முக்கிய செய்திகள்

Monday, April 30, 2012

இப்படிஇருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள்வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச்சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக்கிழிக்கவேமாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா சுவர்க்கடிகாரமும் நிச்சயம் இடம்பிடிச்சிருக்கும்..! ரொம்பப்பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டுஇருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகாசைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணிநேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்துவைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித் தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கைவைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப்பிள்ளைகள் இருந்தா, ஒரேமாதிரி ட்ரெஸ் தச்சுக்கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா,கருவாட்டுக்குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்தி விடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ..கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல்போனோ, டி.வி. ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்லமாட்டீங்க..! 

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறிவகையறாஇருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர்குக்கர், காப்பிமேக்கர், வாக்குவம்கிளீனர், பிரெட்டோஸ்ட்டர், மைக்ரோவேவ்அவன், கேஸ் அடுப்புலக்ரில்இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்கமாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறு பண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர்பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க.. 

20. இந்த விவரம்லாம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்குசொல்லனும்னு நெனைச்சி மனசு பரபரக்கும்.. 

தமிழன் பா.. 

சுட்ட கதை சுடாத நீதி

பிரபல வழக்கறிஞர் ஒருவர் மகிழ்ச்சியிலும், குழப்பத்திலும் மூழ்கி இருந்தார். மகிழ்ச்சிக்கு காரணம் ஒரு வழக்கில் கிடைத்த வெற்றி. நகரின் மிக பெரிய பணக்கார நண்பர், தன் இறந்து போன தந்தை சொல்லாமல் விட்டுப்போன சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என தேடுவதிலேயே பாதி காலத்தை கழித்தவர். 

ஒருவாராக பல கோடி ருபாய் மதிப்புள்ள நிலம் அவர் தந்தை வாங்கி இருப்பினும், அது மற்றொருவரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. 

அதை மீட்பதற்காக போட்ட வழக்கில், இன்று தான் அந்த தொழிலதிபருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. அதை குறித்தே வழக்கறிஞருக்கு மகிழ்ச்சி.

குழப்பத்துக்கு காரணமும் இந்த வழக்கு தான். 

'சொத்து பிரச்சனைக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டு இருப்பதால், இந்த வழக்கை முழுதாக நீயே பார்த்துக்கொள்'
என நண்பரான வழக்கறிஞரை அவர் அன்புடன் கேட்டுகொண்டிருந்தார். 

அதனால் பீஸ் நயா பைசா கூட வாங்கவில்லை. இப்போது ஜெய்த்த பின் நண்பர் தருவாரா? நட்புக்காக இலவச சேவை செய்ததாக நினைத்து கொள்வாரா? என்று குழப்பம்.

வெற்றி தகவலை சொன்னதும், அன்றிரவே வழக்கறிஞரை பார்க்க வந்த தொழிலதிபர், அழகான ஒரு பொம்மையை பரிசாக தந்தார்.

'இது லண்டனில் வாங்கியது. பொம்மை மாதிரி குழந்தைகள் விளையாடலாம், சேமிக்கவும் உண்டியலை பயன்படுத்தலாம்'

'என்னய்யா இது விளையாட்டு? உனக்காக நான் பல கோடி ரூபாய் சொத்தை வாதாடி மீட்டு தந்திருக்கிறேன். நீ என்னவென்றால் ஒரு பொம்மையை தருகிறாய். வெளி ஆளாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் பீஸ் வாங்கி இருப்பேன் தெரியுமா? என கொதித்தார்.

தொழிலதிபரின் முகம் சுருங்கியது. அந்த உண்டியல் பொம்மையை வாங்கி திறந்தார். 
'இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூட பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க பீஸ் ஐந்து லட்சம் உள்ள இருக்கு' என சொல்லலி பொம்மையை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

பணம் இழந்ததோடல்லாமல் நல்ல நட்பையும் தொலைத்துவிட்டு நின்றார் வழக்கறிஞர்.

நீதி:

அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.

Saturday, April 28, 2012

பண்பாடு---வாழ்க்கை ஒழுக்கம்


ல நூற்றாண்டுகளைக் கண்ட மரம், ஒரு நாள் ஓங்கியடித்த புயலில் வேரோடு மண்ணில் விழுந்து கிடந்தது. வன்மை முறுக்கேறிய இத்தனை பெரிய மரம் எப்படி ஒரு நாள் புயலை எதிர்த்து நிற்க முடியாமல் விழுந்து விட்டது என்கிற விவரம் புரியாமல் ஊர் மக்கள் ஒன்றுகூடி வியந்து நின்றனர். அப்போது அங்கே ஒரு துறவி வந்து சேர்ந்தார். ''இவ்வளவு வலிமை மிக்க மரம் ஒரு நாள் புயலில் எப்படி விழுந்திருக்க முடியும்?'' என்று கூடி நின்ற மக்களில் ஒருவன் துறவியைக் கேட்டான்.
மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் துறவி உற்றுப் பார்த்தார். வெளித் தோற்றத்தில் வலுவாகத் தோன்றிய மரத்தின் உள்ளே ஒரு பெரிய பொந்து வீழ்ந்திருந்ததைக் கண்டவர், ''நண்பர்களே! இந்த மரத்தின் வீழ்ச்சி ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. பல நாட்கள் உள்ளே நிகழ்ந்த உள் அழிவுதான், இன்று இந்த மரம் புயலை எதிர்கொள்ள முடியாமல் விழுந்து கிடப்பதற்குக் காரணம். எந்த ஒன்றுமே ஒரு நாள் நிகழ்வில் வீழ்வதில்லை என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்'' என்றார்.

பண்பாடு என்பது மின்னலைப் போல திடீரென்று தோன்றி, புயலைப் போல ஒரு நாளில் மறைந்து விடுவதில்லை. பண்பாடு என்பது ஓர் இனம் காலம் காலமாகப் பழகி வரும் வாழ்க்கை ஒழுக்கம். 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகை கூறும். 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வாழும் மண்ணின் மரபுகள் பண்பாடாக மலரும். காலப்போக்கில் வாழ்க்கையில் படிந்து கிடக்கும் அசுத்தங்கள் அகன்று மனிதனின் சிந்தனை செழுமையுறும்போது பண்பாடு சிறக்கிறது.

இந்தியப் பண்பாடு ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது. அன்பு, இரக்கம், கருணை, அகிம்சை, எளிமை, விருந்தோம்பல், மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டுதான் இந்தியப் பண்பாடு உருவானது. அடுத்தவர் பொருளின் மீது ஆசையற்ற வாழ்க்கைதான் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம். தர்மத்தின் வழி நடப்பதுதான் அவனவன் சுதர்மமாகப் போற்றப்பட்டது.


விக்டோரியா பேரரசிக்கு ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ்முல்லர் எழுதிய கடிதத்தில் 'அறம் சார்ந்த வாழ்க்கை முறையை அறிய உலகம் இந்தியாவின் பக்கம் முகம் திருப்ப வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

இன்று அந்த சுதர்மம் உலகமயமாக்கல், வணிகக் கலாசாரத்தில் பொய்யாக, கனவாகப் போய்விட்டது.


மாறாத சமய நம்பிக்கைகளும் மண்ணின் மரபார்ந்த வாழ்க்கை நெறிகளும் கூட்டுக் குடும்பத்தின் கட்டுமானம் குலைந்து விடாமல் நீண்ட காலம் காப்பாற்றி வந்தன. அவற்றையும் மீறி மேலை நாட்டுக் கலாசாரக் காற்று மெல்ல மெல்ல கிராமங்களின் கூட்டுக் குடும்பங்களில் வீசத் தொடங்கியது.

கண்டதையும் வாங்கிக் குவிக்கிற 'நுகர்பொருள் நாகரிகம்' கிராமத்து மனிதர்களையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. கல்வி வளர்ச்சி, வேலை தேடி நகர்ப்புறங்களை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. 


விளைவு.. 'நான் நன்றாக இருந்தால் போதும்' என்று நினைக்கிற 'தனிநபர் சுகபோகம் மட்டுமே வாழ்க்கையின் ஒரே நோக்கம்' என்று மனித மனோபாவம் மாறியது. 

முதியோரும் பெற்றோரும் சுமக்க வேண்டாத சுமைகளாயினர். பொருளாதார சக்திகள் குடும்ப உறவுகளைக் கூறு போட்டன. கூட்டுக் குடும்பக் கட்டடம் தகர்ந்து தரைமட்டமானது. தெரு வழியே வருகிற அந்நிய மனிதர்கள் உட்கார்ந்து செல்வதற்காகவே கட்டப்பட்ட திண்ணை வைத்த வீடுகள் காணாமல் போய், 'நான்.. எனது..' என்ற அளவில் எல்லாமும் சுருங்கிப் போனது. வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வோர் அடியும் வணிகமயமானது.

குளிர்ந்த நீரில் விறைத்துக் கிடக்கும் ஆமையை சமைத்து உண்பவர்கள், முதலில் அதை உலையில் போடுவார்கள். உலை நீரின் வெப்பம் தொடக்கத்தில் வெதுவெதுப்பாக இருக்கும். அந்த இதமான வெப்பம் ஆமைக்கு இன்பமாக இருக்கும். அந்த சுகம் தரும் போதையில் ஆமை கொதிகலனில் நின்றும் ஓடியும் ஆனந்தக் கூத்தாடும். வெப்பம் கூடியதும் ஆமை அழியும். முதலில் இன்பம் தருவதே பின்பு துன்பமாகும். தேவையும் ஆசையும் அதிகரித்தால் அமைதியும் நிம்மதியும் பறிபோகும். 


காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு அகப் பகைகளை அழிக்க சிந்தனை, சொல், செயலைத் தூய்மை செய்ய வேண்டும் என்பதுதான் நம் பண்பாட்டின் அடித்தளம். பழையன கழிந்து புதியன புகும் ஆசைகளைச் சீரமைத்து, சினம் தவிர்த்து, கவலை ஒழித்து நாம் வாழ முற்படுவோம். 


                                         


Thursday, April 26, 2012

மஹாபாரதத்தில் ஒரு நாள்!!!!

மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். “இதி ஹாஸம்” என்றால் “இது நடந்தது” என்று பொருள். நமது பண்டைய வரலாறு. இது நடக்கவே இல்லை வெறும் கற்பனை என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்பனைக் கதையா? தனிமனிதனால் எழுதப்பட்ட புனைவா அல்லது நடந்த உண்மையா? எதுவாயினும் கதாபத்திரங்கள் மூலமாக சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்றவை என்பதே இதன் பெருமை.

இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதனால் அப்படி போடமாட்டார்கள். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.

மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.

தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.

ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.

துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.

ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.

மகரிஷியே “ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்” என்றார்.

அதற்கு ரிஷியோ “இந்தப் பிரச்சனையின் அர்த்தம், அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்” என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.

பரத மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், “நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன். ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன்
அல்ல.
ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு.
1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது

2. நாட்டையும் மக்களையும் காப்பது.

3. அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது ஆகியவை தான் அந்த மூன்று கடமைகள்.

இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை”. இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். “ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்” என்றார்.

அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, “இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்” இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.

மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், “மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே…” என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.

“ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!” என்றார். கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல. அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கன்னியமும்
தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது.

அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானது” என்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.

பரதன் தன் தாயிடம் விளக்கினான் ” தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே! இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான்.

ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும். அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை” என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன்.

ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன் ஆவான். அதற்குப் பின் பலகாலம் பாரதத்தில் மக்களில் தகுதிவாய்ந்தவரே அரனாக ஆனார்கள். பின்னர் பல தலைமுறைக்குப்பிறகு வந்த சாந்தனு என்ற அரசனுக்குப் பிறகு மீண்டும் வாரிசுக்கு உரிமை என்ற நிலை உண்டானது. சாந்தனுவின் மகன் தான் கங்கை மைந்தன் பீஷ்மர். தனி மனிதர்கள் பூமியை சொந்தம் கொண்டாடத் துவங்கினார்கள்.

ஆம், குருக்ஷேத்ரம் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்தது அப்போது தான்.

பரதனின் அந்த ஒரு நாள் அறிவிப்பு நமது நாட்டில் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அற்புதமான உதாரணமாக இன்னும் உலகுக்கெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறது.

அன்றைய அரசன் வாரிசு அரசாங்கத்தை மாற்றி மக்களாட்சியை நிறுவினான். இன்றைய அரசர்களாக விளங்கும் அரசியல் வாதிகள் மக்களாட்சியை மாற்றி வாரிசு அரசாங்கத்தை விதைக்கிறார்கள்.

குருக்ஷேத்ரம் காத்திருக்கிறது.

Monday, April 23, 2012

உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !--" உத்திரமேரூர் "

ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..