பளபளக்கும் கிரானைட் தரை. தயங்கும் கால்களோடு அந்த குடியிருப்பில் உள் நுழைந்து சென்றால் லிப்ட் தானியங்கி கதவு எங்களை அனுமதித்து மூடி கொண்டது. அறையின் வாயிலில் குர்ரென்று ஒரு சத்தம். குளு குளு பெட்டியில் இருந்து (கேப்டன் பாஷையில் சொன்னால் ஐஸ் பொட்டியில் இருந்து).

பூட்டிய கதவின் அருகில் ஒரு கடையே வைக்கும் அளவுக்கு செருப்புக்கள். இடம் இல்லாதது ஒரு காரணம் என்றாலும், வெளியில் போட்ட செருப்பு காணாமல் போகாததன் நற்பண்பும் குறிக்கப்பட வேண்டும். கதவு திறந்ததும் குளிர் காற்றோடு குப்பென்று ஒரு மணம். நல்லதா கெட்டதா என்று இனம் பிரிக்க முடியாத மணம். புழுங்கிய துணியின் மற்றும் வியர்வையின் கூட்டணியில் துர்வாடை, செண்ட் போலே நறுமணம் என்று கலவையான மணம்.

சிறிய அறை. சுமாராக பத்துக்கு பத்து இருக்கலாம். அதில் மேலும் கீழுமாய் அடுக்கி வைத்த கட்டில்கள். அட,இது என்ன கலாட்டா. படுப்பது மட்டுமே போதுமா. வீடு என்றால் படுக்க மட்டுமா, உட்கார வேண்டாமா, சமைக்க வேண்டாமா, படிக்க வேண்டாமா, ஊரில் டென்ட் கொட்டகையில் பார்த்த அடிமை பெண் படம் ஞாபகம் வந்து சென்றது.

நிமிர்ந்து நிற்க முடியாமல் படுத்து கொண்டோ குனிந்து உட்காந்து கொண்டோ இருக்கலாம். இப்படி முதுகு எலும்பை தொலைத்து கூனி குறுகவா நாம் அந்நிய நாடு வந்தோம். சுய புலம்பலை பின்னுக்கு தள்ளி விட்டு மேலே தொடர்வோம்.

அறைக்குள் ஒரு பார்வை. ஐந்து-ஆறு ஜீவன்கள் அந்த அறைக்குள்ளே. சில பேர்கள் போர்வைக்குள் காணாமல்போயிருந்தார்கள். அதிர்ந்து பேசமால் படுத்து கொண்டு தொலைக்காட்சிகளில் ஓடும் வடிவேல் காமெடி சி.டி நூறு முறைக்கும் மேலாக பார்த்து இருந்தாலும் இப்போது தான் புதுசாய் பார்ப்பது போல் சுவாரசியமாக சிரித்து கொண்டு இருந்தார்கள். பின்னே, இங்கே இவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கே இது மட்டும்தானே?

ஒரு கட்டில் தான் நம் ராஜாங்கம். காலுக்கடியில் அமுத்தி அடுக்கிய பெட்டியிலே தான் நம் உடைமைகள். அவ்வளவு தான் அந்நிய தேச வாழ்க்கை.