முக்கிய செய்திகள்

Saturday, June 9, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -1

இக்கட்டுரை அயல்நாடுகளில் வசிப்போரும், அயல் நாடுகளில் தத்தம் குடும்பத்தாரை பிரிந்து வாழ்ந்து வருவோரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.. பணம் சம்பாதிப்பது என்ற அத்தியாவசிய தேவை எதையெல்லாம் இழக்க வைக்கிறது என்பதை பற்றிய ஒரு பதிவு..  துபாயை பற்றி சொல்லாத விஷயங்களே இல்லையெனும் அளவிற்கு இக்கட்டுரையை படித்தால் துபாயினை பற்றிய நம் மாய எண்ணங்கள் விலகும்.. சமிபத்தில் படித்த ஒரு நல்ல கட்டுரை எனலாம். படிக்கையில் பல இடங்களில் மனம் கனத்தது.

                    அயல்நாட்டு மோகம் என்பது நமக்கு விதிக்கப்பட்ட சாபமா, வரமா என்று இன்று வரை நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று இன்னும் நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.. பிழைப்புக்காக நம்மவர்கள் பல நாடுகளுக்கும் செல்வதும் இன்று எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கும் வேளையில் நம்மிடம் அதிக எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் துபாயின் பகட்டையும், இருட்டையும் நகைச்சுவையுடன் ஒரு கட்டுரையாய் தந்திருக்கிறார்கள், 

துபாய்.
அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-burj-al-arab.jpg


இது என்ன ஒரு ஊரின் பெயரா, இல்லை ஒரு நாட்டின் பெயரா. ஒரு வட்டாரத்தின் பெயரா என்ற தெளிவு இல்லாது, பெயர் சொன்னதுமே மனதில் மரியாதை. கொப்பளிக்கும் மகிழ்ச்சி. ஒரு சொர்க்க புரி கண்ணில் விரியும்.


ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ஒரு ஊர் தான் துபாய் என்றால் நிறைய பேருக்கு தெரியாது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்களுக்கு, குவைத், சவுதி என்ற மத்திய கிழக்கு நாடுகள் எல்லாமே கூட துபாய் தான்.


சரி, இது என்ன புது பெயர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

அபுதாபி (தலைநகரம்) துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா (நம்மூர் மட்டன் கைமா அல்ல), புஜைரா, அல் அய்ன் என்று நம் தமிழ் வாயில் நுழையாத அரபி பெயர்களை கொண்ட 7 குட்டி ஊர்கள் சேர்ந்த நாடே அமீரகம் என்றும் அழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.


இந்திய தேசத்திற்கு மட்டும் அல்லாது வெள்ளைக்காரனுக்கும் இந்த ஊர் பிடிக்கும். இந்த ஊரை பற்றி மரியாதையான ஒரு எண்ணம் உண்டு. வெள்ளைக்காரன் என்ற ஒரு சொல்லிலேயே, ஐரோப்பிய, சீன, மங்கோலியா வழிவகைகள் அனைத்தையும் அடக்கி விட்டேன்.


நம் தங்க தமிழ்நாட்டிலே "துபாய்" என்ற பெயருக்கும், இங்கிருந்து வாங்கிப்போகும் தங்கத்திற்கும் கொஞ்சம் (ரொம்பவே) மவுசு உண்டு. இதுவே எல்லை தாண்டி சேர நாடு (கேரளா) சென்றால் இன்னும் மவுசு, உபரியாய் பவுசு, சொகுசு எல்லாம் கிடைக்கும். சற்று மேலே நகர்ந்து வடநாடு சென்றால்... சாரி அவ்வளவு இல்லை.


துபாய் பற்றி நமக்கு தெரிந்தது, இந்த துபாய் சென்று திரும்பி வந்த சில "தலைகள்" சொன்னது. அவர்கள் சொன்ன செய்தி கேட்டு, நாம் கூட பல சமயங்களில் அதிசயித்து இருக்கிறோம்.


போய் கொண்டே இருப்போம். பெட்ரோல் காலி ஆச்சுன்னா ரொம்ப கவலை பட மாட்டோம். சரின்னு சொல்லி வண்டிய நிறுத்திவிட்டு ஒரு தண்ணிர் பாட்டில எடுத்துட்டு, ரோட்டோரமா போய், மண்ணை தோண்டி பெட்ரோல் எடுத்து ஊத்தி வண்டியை ஓட்டிடுவோம்.


இதை அட்டகாசமாக நாம் அனைவரும் நம்பும்படி சொன்ன அதிபுத்திசாலி என்ற "அதிமேதாவி அங்குராசு" போன்றவர்களை உங்களுக்கு நிச்சயம் வேறு பெயரில் வேறு ஒரு நிகழ்வில் பரிச்சயம் இருக்கும்.


இன்னொரு விஷயம், இங்கு டீக்கடைகளில் எல்லாம் ஒட்டகப்பாலிலே தான், டீயே போடுவார்கள் (இது வடிவேலு, ஒரு படத்தில் சொன்ன டகால்டி), ஆனால், உண்மையில் பல அங்காடிகளிலே ஒட்டகப்பாலை பார்த்து இருக்கிறோம், அவ்வளவுதான், பருகிய அனுபவம் இல்லை.


எங்க ஊரு மச்சான் சொன்ன கதை இது. "இங்கே சாப்பாடு எல்லாம் பைப்புல வரும். ஒரு பைப்பு தொறந்தா பிரியாணி வரும், இன்னொரு பைப்பு தொறந்தா சாம்பார் சாதம் வரும்" என்று என் பொறாமை தீயை தூண்டியதும் அல்லாமல், "மட்டன் பீசு சிக்கிக்காது" என்ற போது "அது பெரிய பைப்பு" என்ற டகால்டி எல்லாம் நமக்கு அறிமுகம்.


இறை அருளால் துபாய் மண்ணை நேரில் பார்த்து, அங்கேயே வருடங்களாய் வாழும் பாக்கியம் வாய்த்ததால், பெட்ரோல், பிரியாணி தவிர வேறு பல விஷயங்களை பற்றியும் நேரடி தகவல் தர ஆசையும், அக்கறையும் உண்டு.


இத்தகைய தாக்கம் ஏன் வந்தது.
உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பதிக்கும். வெப்பக்காத்து காதை உரச, சாதிக்கும் மற்றும் பாதிக்கும் சில பல, பல, சில விடயங்களை இங்கு பட்டியல் இடுகிறேன்.

***************

முதலில், சொல்ல வேண்டுமானால், யார் யார் எல்லாம் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வருகிறார்கள்? எப்படிப்பட்ட வேலைக்கு வருகின்றார்கள்? இங்கு தற்போது நிலவும் சூழல் என்ன? தோள் தட்டி, புஜ பராக்கிரமம் காட்டி புறப்பட்ட அனைவரும், வெற்றி வீரர்களாக தாயகம் திரும்புகிறார்களா? மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்குள்ள நிறை மற்றும் குறை என்னென்ன என்ற பல விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லாம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள். கட்டுமானம் சம்பந்தப்பட்ட படிப்பாளிகள், மற்றும் கடின உழைப்புக்கு தயாரான உழைப்பாளிகள் துபாய் (யு.ஏ.ஈ. என்ற நாட்டின் ஒரு நகரம்), கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு படை எடுக்கிறார்கள்.

(தொடரும் ............. )

2 comments:

 1. Nice intro ....

  I am going to read your blog regularly !!
  Keep writing !!

  Arun Prasath J

  ReplyDelete
 2. ஆரம்பமே படிக்க சுவாரசியமா இருக்குங்க‌ !

  எழுத்துக்களின் வெள்ளை நிற பின்புலம் படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

  ReplyDelete