், பின் உண்மையில் மிகப் பெரியது நம் கண்ணுக்கு என்றைக்குமே தெரியாமல் போய் விடும். மிகச் சாதாரணமானதை, விளம்பர வெளிச்சம் மிகப்பெரிய சாதனையாக்கிக் காட்டுகிறது. இந்த உண்மையை இளைஞர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் ஒழிய, பழையபடி ஓர் அறிவார்ந்த சமுகமாக நாம் மலர முடியாது. நாம் பூசணிகளை அடையாளம் கண்டு, அவர்களின் பின் செல்லப் போகிறோமா அல்லது சுண்டைக்காய்களையே பெரிதாய் எண்ணி, சுகம் காணப் போகிறோமா?

Wednesday, May 2, 2012

என்னை உங்களுக்கு தெரிகிறதா?சொல்வது நீங்களாக கூட இருக்கலாம்..... வாழ்கையின் விளிம்பில் இருக்கும்போது......

என்னை உங்களுக்கு தெரிகிறதா? நிச்சயம் நன்றாக தெரிந்திருக்கும் மறந்து போயிருப்பிர்கள் நீங்கள் தினசரி மனதில் நினைத்து பார்க்கும் அளவுக்கு நான் பெரியமனுஷன் அல்ல ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் என்னை சந்திக்காமல் உங்களால் இருக்க முடியாது போதும் பீடிகை நீங்கள் யார் என்று சொல்லலாமே என்று நீங்கள் கேட்பது என் மந்தமான செவியில் லேசாக விழுகிறது என் கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு நான் உங்களுக்கு மிகவும் தெரிந்தவன் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

நான் சாம்பசிவம் என்னை பருத்தி வியாபாரி சாம்பசிவம் என்றால் சொடுக்கு போடும் நேரத்தில் அப்போது எல்லோரும் அடடே அவரா எனக்கு நன்றாக தெரியுமே வெள்ளை வேட்டி சட்டையும் வாய்நிறைய வெற்றிலையும் கக்கத்தில் பழைய மான்மார்க் குடையும் இடிக்கி கொண்டு வருவாரே அவர் தானே என்று எல்லோரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள் அந்த அளவிற்கு என் ஏரியாவில் எனக்கு பரிச்சயம் ஜாஸ்தி தோற்றத்தில் மட்டுமல்ல வியாபாரத்திலும் நேர்மையை கடைபிடித்ததனால் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட என்னிடம் மரியாதை காட்டுவார்கள் நேற்று நூறு ரூபாய்க்கு விலைபேசி பருத்திக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் என்றால் இன்று சரக்கை கொடுக்கும் போது இருநூறு ரூபாய்க்கு விலையேறினாலும் நேற்று பேசிய விலையை மாற்ற மாட்டேன்.

நேர்மையாக இருந்தாலும் நான் ஒன்றும் லட்ச கணக்கில் போட்டு புரட்டும் பெரிய வியாபாரி இல்லை விவாசாயி நிலத்தில் போய் சரக்குக்கு விலைபேசி வாங்கி மார்கட் கமிட்டியில் கொண்டு விற்று அதன் பிறகு சரக்குக்கான காசை கொடுத்துவிடுவேன் ஒருவகையில் இது தரகு வியாபாரம் என்றாலும் என்னமோ முதல்போட்டு வியாபாரம் செய்பவனை போல் நினைத்து கொள்வேன் மற்றவர்களும் அப்படி தான் என்னை நினைப்பார்கள் கிடைக்கும் வருவாயில் சிறுக சிறுக சேர்த்து சொந்தமாக வீடு நிலம் என்று ஓரளவு சம்பாதித்தும் வைத்திருந்தேன் எனக்கு இரண்டு பையனும் ஒரு பெண்ணும் என் மனைவி மிகவும் நல்லவள் அவளை மட்டும் நான் மனைவியாக பெறவில்லை என்றால் வருகிற சொற்ப வருவாய்க்கு நடுத்தெருவில் நின்றிருப்பேன் சிக்கனம் என்றால் அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். 

ஒரு புடவை கிழிந்து போய்விட்டால் அதை உடனடியாக தூக்கி தூர வீசி விட மாட்டாள் என் மரகதம் கிழிந்த புடவையை படுக்கையாக விரிப்பாள் அதற்கும் உதாவாமல் போகும் போது கிழித்து தலையணை உரையாக பயன்படுத்துவாள் அப்போதும் கிழிந்து விட்டால் தலையணைக்குள் பஞ்சாக அடைத்து விடுவாள் அதற்காக அவளை கருமி என்றோ கஞ்சத்தனம் மிகுந்தவள் என்றோ சொல்ல முடியாது. அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகள் எதாவது உதவி என்று வந்து கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டாள் தன்னால் முடிந்ததை செய்வாள் பொருளாக கொடுக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுக்காக ஓடியாடி ஒத்தாசை புரிவாள் அவளை யாருமே ஏன் விரோதி கூட குறை சொல்ல மாட்டார்கள்.

புருசனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு மரகதத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தாயால் கூட தரமுடியாத அரவணைப்பை கணவனுக்கு தருவாள் என் முகம் மாறுவதை வைத்தே என் உடம்பிற்கு என்ன? மனதிற்கு என்ன? என்பதை ஒரு நொடியில் கணித்து விடுவாள். ஆறுதலும் தைரியமும் அவளிடமிருந்து பெற்று விட்டால் காலகாலமாக வருகின்ற துயரங்கள் எல்லாம் ஒரு துரும்பை போல் தெரியும் அவ்வளவு தெளிவானவள் மதிநுட்பம் மிகுந்தவள். குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுவதில் இருந்து பாடம் சொல்லி கொடுப்பதுவரையில் அவள் கடைபிடிக்கும் நேர்த்தி பெரிய பேராசிரியருக்கு கூட வராது. 

அடுத்த மாசி மாதம் பிறந்தால் எனக்கு எண்பத்திமூன்று வயது பூர்த்தியாகிறது. எழுபது வயது வரையில் நான் ஒரு இடத்தில் அமர்ந்தது கிடையாது பருத்தி எங்கெல்லாம் இருக்கிறது என்று தகவல் வருமோ அங்கெல்லாம் சைக்கிளை எடுத்து கொண்டு அலைவேன் மழைவராத காலம் பருத்தி அதிகம் விளையாத காலம் என்று வந்தால் கூட வேறு எதாவது தொழிலை எடுத்து செய்வேனே தவிர வீட்டில் சும்மா இருக்க எனக்கு முடியாது. ஐயோ போதும் எனக்கு வயதாகி விட்டது என்று உட்கார்ந்திருந்தால் பெண்ணுக்கு ஐம்பது சவரன் போட்டு கல்யாணம் நடத்தி வைத்திருக்க முடியுமா? மூத்தவனை இன்ஜினியராகவும் இளையவனை பேராசிரியராகவும் படிக்க வைத்து வேலைவாங்கி கொடுத்திருக்க முடியுமா? அவர்களுக்கு அப்பன் சம்பாதித்த சொத்து என்று சிறிதளவாவது நிலத்தை வைத்திருக்க முடியுமா? எல்லாம் எனது நிற்காத ஓட்டத்தால் கிடைத்தது தான்.

எழுபது வயது வரை எனக்கு சலிப்பே தட்டியது கிடையாது. இன்னும் சொல்ல போனால் எனக்கு எழுபது வயதானது கூட தெரியாது. எதோ நேற்று தான் மீசை முளைத்தவன் போல் நினைத்து கொண்டிருந்தேன். ஒருநாள் அதிகாலை உறங்கி கொண்டிருந்த மரகதத்தை தட்டி எழுப்பினேன் என் குரல் கேட்டாலே எழுந்துகொள்ளும் மரகதம் அன்று நான் கதறி புலம்பிய போது கூட எழவில்லை அவள் கழுத்து துவண்டு சாய்ந்த பிறகு தான் ஐயோ எனது அருமை செல்வம் உறக்கத்திலேயே போய்விட்டாளே என்று உணர்ந்து அழுதேன். அவள் மறைவுக்கு பிறகு தான் என் வயதும் என் தளர்ச்சியும் எனக்கு புரிந்தது அதுவரை பத்து மையில் என்றாலும் சலிக்காமல் சைக்கிள் மிதித்த என் கால்கள் துவண்டு போக ஆரம்பித்தது கண்மங்கியது தலைகிறுகிறுத்தது. மூச்சிறைதத்து. சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆச்சி பதிமூன்று வருடம் ஓடி போயாச்சி நிறையப்பேர் என்னை மறந்தும் போயிருப்பார்கள் இப்படி ஒரு மனிதன் இருந்தானே நாம் பார்க்கும் நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்கும் நடமாடினானே அவனை தீடிர் என்று காணவில்லையே எங்கே போயிருப்பான் என்னவாயிருப்பான் என்று யாரும் யோசித்ததாக தெரியவில்லை வெளியில் உள்ளவர்களை விட்டுவிடுவோம் நான் பாடுபட்டு வளர்த்தேனே என் பிள்ளைகள் அவர்கள் கூட என்னை நினைத்து பார்க்கவில்லையே இதுதான் தலையெழுத்து என்பதோ? இதை தான் உலகத்தின் நடைமுறை என்று எல்லோரும் சொல்கிறார்களோ? 

நினைத்து பார்க்கவே முடியவில்லை கண்ணுக்குள் சூன்யமான ஒரு உலகம் தான் தெரிகிறது. அந்த உலகத்தில் நான் மட்டுமே தன்னந்தனியாளாக நிற்கிறேன். தாகம் எடுக்கிறது, நாவு வரள்கிறது யாராவது ஒரு துளி தண்ணிர் தரமாட்டார்களா? என்று நெஞ்சம் ஏங்குகிறது. அதோ தூரத்தில் புகைவடிவாக என் மரகதம் தெரிகிறாள் அவள் கையில் தங்க கூஜா இருக்கிறது. அதன் வெளிச்சம் என் கண்ணை பறிக்கிறது அதிலிருந்து அமிர்த தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. நான் வாரி வாரி குடிக்கிறேன். தாகம் அடங்கவில்லை கானல் நீரை எத்தனை முறை குடித்தாலும் தாகம் அடங்குமா? இது தான் இந்த கனவு தான் என் கூட இப்போது துணையாக இருப்பது.

மரகதம் கூட்டி பெருக்கிய வாசல்படியை பார்க்கிறேன். சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு அழகு படுத்திய அடுப்பங்கரையை பார்க்கிறேன். அவள் துணி துவைக்கும் கிணற்றடி கல், தேங்காய் அரைக்கும் அம்மிக்கல் பருப்பு திரிக்கும் எந்திரக்கல் எல்லாமே என்னை போலவே அனாதைகளாக கிடக்கிறது. மீண்டும் மரகதம் வருவாளா? தனது மென்மையான விரல்களால் தன்னை தொடுவாளா? என்று உயிரற்ற அந்த பொருட்களும் ஏங்குகின்றன. உயிரை பிடித்து கொண்டு படுத்து கிடக்கும் நானும் ஏங்குகிறேன். கல்லுக்கு தனது உணர்வுகளை பேசிவிட முடியாது. என்னால் முடியும் ஆனால் அதை கேட்பதற்கு தான் யாருமில்லை.

மூத்த மகன் சொல்லுகின்றான் அப்பா உங்களுக்கு வயசாகி விட்டது கண்ணும் காதும் முன்னே போல் இல்லை இந்த மாதிரி நிலையில் நீங்கள் என்னோடு சென்னையில் இருப்பது ரொம்ப கஷ்டம் நானும் வேலைக்கு போய்விடுவேன் உங்கள் மருமகளும் வேலைக்கு போய்விடுவாள் வீட்டில் தனியாக இருக்கும் உங்களை கவனிப்பது மிகவும் கடினம் இங்கு கிராமத்தில் உங்களை தெரியாதவர்கள் யாருமில்லை ஆத்திரம் அவசரம் என்றால் துணைக்கு வர நிறையப்பேர் உண்டு இங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தம்பி வீட்டில் வேண்டுமானால் சில நாட்கள் போய் இருங்கள் அவனுக்கும் ஆறுதலாக இருக்கும் என்று ஆக மொத்தத்தில் மூத்தவன் என்னை கைகழுவியதை வேறு விதத்தில் சொல்லி விட்டான்.

இளையவன் மட்டுமென்ன அண்ணன் காட்டிய வழியை மாற்றியா நடக்க போகிறான். அப்பா நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்காதீங்க உங்கள் மருமகளை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கொண்டே இருப்பாள் யாரோடும் ஒத்து போகும் சுபாவம் அவளுக்கில்லை என் தலையெழுத்து அவ்வளவு தான் என்று அவளோடு குடும்பம் நடத்துகிறேன். நீங்களும் அங்கு வந்து உட்கார்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம் வீடே போர்களமாகி விடும் என் நிம்மதி பறிபோய்விடும் நன்றாக யோசித்து எதையும் செய்யுங்கள் என்று நேரிடையாகவே பேசிவிட்டான் என் மகள் மட்டும் என்ன செய்வாள் புருசனுக்கு கட்டுப்பட்டவள் என் அப்பாவை வீட்டில் வைத்து கொள்ளலாம் என்று சொல்ல அவளால் தான் முடியுமா? மருமகன் தான் ஏற்றுகொள்வாரா? 

உறவுகள் சொந்த பந்தங்கள் அனைத்துமே சுமைகளை தூக்க தயாராக இல்லை நானும் ஒரு சுமைதான் என்று அப்போது தான் உணர்ந்துகொண்டேன் எனக்கு இளமை இருக்கும் போது இந்த சிந்தனை வரவில்லையே பிள்ளைகளை சுமையாக கருதியிருந்தேன் என்றால் இன்று அவர்கள் சிறகடித்து பறக்க முடியுமா? தனக்கென்று ஒரு கூடு குஞ்சிகள் என்று வாழமுடியுமா? இந்த நியாயத்தை யார் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு தகப்பன் பற்றிய எண்ணம் தீடிர் என்று வந்துவிடுகிறது. என் பிள்ளைகள் இரண்டு பேருமே ஒரு நாள் வந்தார்கள் அப்பா நாங்கள் சொந்த வீடு வாங்க போகிறோம் கையில் பணமில்லை வேறு காரியங்களுக்காக அலுவலகத்தில் கடன்வாங்கி விட்டதனால் லோனும் எடுக்க முடியாது நீங்கள் நமது சொத்தை வித்து பணம் கொடுங்கள் நீங்கள் பயிர் பண்ண முடியாமல் நிலம் வீணாகதானே இருக்கிறது. என்றார்கள் பெற்ற பிள்ளைகள் கண்கலங்கி நிற்கும் போது பெற்ற வயிறு கலங்கி விடுகிறதே

தம்பி நிலத்தை குத்தகைக்கு கொடுத்து தான் என் செலவுகளை பார்த்து கொள்ளுகிறேன் அதையும் விற்று விட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டேன் நாங்கள் இரண்டு பேர் இருக்கும் போது உங்களுக்கென்ன கஷ்டம் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்கள் நம்பினேன் ரத்தம் சொட்ட சொட்ட சம்பாதித்த நிலத்தை விற்று பிள்ளைகளுக்கு கொடுத்தேன் மகிழ்ச்சியோடு வாங்கி போனார்கள் போனவர்கள் போனவர்கள் தான் இரண்டு மாதம் வரையில் ஆளுக்கு ஆயிரம் என்று அனுப்பியவர்கள் திருப்பி அதை பாதியாக குறைத்து இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆக்கி விட்டார்கள் என் பிள்ளைகளின் கஷ்டம் எனக்கு புரிகிறது பாழும் வயிறுக்கு புரியவில்லையே அது இரண்டு நாளைக்கு ஒரு முறைமட்டும் பசித்தால் போதுமென்று இருப்பதில்லையே தினசரி பசி எடுக்கிறதே

இப்போது என்னை உங்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது அல்லாவா? உங்கள் வீட்டு பக்கத்திலோ எதிரிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட சாய்வு நாற்காலியில் என்னை போல மதிப்பில்லாத ஜீவன்கள் படுத்து கிடக்கலாம் அவர்களில் நானும் ஒருவன் அதனால் என்னை உங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். என்னை தெரிகிறதோ இல்லையோ இப்போது நாம் சொல்லுவது உங்களுக்கு புரிந்தால் நான்றாக இருக்கும். வயது ஏறி முதுமை வருவது என்பது எனக்குமட்டும் நடப்பது அல்ல பளபள கன்னமும் ஒளிபொருந்திய கண்ணும் ஒரு நாள் முதுமையினால் கோடுகளுக்குள் மறைந்து போகும். கைகள் நடுங்கி வார்த்தை குளறி தடுமாறவேண்டிய நிலை உங்களுக்கும் வரும் அப்போது என்னை போல் புலம்புனீர்கள் என்றால் கேட்பதற்கு பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் ஒருவாய் சோறும் ஒருமுழ துணியும் இல்லாமல் நீங்கள் செத்து போனபிறகு வருடா வருடம் உங்கள் திவசத்திற்கு பிள்ளைகள் அன்னதானம் செய்வார்கள் ஏனென்றால் அது அவர்களுக்கு விளம்பரம்.

Saturday, April 28, 2012

பண்பாடு---வாழ்க்கை ஒழுக்கம்


ல நூற்றாண்டுகளைக் கண்ட மரம், ஒரு நாள் ஓங்கியடித்த புயலில் வேரோடு மண்ணில் விழுந்து கிடந்தது. வன்மை முறுக்கேறிய இத்தனை பெரிய மரம் எப்படி ஒரு நாள் புயலை எதிர்த்து நிற்க முடியாமல் விழுந்து விட்டது என்கிற விவரம் புரியாமல் ஊர் மக்கள் ஒன்றுகூடி வியந்து நின்றனர். அப்போது அங்கே ஒரு துறவி வந்து சேர்ந்தார். ''இவ்வளவு வலிமை மிக்க மரம் ஒரு நாள் புயலில் எப்படி விழுந்திருக்க முடியும்?'' என்று கூடி நின்ற மக்களில் ஒருவன் துறவியைக் கேட்டான்.
மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் துறவி உற்றுப் பார்த்தார். வெளித் தோற்றத்தில் வலுவாகத் தோன்றிய மரத்தின் உள்ளே ஒரு பெரிய பொந்து வீழ்ந்திருந்ததைக் கண்டவர், ''நண்பர்களே! இந்த மரத்தின் வீழ்ச்சி ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. பல நாட்கள் உள்ளே நிகழ்ந்த உள் அழிவுதான், இன்று இந்த மரம் புயலை எதிர்கொள்ள முடியாமல் விழுந்து கிடப்பதற்குக் காரணம். எந்த ஒன்றுமே ஒரு நாள் நிகழ்வில் வீழ்வதில்லை என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்'' என்றார்.

பண்பாடு என்பது மின்னலைப் போல திடீரென்று தோன்றி, புயலைப் போல ஒரு நாளில் மறைந்து விடுவதில்லை. பண்பாடு என்பது ஓர் இனம் காலம் காலமாகப் பழகி வரும் வாழ்க்கை ஒழுக்கம். 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகை கூறும். 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வாழும் மண்ணின் மரபுகள் பண்பாடாக மலரும். காலப்போக்கில் வாழ்க்கையில் படிந்து கிடக்கும் அசுத்தங்கள் அகன்று மனிதனின் சிந்தனை செழுமையுறும்போது பண்பாடு சிறக்கிறது.

இந்தியப் பண்பாடு ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது. அன்பு, இரக்கம், கருணை, அகிம்சை, எளிமை, விருந்தோம்பல், மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டுதான் இந்தியப் பண்பாடு உருவானது. அடுத்தவர் பொருளின் மீது ஆசையற்ற வாழ்க்கைதான் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம். தர்மத்தின் வழி நடப்பதுதான் அவனவன் சுதர்மமாகப் போற்றப்பட்டது.


விக்டோரியா பேரரசிக்கு ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ்முல்லர் எழுதிய கடிதத்தில் 'அறம் சார்ந்த வாழ்க்கை முறையை அறிய உலகம் இந்தியாவின் பக்கம் முகம் திருப்ப வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

இன்று அந்த சுதர்மம் உலகமயமாக்கல், வணிகக் கலாசாரத்தில் பொய்யாக, கனவாகப் போய்விட்டது.


மாறாத சமய நம்பிக்கைகளும் மண்ணின் மரபார்ந்த வாழ்க்கை நெறிகளும் கூட்டுக் குடும்பத்தின் கட்டுமானம் குலைந்து விடாமல் நீண்ட காலம் காப்பாற்றி வந்தன. அவற்றையும் மீறி மேலை நாட்டுக் கலாசாரக் காற்று மெல்ல மெல்ல கிராமங்களின் கூட்டுக் குடும்பங்களில் வீசத் தொடங்கியது.

கண்டதையும் வாங்கிக் குவிக்கிற 'நுகர்பொருள் நாகரிகம்' கிராமத்து மனிதர்களையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. கல்வி வளர்ச்சி, வேலை தேடி நகர்ப்புறங்களை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. 


விளைவு.. 'நான் நன்றாக இருந்தால் போதும்' என்று நினைக்கிற 'தனிநபர் சுகபோகம் மட்டுமே வாழ்க்கையின் ஒரே நோக்கம்' என்று மனித மனோபாவம் மாறியது. 

முதியோரும் பெற்றோரும் சுமக்க வேண்டாத சுமைகளாயினர். பொருளாதார சக்திகள் குடும்ப உறவுகளைக் கூறு போட்டன. கூட்டுக் குடும்பக் கட்டடம் தகர்ந்து தரைமட்டமானது. தெரு வழியே வருகிற அந்நிய மனிதர்கள் உட்கார்ந்து செல்வதற்காகவே கட்டப்பட்ட திண்ணை வைத்த வீடுகள் காணாமல் போய், 'நான்.. எனது..' என்ற அளவில் எல்லாமும் சுருங்கிப் போனது. வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வோர் அடியும் வணிகமயமானது.

குளிர்ந்த நீரில் விறைத்துக் கிடக்கும் ஆமையை சமைத்து உண்பவர்கள், முதலில் அதை உலையில் போடுவார்கள். உலை நீரின் வெப்பம் தொடக்கத்தில் வெதுவெதுப்பாக இருக்கும். அந்த இதமான வெப்பம் ஆமைக்கு இன்பமாக இருக்கும். அந்த சுகம் தரும் போதையில் ஆமை கொதிகலனில் நின்றும் ஓடியும் ஆனந்தக் கூத்தாடும். வெப்பம் கூடியதும் ஆமை அழியும். முதலில் இன்பம் தருவதே பின்பு துன்பமாகும். தேவையும் ஆசையும் அதிகரித்தால் அமைதியும் நிம்மதியும் பறிபோகும். 


காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு அகப் பகைகளை அழிக்க சிந்தனை, சொல், செயலைத் தூய்மை செய்ய வேண்டும் என்பதுதான் நம் பண்பாட்டின் அடித்தளம். பழையன கழிந்து புதியன புகும் ஆசைகளைச் சீரமைத்து, சினம் தவிர்த்து, கவலை ஒழித்து நாம் வாழ முற்படுவோம்.