முக்கிய செய்திகள்

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, March 14, 2012

காதலை சொல்லுங்க !

காதலை சொல்லுங்க !

சரியான தருணத்தில் சரியாக சொல்லப்படுகின்ற காதல் மட்டுமே வெற்றி பெருகின்றன.

காதலை சொல்லும் தருணம்

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல் தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக காதலை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிகரமாக்க முடியும்.

காதலை உறுதிப்படுத்துங்கள்

நாம் காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோமா? என்பது முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.

நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.

அப்பொழுது உங்களுக்குப் பிடித்த விசயத்தைக் கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகி விடும்.

நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. காதலை சொல்வதிலும் கூட ஒரு கவித்துவம் இருக்கவேண்டும். 14 ரோஜாப் பூக்களைக் கொண்ட ஒரு பூங்கொத்து தயாரித்திடுங்கள் பின்னர் அதை உங்கள் மனம் கவர்ந்தவருக்கு கொடுத்திடுங்கள். (பிப்ரவரி 14 காதலர் தினமில்லையா.. அதனால்தான் இந்த 14 ரோஜாக் கணக்கு)

மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து

மனங்கவர்ந்தவரோடு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மெல்லிய விளக்கொளியில் அமர்ந்து உணவு அருந்தும் தருணத்தில் அழகாய் தயாரித்த வாழ்த்து அட்டையை ரோஜாப்பூவோடு கையில் கொடுங்கள்.

கேக் பாக்ஸில் காதல் வரிகள்

உங்களவருக்கு கேக் பிடிக்கும் என்றால் விசயம் ரொம்ப எளிதாகிவிட்டது. அழகாய் ஒரு கேக் ஆர்டர் செய்யுங்கள். உங்கள் விருப்பத்தை கவிதையாய் வடித்து அந்த பெட்டியில் வைத்து இனிப்போடு தெரிவியுங்கள் உங்கள் காதலை.

அழகான மோதிரம்

இளம் மாலை நேரத்தில் பூக்கள் அடர்ந்த சோலையில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அழகான ஒரு மோதிரம் பரிசளியுங்கள். அது அவருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அணிந்துகொள்வார்.

மந்திர வாழ்த்து

நேரில் சொல்ல கூச்சமாகவோ, அச்சமாகவோ இருக்கிறதா கவலை வேண்டாம். இசை கார்டு வாங்கி பரிசளியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கலாம். இரவுப் பொழுதில் யாருக்கும் தெரியாமல் அதை பிரிக்கச் சொல்லலாம். உங்களவர் அந்த கார்டை பிரிக்கும் போது ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் ஒலிக்கட்டும். அது உங்களின் நேசத்தை அவருக்கு உணர்த்தும். அப்புறம் பாருங்கள் உங்களுக்கான காதல் நேரம் தொடங்கிவிட்டது.
 

Monday, February 20, 2012

பதின் பருவக்காதல் !!!!!!!!!!

பதின் பருவக் காதல்: பெற்றோர்கள் ஆலோசனை அவசியம்!
அரும்பாக இருந்து மலரும் பருவம் பதின் பருவம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த காலம்தான். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இலைமறை காயாக தெரியவேண்டிவை எல்லாம் நடுக்கூடத்திற்கே வந்து சேர்கிறது.

மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தற்கொலைக்கும் துணிகின்றனர்

பதின் பருவத்தில் காதல் என்பது அனைவரையுமே தொட்டுப் பார்ப்பது இயற்கை. ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றதும் ஊரையே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது அவர்கள் ஏதோ செய்யக்கூடாத தவறுகளை செய்வது போல பார்ப்பது அவர்களை தற்கொலை பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் போன்றவை பதின் பருவத்தினரை தற்கொலை வரை கொண்டு செல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக

ஒதுக்குவது ஆபத்து

குழந்தைகள் காதலில் விழுந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை குற்றவாளிகள் போல நடத்தவேண்டாம். இதுவே அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கும். மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு, எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, குழந்தைகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.

வெளியே அழைத்துச் செல்லுங்கள்

பதின் பருவத்தில் புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம். காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.

ஆபத்தாகும் தனிமை

மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

Monday, February 13, 2012

காதலர் தினம் !!!!!

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் நாள் குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், குறுவட்டுகள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் வணிகம் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோசாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

6. வாழ்த்து அட்டை பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். மின்னஞ்சல், குறுஞ்செய்தி,மின் -அட்டை, இணையம் என உயர் தொழில் நுட்பம் வாசமடிக்கும் டிஜிடல்/எண்ணிம உலகம் இது. ஆனாலும் எந்த தொழில்நுட்பத்தாலும்வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் சிறப்பு தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

18. பிப்பிரவரி 14ல் என்ன சிறப்புஎன்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின சந்தை அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஒழுங்கு செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு அமைதியாகத் திரும்பி விடுவதும் உண்டு.

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

22. வாழத்துஅட்டை இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

23. கைபேசியில் தனது காதலை காணொளியாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ கைபேசியிலேயே அனுப்பி விடுவது பிந்திய காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.

38. சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் உலகப் புகழ் பெற்ற காதலர்கள். அந்தக் காதலர்கள் “வாழ்ந்த வெரோனா இத்தாலியில் உள்ளது. அங்கே ஒவ்வோர் காதலர் தினத்தன்றும் சுமார் ஆயிரம் காதல் கடிதங்கள் ஜூலியட்டுக்கு வருமாம். எல்லாம் ஜூலியட் மேல் காதல் கொள்ளும் இளைஞர்கள் எழுதிப் போடும் கடிதங்கள் !




Wednesday, July 6, 2011

அவர்களின் காதல்...சிறுகதை.

"சாதாரண சின்ன விஷயம் இது. இதற்காக நீ என்னை உதாசினப்படுத்தறதோ இல்லை என்னை விட்டு பிரிஞ்சு போயிடுவேன்னு சொல்றதோ சரியல்ல" என்றான் சேகர், ரம்யாவை பார்த்து தன் விரல் நகங்களை கடித்து துப்பியவாறு.

ரம்யா அவனை பார்த்தாள். "இது சின்ன விஷயம் தான். ஆனால் நீ எதையும் என் மீது திணிக்க விரும்புகிறாய். உன் விருப்பங்களை என் விருப்பங்களாக நீ மாற்ற முனைகிறாய். என் விருப்பங்களை நீ உன் காலில் போட்டு மிதிக்கிறாய்"

"நான் உன் ஆளுமையின் கீழ் இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். கல்யாணத்துக்கு முன்பே இப்படின்னா, நாளை கல்யாணத்துக்கு பிறகு உன்னை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. நீ உட்கார் என்றால் நான் உட்கார வேண்டும். நில் என்றால் நிற்க வேண்டும்"

"ரம்யா. உனக்கு வர வர என்னை பிடிக்கல. இப்போ உன் வட்டம் பெரிசாயிடுச்சு. ஆண்களின் நட்புகளும் உனக்கு அதிகமாய் கிடைக்குது. அதனால் என்னை விட அழகா உள்ள வேறு எவரையும் லவ் பண்ண விரும்பறியா?" என்று கேட்டான்.

ரம்யாவுக்கு கோபம் வந்தது. "என்ன பேசுறோம்னு தெரியுதா சேகர்? ஏன் நான் எது செய்தாலும், அதை செய்யாதே, இதை செய்யாதேன்னு சொல்றே. நீ போன மாசம் ஜிம்னாஸ்டிக் போட்டில கலந்துக்கிட்டே. ஜட்டியோட நிற்கணும். அதனால் அந்த போட்டில கலந்துக்காதேன்னு உன்னை நான் சொன்னேனா? உன்னை ஊக்குவிக்கலயா. அது மாதிரி என்னை ஊக்குவிக்க வேணாம்மா. இது ஆடை அலங்கார போட்டி. பேஷன் ஷோ. அழகி போட்டி கூட கிடையாது."

"நீ கலந்துக்கறது எனக்கு பிடிக்கல" என்றான் மொட்டையாக.

"சேகர், நீ என்னை உண்மையிலேயே லவ் பண்றியா? என்னை நீ உன் லைப் பார்ட்னரா நினைக்கல. நான் ஒரு அடிமையா இருக்கணும்னு எதிர்பார்க்கிறே சரியா"

சேகர் இப்போது எதுவும் பேச விரும்பாதவன் போல சற்று தள்ளி போய் அமர்ந்தான். கொஞ்ச நேரத்தில் புல் தரையில் படுத்து ஆகாயத்தை வெறித்து பார்க்க துவங்கினான். பேச ப்ரியப்படாத மாதிரி நடந்து கொண்டான். "நீயே பேசப் பிரியப்படாத போது நான் ஒன்றும் உன்னிடம் வலுக்கட்டாயமாக பேச முயல மாட்டேன்"என்று எண்ணியவாறு ரம்யா, கையோடு வைத்திருந்த கேட்லாக் புக்கை பார்க் ஆரம்பித்தாள். அது புதிய ஆடைகளின் டிசைன் புத்தகம். புத்தகத்தை புரட்டினாள். மனம் அதில் பதிய மறுத்தது.

இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? தவறு யார் மீது. நான் எது செய்தாலும் இவனுக்கு பிடிப்பது இல்லை. போன மாசம் காலேஜில் ஒரு விழா. நாடகம் நடந்தது. ரம்யாவுக்கு நாடகத்தில் நடிக்க இஷ்டம் உண்டு. பெயர் கொடுத்தாள்.

அன்று மாலை சேகரிடம் தான் நாடகத்தில் நடிக்க இருப்பதை சொன்னபோது கோபப்பட்டான். "என்கிட்ட கேட்காம நீ எப்படி பேர் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டான்.

"நீ மட்டும் என்கிட்ட கேட்டுக்கிட்டா பேர் கொடுத்து இருக்கே" என்று கேட்டாள் ரம்யா. சேகர் எதுவும் பேசவில்லை. இதே மாதிரி இன்னொரு முறையும் சண்டை.

ரம்யா என்.ஸி.ஸியில் இருக்கிறாள். பக்கத்திலுள்ள ஒரு மலையில் இரண்டு நாள் மலையேற்ற பயிற்சி முகாம் நடந்தது. ரம்யாவுக்கு எதிலாவது ஈடுபட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவளும் கலந்து கொண்டாள்.

அப்படி அவள் அந்த பயிற்சிக்குச் செல்வது சேகருக்கு பிடிக்கவில்லை. "பொம்பளைகளுக்கு இது தேவையா? காலேஜ்க்கு வந்தோமா, போனோமான்னு இல்லாம்ம" என்று ஆரம்பித்தான்.

"அப்படியா, நானும் அப்படி தானே இருந்தேன். காலேஜுக்கு வர்றதும், படிக்கிறதும்மா. நீ தானே என் மனசை கெடுத்தே. காதல்ங்கிற பூதத்தை என்னுள் திணிச்சே. காலேஜில் படிக்கிற பொண்ணுக்கு லவ் தேவையா?" என்று ரம்யா கேட்க, சேகர் மௌனித்தான். "நீ என்னை ரெம்ப பயமுறுத்தறே ரம்யா. நான் ஏதாவது சொன்னா உன்னை விட்டுபோயிடுவேங்கிற. நான் உன் நல்லதுக்கு தானே சொல்றேன். எங்க போனாலும் எல்லா ஸ்டூடண்ட்ஸ் பார்வையும் உன் மீது தான் விழுது"

"அழகாக உள்ளது என் குற்றமா சேகர். ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிற நான் குற்றவாளியா? நீ என் நன்மைக்கு சொல்றதா எனக்கு படல. உனக்கு பயம் என் மீது. என் வட்டம் பெரிசாக, பெரிசாக நா உன்னை விட்டு போயிடுவேனோன்னு. நீ என்னை ஊக்குவிக்காம மட்டம் தட்டிட்டே இருந்தா தான் உன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டு, இந்த லவ் நமக்கு தேவையானு நான் யோசிக்க வேண்டியது வரும். மற்றப்படி யாரும் என்னை ஒன்றும் செய்திட முடியாது. என் மனசில் இந்த நிமிஷம் வரை உன்னை தவிர்த்து வேறு யாரும் இல்ல"

"இந்த நிமிஷம் வரைன்னா. அப்போ அடுத்த நிமிஷம் உன் மனசில் வேறு யாரும் வர வாய்ப்பிருக்கா" என்றான் கேலியாக.

"இருக்கு. அது நீ நடந்துக்கிற முறையை பொறுத்து"

அன்று அந்த பிரச்சனை அத்தோடு முடிந்தது. இது மாதிரி பல விஷயங்கள் - இருவருக்குமான பேதத்தை அறிவுறுத்தியப்படி, "எதனால் இன்னும் இவனது காதலை சுமந்து கொண்டிருக்கிறோம்" என்று தெரியவில்லை.

இவன் மீதுள்ள காதலை விட, எனக்கு என் லட்சியம், ஆர்வம் வலிமையானது. இவனுக்காக நான் அதை இழக்கவா? இல்லை அதற்காக இவனை இழக்கவா?

நிச்சயம் ஏதாவது ஒன்றை தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய் முடியாது.

அடுத்த வாரம் ஆடை அலங்கார போட்டி நடைபெற இருக்கிறது. அதில் நான் கலந்து கொள்வதில் இவனுக்கு உடன்பாடில்லை. தினமும் அதன் பொருட்டு சண்டையிடுகிறான்.

கலந்து கொண்டு விட்டால் இன்னும் நிறைய சண்டையிடுவான். என்ன செய்வது. இவனோடு பேசி பார்ப்பது. இவன் சிறிதளவாவது எனக்காக விட்டு கொடுக்க வேண்டாமா? விட்டு கொடுத்தால் தானே காதல். விட்டு கொடுத்தால் காதல் வாழும். இல்லை...?

"ரம்யா கிளம்பலாமா. டைம் ஆயிடுச்சு" சேகர் எழுந்து வந்து கேட்டான். புல்லை தட்டிவிட்டவாரே ரம்யாவின் தோளை தொட்டான். ரம்யா புக்கை மூடினாள். அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

"ஸாரி ரம்யா, உன்னை புண்படுத்தற மாதிரி பேசி இருந்தா"

அவன் எப்போதும் இப்படி தான், பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஈஸியாய் ஒரு ஸாரி சொல்வான்.

ரம்யா சிரித்தாள்.
"சேகர். நா ஒண்ணு சொல்றேன். முழுசா கேளு. அப்புறம் உன் முடிவை சொல்லு. அடுத்த மாதம் இமயமலைக்கு போற மலையேற்ற குழுவில் நானும் இருக்கேன். அதை உன்கிட்ட சொன்னேனா"

"இல்லையே. பைனல் இயர் உனக்கு. தேவையா இது உனக்கு. எவ்வளவு சொன்னாலும் தெரிய மாட்டேங்குது உனக்கு" என்றான் சேகர் கோபமாய்.

"திரும்ப ஒரு காரணம் கிடைச்சாச்சு சேகர். நாம சண்டை போட. எதுவரைக்கும் இப்படியே சண்டை போடறது சொல்லு. நான் எது செய்தாலும் உனக்கு பிடிக்கிறது இல்ல. அதாவது, உனக்கு பிடிக்கிற மாதிரி நான் எதுவும் செய்யறதில்ல. அப்படி செய்ய எனக்கு தெரியல. சரியா? எப்படி இனி நம்மால் சேர்ந்து இருக்க முடியும்? நீ ஒரு துருவம்னா நான் ஒரு துருவம்."

சேகர் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

"சேகர் இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தை விடுன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இதையே உன்னால் தவிர்க்க முடியலயே. என் உயிரோடு கலந்த சில விஷயங்களை என்னால் எப்படி தவிர்க்க முடியும்"

"அதற்காக நான் சிகரெட் பிடிக்காம இருக்க முடியுமா? வேணும்னா நீயும் பிடி. நீ தான் மாடர்ன கேர்ளாச்சே"

ரம்யா சிரித்தாள். "சேகர். நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னதும் நானும் லவ் பண்றேன்னேன். கொஞ்சம் கூட யோசிக்காம. அப்ப எனக்கு காதல்னா மயக்கம், போதை, நீயும் அழகா வேற இருந்தீயா. சரின்னேன். ஆனா இப்ப

யோசிக்கையில், இந்த அழகால் எதுவுமே இல்லன்னு தோணுது. ஒருத்தர் மேல ஒருத்தர் சந்தேகப்படுறோம். அழகை அடிமைப்படுத்தவே முயல்கிறோம் "

"ஒரு வேளை, ஒருத்தரின் திறமை, புத்தி, அறிவு - இதனால் நாம் ஈர்க்கப்பட்டு இருந்தா, இத்தனை சண்டை தோன்றி இருக்காதோன்னு தோணுது. நான் கெட்டு போயிடுவேன்னு நீ பயப்படறே. இல்லையா? "

"சீ, அசிங்கமாக பேசாதே"

"இல்ல சேகர். உண்மை தான். இத்தனை நாள் பழகியும் நீ என்னை பற்றி தெரிஞ்சுகிட்டது அவ்வளவு தான்."

சேகர் சிகரெட்டை தூக்கி எறிந்தான். "நான் என்ன செய்யணும்னு நினைக்கிறே ரம்யா"

"நல்ல கேள்வி. நீயும் நானும் தனி தனியா உட்கார்ந்து யோசிக்கணும். நாம பார்வைக்கு அழகானவர்களா இருந்தா மட்டும் போதாது. மனசிலும் அழகானவர்களா இருக்கணும். இரண்டு பேருமே மனசை கழுவுவோம்."

"திரும்ப ஒருவரை ஒருவர் புதுசா சந்திப்பது போல சந்திப்போம். அப்ப இந்த அழகை தவிர்த்து வேறு ஏதாவது உன்னையும், என்னையும் கவருதான்னு பார்ப்போம். அப்ப நீ நேசிக்கக் கூடிய வகையில் நானும், நான் நேசிக்க கூடிய வகையில் நீயும் இருந்தா - காதலிக்கலாம். அதுவரை பிரிவோம். சரியா? " என்று எழுந்தாள்.

அவன் சரி என்றானா? இல்லையா? என்று பார்க்காமல் ரம்யா நடக்க ஆரம்பித்தாள். ஒரு பாரம் நீங்கினாற் போல இருந்தது.

குமுதத்தில் வந்த சிறுகதை.