முக்கிய செய்திகள்

Monday, March 19, 2012

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி?

மனைவியிடம் நல்லபேர் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லீங்கோ! அதுக்கு அசாத்தியமான திறமை + பொறுமை இதெல்லாம் அவசியம்! ”ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது மாதிரி” அப்டீன்னு நீங்க கருதினால், இந்த ரிஸ்க்கை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்! இல்லை இது கஷ்டம்னு தோணிச்சுதுன்னா, “ எனக்கு நல்லபேரே வாணாம்! ஆளைவிடுடா சாமி” அப்டீன்னு பேசாம கம்முன்னு இருக்கலாம்!
ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)
01. உங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்க முதலில் என்ன செய்யணும் தெரியுமா? - கல்யாணம் பண்ணணும்! நீங்க கல்யாணம் பண்ணினாத்தான் உங்களுக்கு ஒரு மனைவி கெடைப்பாங்க! அப்புறம் தான் நீங்கள் நல்ல பேர் வாங்குவது பற்றி சிந்திக்க முடியும்! :-)
02. கல்யாணம் பண்ணின புதுசுல, உங்களுக்கு கண்டிப்பா நல்ல பேர் இருக்கும்! வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும்! லேசா தலைவலிக்குதுன்னு சொன்னாலே, “ அச்சச்சோ என்னங்க இப்புடி அசால்டா சொல்றீங்க? இந்தாங்க மாத்திரை எடுத்துக்கோங்க! இந்த காப்பிய குடியுங்க! அதெல்லாம் சரியாகிடும்” அப்டீன்னு தேன் சொட்டும் வார்த்தைகள் வந்து விழுகும்! ஹி ஹி ஹி ஹி ஹி !!
அன்பான ஆண்வர்க்கமே , நாம ஏமாந்து போகும் முக்கிய இடமே இதுதான்! இந்தக் கவனிப்பும் , அன்பும் உங்களுக்கும் காலம் முழுக்க நீடிக்கும் அப்டீன்னு கனவு காணாதீங்க! இந்த நிலைமை சட்டுன்னு மாறும்! “ நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா?” அப்டீங்கற கேள்வி, தூரத்துல லாரில வந்துகிட்டு இருக்கு அப்டீங்கறத மறக்க வாணாம்! :-))))))))))))
03. அப்புறம் முக்கிய விஷயம்! - உங்க மனைவிக்கு எது புடிக்கும்? எது புடிக்காது அப்டீன்னு நீங்க அறிஞ்சு வைச்சிருக்கணும்கற அவசியமே கெடையாதுங்க! ஆனா, எதிர்வீடு, பக்கத்து வீடு, பின் வீடு இந்த மூன்று வீடுகளையும் அடிக்கடி கவனிச்சுக்கணும்! எதிர்த்தவீட்டுல புதுஷா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கியிருக்காய்ங்களா? அதை நீங்க பார்த்துட்டீங்களா? உடனே நீங்க வாலண்டரியா உங்க சம்சாரம்கிட்ட போயி, “ தோ பாரு நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நம்மளும் ஸ்கூட்டி பெப் வாங்கிடலாம்” அப்டீன்னு அட்வாஸா சொல்லிடணும்! நல்ல பேர் கண்டிப்பா கெடைக்கும்!
“ ஏங்க நா உங்ககிட்ட பைக் வாங்கிக் குடுங்கன்னு கேட்கவே இல்லையே?” அப்டீன்னு அவ கேட்கத்தான் செய்வா! பட் நீங்க அதுக்கெல்லாம் ஏமாந்து போகக்கூடாது!
” இல்ல மா உனக்கும் ஒரு பைக் இருந்தா சௌரியமா இருக்கும்ல” அப்டீன்னுதான் சொல்லணுமே தவிர,
“ சரி சரி உனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடலாம்” அப்டீன்னு முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு சொன்னீங்க, அவ்ளோதான்! ஏன்னா அவங்க ஒரு அஸ்திரம் வைச்சிருப்பாங்க
“ சரி நீங்க இவ்ளோதூரம் கெஞ்சினதுக்கு அப்புறமும் பைக் வாங்கலைன்னா உங்க மனசு சங்கடப்படும்” அப்டீன்னு அவங்க சொல்லுவாங்க!
“ என்னது நா கெஞ்சினேனா? “ அப்டீன்னு உங்களுக்கு கேட்கத் தோணும்! ஆனா அதை ஓபனால்லாம் கேட்கப்படாது! வேணும்னா மனசுக்குள்ள மட்டும் கேளுங்கோ! :-))))))))
04. இந்த பைக் தத்துவத்தை நீங்க சேலை, நகைகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏனைய பொருட்களிலும் கடைப்பிடிக்கணும்! மறுபடியும் சொல்றேன்! உங்களுக்கு மிகப்பெரிய வில்லன்களே இந்த பக்கத்து வீட்டுக்காரங்கதான்! அவங்க வீடு பாசி புடிச்சுப் போயி, மங்கலா இருந்தா நீங்க உங்கவீட்டுல நிம்மதியா இருக்கலாம்! மாறாக அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்குறாங்கன்னு வைச்சுக்கோங்க! அப்புறம் என்ன அடுத்த 15 நாளில உங்க வீட்டுக்கும் பெயிண்ட் அடிக்கணும்! இல்லைன்னா, உங்க வீட்டு சுவர் மங்கிப்போகுதோ இல்லையோ, உங்க நல்ல பேர் மங்கிப் போய்டும் சொல்லிட்டன்!

05. உங்க மனைவி தன்னோட உறவுக்காரங்க பத்தி, உங்கிட்ட குறை நிறைகள் சொன்னா, அதெல்லாத்தையும் கேட்டுட்டு கம்முன்னு கெடக்கணும்! மாறாக, வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
“ ஆமா, இவ்ளோவிஷயம் நடந்திருக்காக? ஏன் உன்னோட சித்தப்பாக்காரன் இப்புடி இருக்கான்?” அப்டீன்னு கேட்டீங்க! அவ்ளோதான்! உங்க நல்ல பேரு டேமேஜ் ஆகிடும்!
“ எதுக்கு இப்ப அவர தப்பா பேசுறிங்க? என்ன இருந்தாலும் அவரு குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறார் தெரியுமா?” அப்டீன்னு பிட்ட மாத்திடுவாங்க! - அதாக்கப்பட்டது, அவங்களோட உறவுக்காரங்க பத்தி அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க! ஆனா நீங்க ஒரு வார்த்தைகூட சொல்லிடக் கூடாது! இதுதான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு! ஓகே வா?
06. ஹி ஹி ஹி ஹி ஹி இதே தத்துவத்தை நீங்களும் கடைப்பிடிக்கலாம்னு நெனைக்காதீங்க! கண்டிப்பா ஏமாந்துடுவீங்க! இப்போ உங்க சைடு உறவினர்களோட குறை நிறைகள் பத்தி, உங்க மனைவிகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க!
“ ஆமா உங்க சொந்தக்காரங்கல்ல! அப்புடித்தான் இருப்பாய்ங்க! அதான் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே” அப்டீன்னுதான் பதில் வரும்! ஹி ஹி ஹி ஹி ஹி உடனே இந்த இடத்தில், அப்பாவிக் கணவர்களாகிய நீங்கள்
“ இப்ப எதுக்கு அவங்கள பத்தி தப்பா பேசுறே” அப்டீன்னு கேட்டுத் தொலைச்சுடாதீங்க! உடனே,
“ ஆமா, நா எது பேசினாலும் இவருக்கு தப்பாத்தான் தெரியுது! நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்! உங்க போக்கே சரியில்ல” அப்டீன்னு விஷயம் வேற பக்கம் டைவர்ட் ஆகிடும்! இத கேட்டு உங்களுக்கு செம அதிர்ச்சியாவும், கடுப்பாகவும் இருக்கும்! ஆனா என்ன பண்ண முடியும்? “ ஆணாகப் பொறந்து தொலைச்சுட்டோமே” அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம கம்முன்னு கெடக்கணும்!

மறுபடியும் சொல்றேன்! பல விஷயங்கள மனசுக்குள்ளாரதான் நினைக்கணுமே தவிர, வாயத்தொறந்து வெளியே கொட்டக் கூடாது! :-)))
ஒரு வார்த்தை விட்டீங்க, ஜென்மத்துக்கும் அந்த வார்த்தைய உங்களால மீளப் பெறமுடியாது” உங்க மனைவியோட வாய நீங்க அடைச்சா, உங்க வாழ்க்கையே இருண்டு போய்டும்! அவ்ளோதான்!
ஸோ, பெண்களின் மனதினைப் புரிந்துகொண்டு நடப்பதென்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான விஷயமும் ஆகும்! - இந்தப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத ஆம்பளைங்கதான் “ பெண் ஒரு புதிர் என்றும், பெண்ணின் மனசு ஆழம் என்றும்” புலம்பிக்கொண்டு திரிவாய்ங்க! ஆனால் கொஞ்சம் உளவியல் + வாழ்வியல் தெரிஞ்சா, பெண்களைப் புரிந்துகொள்வது சிரமமே அல்ல!
 


Thursday, March 15, 2012

அன்புடன் நேர்மையிருந்தால் அழகாய் வாழலாம்

அன்புடன் நேர்மையிருந்தால் அழகாய் வாழலாம் 
அன்பால்தான் அழகான வீட்டை உருவாக்க முடியும். குடும்ப உறவுகளிடையே நம்பிக்கையும், நேர்மையும் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. எதிர்பாராத சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் உருவானாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் சிக்கல்களை சுவடு தெரியாமல் செய்துவிடலாம் என்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். இல்லறத்தில் தம்பதியரிடையே மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். கவனமாக கடைபிடித்தால் இல்லறம் நல்லறமாகும்.

அன்பாயிருங்கள்

அன்புதான் தம்பதியரிடையே வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணரவேண்டும்.

அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கவேண்டும்.

நேர்மையே முதுகெலும்பு

நேர்மை இல்லாத குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு. நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். ''என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்'' என்று இருவரும் எண்ண வேண்டும்.

பரஸ்பர நம்பிக்கை

வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதுதான் புத்திசாலித்தனம்.

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

முரண்பாடு வேண்டாம்

ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.

இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர்தான்.

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டவேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
 

Wednesday, March 14, 2012

காதலை சொல்லுங்க !

காதலை சொல்லுங்க !

சரியான தருணத்தில் சரியாக சொல்லப்படுகின்ற காதல் மட்டுமே வெற்றி பெருகின்றன.

காதலை சொல்லும் தருணம்

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல் தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக காதலை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிகரமாக்க முடியும்.

காதலை உறுதிப்படுத்துங்கள்

நாம் காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோமா? என்பது முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.

நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.

அப்பொழுது உங்களுக்குப் பிடித்த விசயத்தைக் கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகி விடும்.

நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. காதலை சொல்வதிலும் கூட ஒரு கவித்துவம் இருக்கவேண்டும். 14 ரோஜாப் பூக்களைக் கொண்ட ஒரு பூங்கொத்து தயாரித்திடுங்கள் பின்னர் அதை உங்கள் மனம் கவர்ந்தவருக்கு கொடுத்திடுங்கள். (பிப்ரவரி 14 காதலர் தினமில்லையா.. அதனால்தான் இந்த 14 ரோஜாக் கணக்கு)

மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து

மனங்கவர்ந்தவரோடு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மெல்லிய விளக்கொளியில் அமர்ந்து உணவு அருந்தும் தருணத்தில் அழகாய் தயாரித்த வாழ்த்து அட்டையை ரோஜாப்பூவோடு கையில் கொடுங்கள்.

கேக் பாக்ஸில் காதல் வரிகள்

உங்களவருக்கு கேக் பிடிக்கும் என்றால் விசயம் ரொம்ப எளிதாகிவிட்டது. அழகாய் ஒரு கேக் ஆர்டர் செய்யுங்கள். உங்கள் விருப்பத்தை கவிதையாய் வடித்து அந்த பெட்டியில் வைத்து இனிப்போடு தெரிவியுங்கள் உங்கள் காதலை.

அழகான மோதிரம்

இளம் மாலை நேரத்தில் பூக்கள் அடர்ந்த சோலையில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அழகான ஒரு மோதிரம் பரிசளியுங்கள். அது அவருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அணிந்துகொள்வார்.

மந்திர வாழ்த்து

நேரில் சொல்ல கூச்சமாகவோ, அச்சமாகவோ இருக்கிறதா கவலை வேண்டாம். இசை கார்டு வாங்கி பரிசளியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கலாம். இரவுப் பொழுதில் யாருக்கும் தெரியாமல் அதை பிரிக்கச் சொல்லலாம். உங்களவர் அந்த கார்டை பிரிக்கும் போது ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் ஒலிக்கட்டும். அது உங்களின் நேசத்தை அவருக்கு உணர்த்தும். அப்புறம் பாருங்கள் உங்களுக்கான காதல் நேரம் தொடங்கிவிட்டது.
 

Tuesday, March 13, 2012

நியாயமான ஒரு கேள்வி????

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" 

நியாயமான ஒரு கேள்வி???? 

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் 
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"