முக்கிய செய்திகள்

Thursday, May 31, 2012

போய்ச் சேராத பயணங்கள்

ஒரு நாடு... நாமெல்லாம் அதிகம் கேள்விப்படாத ஏதோவொரு நாடுன்னு வச்சிக்குங்களேன். அந்த நாட்டுல என்ன, "விசேஷம்'னா, அங்க விளையற பயிர்களிலேயே, சுண்டைக்காய் தான் ரொம்பச் பெருசு. வேற எந்த பயிருமே அதைவிட சிறுசு தான். இப்படி இருக்குறப்போ, நம்ம நாட்டுல இருந்து, பெரிய மனுஷர் ஒருத்தர், ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க, அந்த நாட்டுக்குப் போறார். நல்ல அழகான அரங்கம்; பிரமாதமான கூட்டம். நம்ம தலைவர் தான், மிக முக்கிய விருந்தினர். அவருக்கு மாலை, மரியாதையெல்லாம் ஏக தடபுடலா நடக்குது. அந்த நாட்டுக்காரர் ஒருத்தர், நம்ம தலைவரை அறிமுகம் செய்து வைக்க வர்றாரு... "நண்பர்களே... தலைவர் பத்தி சொல்லியே ஆகணும்; இவரை மாதிரி ஒருத்தரைப் பார்க்கறதே ரொம்ப அபூர்வம். இவர் செய்திருக்கிற பணிகள் எல்லாம் சொல்லி மாளாது. சுருக்கமா சொல்லணும்னா, இவர் ஒரு சுண்டைக்காய்' என்றார்.

நம்ம தலைவர் அப்படியே, "ஷாக்' ஆயிட்டாரு. இருக்காதா பின்னே...? அத்தனை பேர் முன்னால, தன்னை அவமானப் படுத்திட்டாங்கன்னு, அவருக்கு எக்கச்சக்க கோபம். மேடையை விட்டு, இறங்கறதுக்கு போயிட்டாரு. மேடையில இருந்தவங்க, கீழ உட்கார்ந்துக்கிட்டு இருந்தவங்கன்னு யாருக்கும் ஒண்ணுமே புரியல. அறிமுகம் பண்ணி வச்ச அந்தப் பேச்சாளர் மீண்டும், "தலைவர் கோவிச்சுக்க கூடாது; நாங்க ஏதாவது தப்பா சொல்லியிருந்தா, தயவு செஞ்சி மன்னிச்சிருங்க. நாங்க ஒத்துக்கிடறோம். நீங்க உண்மையிலேயே ஒரு சுண்டைக்காய் தான்...' என்றார். தலைவர் நேரே மைக்கிட்ட வந்தாரு. "யாரைப் பார்த்து சுண்டைக்காய்ன்னு சொல்றே? இன்னொரு தரம் அப்படி சொன்னே... நடக்கறதே வேற'ன்னு, "வெறித்தனமா' அதாவது, இயல்பா கத்த ஆரம்பிச்சுட்டாரு. என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்குமே? அந்த நாட்டை பொறுத்த மட்டும், சுண்டைக்காய் தான் ரொம்பப் பெரிசு. ஆனா, இங்க இருந்து போனவருக்கு, பூசணிக்காய் தான் பெரிசு. ஏன்னா, இவரு பூசணிக்காயை பார்த்திருக்காரு. அதனால, இவருக்கு சுண்டைக்காய் சின்னதுன்னு தெரிஞ்சிருக்கு. அந்த நாட்டுல இருக்கிறவங்களும், பூசணிக்காய்ன்னு ஒண்ணு இருக்கு; அது சுண்டைக்காயை விடவும் ரொம்பப் பெரிசுங்கிறதை புரிஞ்சுப்பாங்க... எப்போ? அவங்களே பூசணிக்காயை நேரில் பார்க்குறப்போ இல்லையா?

எதுக்கு இந்த கதை இப்போ? நம் இந்தியாவில், குறிப்பா தமிழகத்துல, இதுதான் இன்றைய நிலை. சுண்டைக்காய்களைத் தான் நாம் மிகப் பெரியதாகப் பார்த்து, பிரமித்துக் கொண்டிருக்கிறோம். "பெரியோரை வியத்தலும், இலமே... சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே' என, பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, உலகுக்கெல்லாம் பறை சாற்றியது நம் தமிழ்மொழி. ஆனால், இன்றோ? உயர்ந்த சிந்தனை, உலகளாவிய பார்வை, ஊருக்கு நல்லது என்றால் உலகமே எதிர்த்து நின்ற போதும், உரக்கச் சொல்லும் உளத்திண்மை, உண்மைக்காக உயிரையும் தரத் துணியும் உத்தம குணம் எல்லாம், குயில் பாட்டுல பாரதி சொல்வதைப் போல, "பொய்யாய்க் குனவாய்ப் பழங்கதையாய் போனதுவே...' யார் காரணம்? நாம் தான் காரணம். எது நம்மை இப்படி மாற்றியது. "மூளைச் சோம்பல்!' இது என்ன புதிதாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இந்தச் சொல் வேண்டுமானால், புதிதாக இருக்கலாம். இந்தச் செயல் நம்மில் மிகப் பெரும்பாலோர், மிக விரும்பிச் செய்து வருவது தான். மூளைச் சோம்பல் தான், நம்மிடையே இன்று வெகு வேகமாக பரவி வரும், கொடிய நோய். ஆழமான நூல்களைப் படிப்பதில்லை, அறிவார்த்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில்லை, தீர்க்கமாக யோசித்து, தீர்மானமாகச் செயல்படுவதில்லை என்பதில், நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம். எதையும் மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, நுனிப்புல் மேய்வதையே மேதாவிலாசமாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அனைத்தினும் மேலாய், சுயமானதாய் இருந்தே தீர வேண்டும். இத்தகைய அறிவு நிரம்பப் பெற்ற அறிவார்ந்த, சமுதாயமாகத் தான் நாம் இருந்தோம்; படிப்படியாகத் தான், மாறிப் போனோம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில், பெரும்பாலோர் அதிலும் குறிப்பாய் இளைஞர் சமுதாயம், இத்தகைய மூளைச் சோம்பலுக்கு அடிமை பட்டு போய் விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கேளிக்கைககள் தாம், இளமையின் அடையாளம் என, முதன்மைப்படுத்தப் படுகிறது. போதாக்குறைக்கு அறிவார்த்த விவாதம் என்ற பெயரில், அருதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளுடன் வெட்டி மன்றங்கள், ஆண்கள் மீசை வைத்துக் கொள்வது ஏன் என விவாதங்கள், உணவுப் பண்டம் பெயரில் வரும் தமிழ்ப் பண்டிகையின் பெயர் என்ன என்று, கோடி ரூபாய்க்கு வழிகாட்டும் கடினமான கேள்வி... மொத்தத்தில், இது தான் அறிவின் உச்சம் என்று நாம் ஒப்புக் கொண்டு விட்டோம். அரசியல், அதிலும் உள்ளூர் அரசியல்; சினிமா, அதிலும் தமிழ் சினிமா; மற்றும் கிரிக்கெட் ஆகிய மூன்றும் தாம், நம் பொதுஅறிவின் விஸ்தீரணம். இவை பற்றிய புள்ளி விவரங்கள் தான், நம் ஞானத்தின் நீளம், அகலம், உயரம், ஆழம், பருமன், பலம் எல்லாமே என்று ஆக்கி வைத்திருக்கிறோம். இந்த மூன்றின் கூட்டு அல்லது கலவை தான், இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டின் கோடானு கோடி இளைஞர்கள் மீதும், தொடர்ந்து இடையறாது நடத்தப்பட்டு வரும் இந்த படையெடுப்பு தான், நம் தேசத்தின் வளமான எதிர்காலத்துக்கு எதிரான மிகப்பெரிய சவால். பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என, எல்லாமே மிகக்குறுகிய "சிலபஸ்'க்குள் அடங்கி விடுகின்றன; அதற்குள் இருப்பனவற்றை கரைத்துக் குடித்து விட்டால் போதும் என்பது தான் இன்றைய நிலை. மதிப்பெண் மட்டுமே, ஒருவரின் அறிவுக்கான மதிப்பீடாக இருக்க முடியாது. ஆனால், நாம் அதைத் தான் முடிந்த முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். விளைவு... கல்வி வளர்ந்த அளவுக்கு, அறிவு வளராமல் போயிற்று. கேளிக்கை என்ற பெயரில், கேலிக் கூத்துகள்; பொழுதுபோக்கு என்ற போர்வையில், போதை ஊட்டும் காட்சிகள்; "டைம் பாஸ்' வடிவில், "டைம்-பாம்'கள். இது கூடப் பரவாயில்லை. உப்புப் பெறாத விஷயங்களை எல்லாம் ஊதி பெரிதாக்கி, மிகப்பெரிய சிந்தனையாகப் பேசுவதும், விவாதிப்பதும், நம் அறிவை ஆழப்படுத்துவதாக இல்லை; வெறுமனே, "படுத்துவதாக' மட்டுமே இருக்கிறது.

சென்ற தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு தளத்திலும், "பெரியவர்கள்' இருந்தனர். இன்று? அரைக்காசு பெறாத வறட்டுச் சிந்தனைகளைத் தாம், நகைச்சுவை முலாம் பூசி, அறிவார்த்த தத்துவங்களாக அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். நாமும் ஒவ்வொரு விழா நாளிலும் விடாமல் பார்த்தும், கேட்டும், கைதட்டி ரசித்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற அன்றாட உரையாடல்களை, இன்று அரங்கங்களில், "விவாதங்களாக' பார்த்துக் கொண்டிருக்கிறோம். யாருடைய ஆலோசனைகளும் இன்றி, தனது சொந்த புத்தியிலேயே எதையும் தீர்மானித்துக் கொள்ளக் கூடிய சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் உலகளாவிய பிரச்னைகளைப் போல் நீட்டி முழக்கிப் பேசுபவர்களை, சிந்தனையாளர்களாக நாம் வியந்து பார்க்கிறோம். ஆம்... நிஜத்தில் அறிவு என்ற பெயரில், இங்கே அறியாமை தான் கூறு போட்டு விற்கப்படுகிறது. புரிந்து கொள்வோம், மிகச் சிறியதை மிகப் பெரியதாக எண்ணி மயங்கிக் கிடந்தால், பின் உண்மையில் மிகப் பெரியது நம் கண்ணுக்கு என்றைக்குமே தெரியாமல் போய் விடும். மிகச் சாதாரணமானதை, விளம்பர வெளிச்சம் மிகப்பெரிய சாதனையாக்கிக் காட்டுகிறது. இந்த உண்மையை இளைஞர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் ஒழிய, பழையபடி ஓர் அறிவார்ந்த சமுகமாக நாம் மலர முடியாது. நாம் பூசணிகளை அடையாளம் கண்டு, அவர்களின் பின் செல்லப் போகிறோமா அல்லது சுண்டைக்காய்களையே பெரிதாய் எண்ணி, சுகம் காணப் போகிறோமா?

Tuesday, May 29, 2012

துபாய் கணவா.... !!!!!!!!!

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... 
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

Monday, May 21, 2012

எப்படி எழுதணும்? – சுஜாதா

மிழ் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்ச நாயகன் அமரர் சுஜாதா அவர்கள். 
அவரிடம் ஒரு மணிநேரம் பேசிய அனுபவத்தை மட்டுமே மூலதனமாக வைத்து எழுத்துலகில் ஜெயித்த பலரை அடையாளம் காட்ட முடியும்.
மிகச் சிறந்த உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். அவரும் இந்த உண்மையை எந்த மேடையிலும் தயக்கமின்றி ஒப்புக் கொள்வார்.
அப்படி என்னதான் சொன்னார் சுஜாதா…
புதிதாக எழுத வருபவர்கள்… அல்லது ஏற்கெனவே எழுதியும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என துவண்டு போகிறவர்களுக்காக அவர் தந்த சில குறிப்புகள். இதை ப்ரேம் போட்டும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை!
1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி’க்கு அனுப்பாதீர்கள்.
2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.
3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…
4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.
5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.
6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.
7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.
8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.
9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.
10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.
11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
-சுஜாதா எழுதிய ‘தோரணத்து மாவிலைகள்’ புத்தகத்திலிருந்து!

Monday, May 14, 2012

தமிழ்மொழியின் முதல் தோற்றம்

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 


மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்
மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு
உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்
மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். 

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.

செய்தி :தமிழ் மன்றம்

Wednesday, May 2, 2012

என்னை உங்களுக்கு தெரிகிறதா?சொல்வது நீங்களாக கூட இருக்கலாம்..... வாழ்கையின் விளிம்பில் இருக்கும்போது......

என்னை உங்களுக்கு தெரிகிறதா? நிச்சயம் நன்றாக தெரிந்திருக்கும் மறந்து போயிருப்பிர்கள் நீங்கள் தினசரி மனதில் நினைத்து பார்க்கும் அளவுக்கு நான் பெரியமனுஷன் அல்ல ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் என்னை சந்திக்காமல் உங்களால் இருக்க முடியாது போதும் பீடிகை நீங்கள் யார் என்று சொல்லலாமே என்று நீங்கள் கேட்பது என் மந்தமான செவியில் லேசாக விழுகிறது என் கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு நான் உங்களுக்கு மிகவும் தெரிந்தவன் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

நான் சாம்பசிவம் என்னை பருத்தி வியாபாரி சாம்பசிவம் என்றால் சொடுக்கு போடும் நேரத்தில் அப்போது எல்லோரும் அடடே அவரா எனக்கு நன்றாக தெரியுமே வெள்ளை வேட்டி சட்டையும் வாய்நிறைய வெற்றிலையும் கக்கத்தில் பழைய மான்மார்க் குடையும் இடிக்கி கொண்டு வருவாரே அவர் தானே என்று எல்லோரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள் அந்த அளவிற்கு என் ஏரியாவில் எனக்கு பரிச்சயம் ஜாஸ்தி தோற்றத்தில் மட்டுமல்ல வியாபாரத்திலும் நேர்மையை கடைபிடித்ததனால் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட என்னிடம் மரியாதை காட்டுவார்கள் நேற்று நூறு ரூபாய்க்கு விலைபேசி பருத்திக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் என்றால் இன்று சரக்கை கொடுக்கும் போது இருநூறு ரூபாய்க்கு விலையேறினாலும் நேற்று பேசிய விலையை மாற்ற மாட்டேன்.

நேர்மையாக இருந்தாலும் நான் ஒன்றும் லட்ச கணக்கில் போட்டு புரட்டும் பெரிய வியாபாரி இல்லை விவாசாயி நிலத்தில் போய் சரக்குக்கு விலைபேசி வாங்கி மார்கட் கமிட்டியில் கொண்டு விற்று அதன் பிறகு சரக்குக்கான காசை கொடுத்துவிடுவேன் ஒருவகையில் இது தரகு வியாபாரம் என்றாலும் என்னமோ முதல்போட்டு வியாபாரம் செய்பவனை போல் நினைத்து கொள்வேன் மற்றவர்களும் அப்படி தான் என்னை நினைப்பார்கள் கிடைக்கும் வருவாயில் சிறுக சிறுக சேர்த்து சொந்தமாக வீடு நிலம் என்று ஓரளவு சம்பாதித்தும் வைத்திருந்தேன் எனக்கு இரண்டு பையனும் ஒரு பெண்ணும் என் மனைவி மிகவும் நல்லவள் அவளை மட்டும் நான் மனைவியாக பெறவில்லை என்றால் வருகிற சொற்ப வருவாய்க்கு நடுத்தெருவில் நின்றிருப்பேன் சிக்கனம் என்றால் அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். 

ஒரு புடவை கிழிந்து போய்விட்டால் அதை உடனடியாக தூக்கி தூர வீசி விட மாட்டாள் என் மரகதம் கிழிந்த புடவையை படுக்கையாக விரிப்பாள் அதற்கும் உதாவாமல் போகும் போது கிழித்து தலையணை உரையாக பயன்படுத்துவாள் அப்போதும் கிழிந்து விட்டால் தலையணைக்குள் பஞ்சாக அடைத்து விடுவாள் அதற்காக அவளை கருமி என்றோ கஞ்சத்தனம் மிகுந்தவள் என்றோ சொல்ல முடியாது. அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகள் எதாவது உதவி என்று வந்து கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டாள் தன்னால் முடிந்ததை செய்வாள் பொருளாக கொடுக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுக்காக ஓடியாடி ஒத்தாசை புரிவாள் அவளை யாருமே ஏன் விரோதி கூட குறை சொல்ல மாட்டார்கள்.

புருசனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு மரகதத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தாயால் கூட தரமுடியாத அரவணைப்பை கணவனுக்கு தருவாள் என் முகம் மாறுவதை வைத்தே என் உடம்பிற்கு என்ன? மனதிற்கு என்ன? என்பதை ஒரு நொடியில் கணித்து விடுவாள். ஆறுதலும் தைரியமும் அவளிடமிருந்து பெற்று விட்டால் காலகாலமாக வருகின்ற துயரங்கள் எல்லாம் ஒரு துரும்பை போல் தெரியும் அவ்வளவு தெளிவானவள் மதிநுட்பம் மிகுந்தவள். குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுவதில் இருந்து பாடம் சொல்லி கொடுப்பதுவரையில் அவள் கடைபிடிக்கும் நேர்த்தி பெரிய பேராசிரியருக்கு கூட வராது. 

அடுத்த மாசி மாதம் பிறந்தால் எனக்கு எண்பத்திமூன்று வயது பூர்த்தியாகிறது. எழுபது வயது வரையில் நான் ஒரு இடத்தில் அமர்ந்தது கிடையாது பருத்தி எங்கெல்லாம் இருக்கிறது என்று தகவல் வருமோ அங்கெல்லாம் சைக்கிளை எடுத்து கொண்டு அலைவேன் மழைவராத காலம் பருத்தி அதிகம் விளையாத காலம் என்று வந்தால் கூட வேறு எதாவது தொழிலை எடுத்து செய்வேனே தவிர வீட்டில் சும்மா இருக்க எனக்கு முடியாது. ஐயோ போதும் எனக்கு வயதாகி விட்டது என்று உட்கார்ந்திருந்தால் பெண்ணுக்கு ஐம்பது சவரன் போட்டு கல்யாணம் நடத்தி வைத்திருக்க முடியுமா? மூத்தவனை இன்ஜினியராகவும் இளையவனை பேராசிரியராகவும் படிக்க வைத்து வேலைவாங்கி கொடுத்திருக்க முடியுமா? அவர்களுக்கு அப்பன் சம்பாதித்த சொத்து என்று சிறிதளவாவது நிலத்தை வைத்திருக்க முடியுமா? எல்லாம் எனது நிற்காத ஓட்டத்தால் கிடைத்தது தான்.

எழுபது வயது வரை எனக்கு சலிப்பே தட்டியது கிடையாது. இன்னும் சொல்ல போனால் எனக்கு எழுபது வயதானது கூட தெரியாது. எதோ நேற்று தான் மீசை முளைத்தவன் போல் நினைத்து கொண்டிருந்தேன். ஒருநாள் அதிகாலை உறங்கி கொண்டிருந்த மரகதத்தை தட்டி எழுப்பினேன் என் குரல் கேட்டாலே எழுந்துகொள்ளும் மரகதம் அன்று நான் கதறி புலம்பிய போது கூட எழவில்லை அவள் கழுத்து துவண்டு சாய்ந்த பிறகு தான் ஐயோ எனது அருமை செல்வம் உறக்கத்திலேயே போய்விட்டாளே என்று உணர்ந்து அழுதேன். அவள் மறைவுக்கு பிறகு தான் என் வயதும் என் தளர்ச்சியும் எனக்கு புரிந்தது அதுவரை பத்து மையில் என்றாலும் சலிக்காமல் சைக்கிள் மிதித்த என் கால்கள் துவண்டு போக ஆரம்பித்தது கண்மங்கியது தலைகிறுகிறுத்தது. மூச்சிறைதத்து. சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆச்சி பதிமூன்று வருடம் ஓடி போயாச்சி நிறையப்பேர் என்னை மறந்தும் போயிருப்பார்கள் இப்படி ஒரு மனிதன் இருந்தானே நாம் பார்க்கும் நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்கும் நடமாடினானே அவனை தீடிர் என்று காணவில்லையே எங்கே போயிருப்பான் என்னவாயிருப்பான் என்று யாரும் யோசித்ததாக தெரியவில்லை வெளியில் உள்ளவர்களை விட்டுவிடுவோம் நான் பாடுபட்டு வளர்த்தேனே என் பிள்ளைகள் அவர்கள் கூட என்னை நினைத்து பார்க்கவில்லையே இதுதான் தலையெழுத்து என்பதோ? இதை தான் உலகத்தின் நடைமுறை என்று எல்லோரும் சொல்கிறார்களோ? 

நினைத்து பார்க்கவே முடியவில்லை கண்ணுக்குள் சூன்யமான ஒரு உலகம் தான் தெரிகிறது. அந்த உலகத்தில் நான் மட்டுமே தன்னந்தனியாளாக நிற்கிறேன். தாகம் எடுக்கிறது, நாவு வரள்கிறது யாராவது ஒரு துளி தண்ணிர் தரமாட்டார்களா? என்று நெஞ்சம் ஏங்குகிறது. அதோ தூரத்தில் புகைவடிவாக என் மரகதம் தெரிகிறாள் அவள் கையில் தங்க கூஜா இருக்கிறது. அதன் வெளிச்சம் என் கண்ணை பறிக்கிறது அதிலிருந்து அமிர்த தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. நான் வாரி வாரி குடிக்கிறேன். தாகம் அடங்கவில்லை கானல் நீரை எத்தனை முறை குடித்தாலும் தாகம் அடங்குமா? இது தான் இந்த கனவு தான் என் கூட இப்போது துணையாக இருப்பது.

மரகதம் கூட்டி பெருக்கிய வாசல்படியை பார்க்கிறேன். சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு அழகு படுத்திய அடுப்பங்கரையை பார்க்கிறேன். அவள் துணி துவைக்கும் கிணற்றடி கல், தேங்காய் அரைக்கும் அம்மிக்கல் பருப்பு திரிக்கும் எந்திரக்கல் எல்லாமே என்னை போலவே அனாதைகளாக கிடக்கிறது. மீண்டும் மரகதம் வருவாளா? தனது மென்மையான விரல்களால் தன்னை தொடுவாளா? என்று உயிரற்ற அந்த பொருட்களும் ஏங்குகின்றன. உயிரை பிடித்து கொண்டு படுத்து கிடக்கும் நானும் ஏங்குகிறேன். கல்லுக்கு தனது உணர்வுகளை பேசிவிட முடியாது. என்னால் முடியும் ஆனால் அதை கேட்பதற்கு தான் யாருமில்லை.

மூத்த மகன் சொல்லுகின்றான் அப்பா உங்களுக்கு வயசாகி விட்டது கண்ணும் காதும் முன்னே போல் இல்லை இந்த மாதிரி நிலையில் நீங்கள் என்னோடு சென்னையில் இருப்பது ரொம்ப கஷ்டம் நானும் வேலைக்கு போய்விடுவேன் உங்கள் மருமகளும் வேலைக்கு போய்விடுவாள் வீட்டில் தனியாக இருக்கும் உங்களை கவனிப்பது மிகவும் கடினம் இங்கு கிராமத்தில் உங்களை தெரியாதவர்கள் யாருமில்லை ஆத்திரம் அவசரம் என்றால் துணைக்கு வர நிறையப்பேர் உண்டு இங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தம்பி வீட்டில் வேண்டுமானால் சில நாட்கள் போய் இருங்கள் அவனுக்கும் ஆறுதலாக இருக்கும் என்று ஆக மொத்தத்தில் மூத்தவன் என்னை கைகழுவியதை வேறு விதத்தில் சொல்லி விட்டான்.

இளையவன் மட்டுமென்ன அண்ணன் காட்டிய வழியை மாற்றியா நடக்க போகிறான். அப்பா நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்காதீங்க உங்கள் மருமகளை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கொண்டே இருப்பாள் யாரோடும் ஒத்து போகும் சுபாவம் அவளுக்கில்லை என் தலையெழுத்து அவ்வளவு தான் என்று அவளோடு குடும்பம் நடத்துகிறேன். நீங்களும் அங்கு வந்து உட்கார்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம் வீடே போர்களமாகி விடும் என் நிம்மதி பறிபோய்விடும் நன்றாக யோசித்து எதையும் செய்யுங்கள் என்று நேரிடையாகவே பேசிவிட்டான் என் மகள் மட்டும் என்ன செய்வாள் புருசனுக்கு கட்டுப்பட்டவள் என் அப்பாவை வீட்டில் வைத்து கொள்ளலாம் என்று சொல்ல அவளால் தான் முடியுமா? மருமகன் தான் ஏற்றுகொள்வாரா? 

உறவுகள் சொந்த பந்தங்கள் அனைத்துமே சுமைகளை தூக்க தயாராக இல்லை நானும் ஒரு சுமைதான் என்று அப்போது தான் உணர்ந்துகொண்டேன் எனக்கு இளமை இருக்கும் போது இந்த சிந்தனை வரவில்லையே பிள்ளைகளை சுமையாக கருதியிருந்தேன் என்றால் இன்று அவர்கள் சிறகடித்து பறக்க முடியுமா? தனக்கென்று ஒரு கூடு குஞ்சிகள் என்று வாழமுடியுமா? இந்த நியாயத்தை யார் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு தகப்பன் பற்றிய எண்ணம் தீடிர் என்று வந்துவிடுகிறது. என் பிள்ளைகள் இரண்டு பேருமே ஒரு நாள் வந்தார்கள் அப்பா நாங்கள் சொந்த வீடு வாங்க போகிறோம் கையில் பணமில்லை வேறு காரியங்களுக்காக அலுவலகத்தில் கடன்வாங்கி விட்டதனால் லோனும் எடுக்க முடியாது நீங்கள் நமது சொத்தை வித்து பணம் கொடுங்கள் நீங்கள் பயிர் பண்ண முடியாமல் நிலம் வீணாகதானே இருக்கிறது. என்றார்கள் பெற்ற பிள்ளைகள் கண்கலங்கி நிற்கும் போது பெற்ற வயிறு கலங்கி விடுகிறதே

தம்பி நிலத்தை குத்தகைக்கு கொடுத்து தான் என் செலவுகளை பார்த்து கொள்ளுகிறேன் அதையும் விற்று விட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டேன் நாங்கள் இரண்டு பேர் இருக்கும் போது உங்களுக்கென்ன கஷ்டம் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்கள் நம்பினேன் ரத்தம் சொட்ட சொட்ட சம்பாதித்த நிலத்தை விற்று பிள்ளைகளுக்கு கொடுத்தேன் மகிழ்ச்சியோடு வாங்கி போனார்கள் போனவர்கள் போனவர்கள் தான் இரண்டு மாதம் வரையில் ஆளுக்கு ஆயிரம் என்று அனுப்பியவர்கள் திருப்பி அதை பாதியாக குறைத்து இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆக்கி விட்டார்கள் என் பிள்ளைகளின் கஷ்டம் எனக்கு புரிகிறது பாழும் வயிறுக்கு புரியவில்லையே அது இரண்டு நாளைக்கு ஒரு முறைமட்டும் பசித்தால் போதுமென்று இருப்பதில்லையே தினசரி பசி எடுக்கிறதே

இப்போது என்னை உங்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது அல்லாவா? உங்கள் வீட்டு பக்கத்திலோ எதிரிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட சாய்வு நாற்காலியில் என்னை போல மதிப்பில்லாத ஜீவன்கள் படுத்து கிடக்கலாம் அவர்களில் நானும் ஒருவன் அதனால் என்னை உங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். என்னை தெரிகிறதோ இல்லையோ இப்போது நாம் சொல்லுவது உங்களுக்கு புரிந்தால் நான்றாக இருக்கும். வயது ஏறி முதுமை வருவது என்பது எனக்குமட்டும் நடப்பது அல்ல பளபள கன்னமும் ஒளிபொருந்திய கண்ணும் ஒரு நாள் முதுமையினால் கோடுகளுக்குள் மறைந்து போகும். கைகள் நடுங்கி வார்த்தை குளறி தடுமாறவேண்டிய நிலை உங்களுக்கும் வரும் அப்போது என்னை போல் புலம்புனீர்கள் என்றால் கேட்பதற்கு பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் ஒருவாய் சோறும் ஒருமுழ துணியும் இல்லாமல் நீங்கள் செத்து போனபிறகு வருடா வருடம் உங்கள் திவசத்திற்கு பிள்ளைகள் அன்னதானம் செய்வார்கள் ஏனென்றால் அது அவர்களுக்கு விளம்பரம்.

திம்மக்கா -வயது... 101!

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம். 
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா. 
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும் 
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். 
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 101 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார். 
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார். 
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார். 
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார். 
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார். 
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார். 
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது. 
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல. 
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது. 
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம். 
100 வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.