முக்கிய செய்திகள்

Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Sunday, January 11, 2015

தமிழரின் அடையாளத்தை இழக்கும் நாம் !!


சமீபத்தில்தான்  இணையதளத்தில்  மதன் கமலிடம்  பேட்டி எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது வடஇந்திய பெயர்களின் மேல் சமீபகாலமாக தமிழர்கள் மோகம் கொண்டு இருப்பதை பற்றி கமல் சில வார்த்தைகள் கூறினார். தன் மகள் ஸ்ருதிக்கு கூட மின்னல் என்ற பெயரை வைத்திருக்கலாம் என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

சற்று சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்றே படுகிறது. நல்ல தமிழ் பெயர்களை வைக்க கூச்சப்படுகிறோமா நாம்?(என்னையும்  சேர்த்துதான் ) சற்றே சிந்தித்து பாருங்கள் .நம் வீட்டிலோ அல்லது நமக்கு தெரிந்த உறவினர் வீட்டிலோ சமீபத்தில் பிறந்த எத்தனை குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை வைத்துள்ளோம?;. கண்டிப்பாக திரிஷா ஷீலா அபினாஷா பமீலா ஹம்சிதா   ராகேஷ்,அஸ்வந்  சஞ்சய்,  என்ற பதில்கள்தான் அதிகமாக வெளிப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிகளிலும் இதே போன்ற பெயர்கள்தான் நிறைய உள்ளன. இதில் எவையுமே தமிழ்ப் பெயர்கள் இல்லை என்பதைப் பற்றி தமிழகப் பெற்றோர்கள் பலரும் கவலைப்படுவதில்லை. 

உசிலம்பட்டியிலும் கொண்டலாம்பட்டியிலும் கூட கபீஷ் மற்றும் கூபீஷ்கள் இருப்பது ஒரு வகையில் கலாச்சார அழிவு என்றே சொல்லத் தோன்றுகிறது. கலாச்சார சீர்கேடு அல்ல.கலாச்சார அழிவு.


சமீபத்தில் அறை நண்பர்களுடன் உரையாடல் அப்துல் கலாம் பற்றியது ,முந்நாள் ஜனாதிபதி தமிழனாகி கடைசியில் தமிழை பற்றி உரை  வந்தது ,நண்பர் கேட்டார் தமிழை வளர்க்க 10 வழிகள் சொல்லுங்கன்னு .......அத்துடன் அனைவரும் உரையாடலை முடித்துக்கொண்டோம் ,கேட்டது வேறு மொழி பேசுபவராக இருந்தால் தரும் விளக்கம் அவரையும் தமிழ் கற்க தூண்டியிருக்கும் ......

இதை உடனே கொச்சைப்படுத்தி தமிழ் வெறி என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக நமக்கு நம்முடைய பெயர்களின் மேல் உள்ள கூச்சங்களை மறுபரிசீலனை பண்ண வேண்டியது அவசியம். பெயரில் என்ன இருக்கிறது என்ற வறட்டு வாதங்களை தாண்டி குறைந்தபட்சம் தமிழில் இல்லாத எழுத்துக்களை பயன்படுத்தி பெயர் வைக்கமாட்டோம் என்றாவது ஒரு முடிவுக்கு வரலாமே?


ஸ,ஷ என்ற வார்த்தை இருந்தால் அந்த பெயர் மாடர்ன் பெயரா?

அல்லது நல்ல தமிழ் பெயர்களுக்கு பஞ்சமா? தமிழ் அழிகிறது என்று வருத்தப்படும் தமிழ் அறிஞர்கள் நல்ல தமிழ் பெயர்களை பண்டைய இலக்கியங்களில் இருந்தோ அல்லது எங்கிருந்தாவதோ தொகுத்து வெளியிட்டால் என்ன? இதை பற்றி மற்ற தமிழர்களின் கருத்து என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன்


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?
இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. 

ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
            இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 
            நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 
            அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 
நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். 
            இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா? 
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா? 
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 
            உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா! 
உலகம் போகிற போக்கு சரியில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், தமிழ் மீதும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் அக்கறையுள்ளவர்கள், தன் இனத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பெயர்கூட தமிழில் இல்லை என்ற நிலையை ஏற்கமாட்டார்கள். மக்களின் மன உணர்வுக்கேற்ப தமிழில் புதுமையான பெயர்களை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
தமிழறிஞர்கள்தான் இதனைச் செய்யவேண்டும் என்பதில்லை. தமிழ் மீது அக்கறை கொண்ட யாரும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். அழகான - புதுமையான தமிழ்ப் பெயர்களை உருவாக்குவோம். தமிழ்க் குழந்தைகளுக்கு ‘ஃபேஷனான’ தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்.
இங்கே சில பெயர்கள்
தூயா, நறுமணா, கவின், கதிர்,




மகிழ், நிலா, மெல்லிதழ், நலன்,
நித்திலா, இன்பா, இதயா.
நீங்களும் இதுபோன்ற பெயர்களை அனுப்பலாமே?
தமிழர் இல்லங்களில் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்ட இணைந்து செயல்படுவோம்.

Monday, April 30, 2012

இப்படிஇருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள்வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச்சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக்கிழிக்கவேமாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா சுவர்க்கடிகாரமும் நிச்சயம் இடம்பிடிச்சிருக்கும்..! ரொம்பப்பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டுஇருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகாசைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணிநேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்துவைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித் தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கைவைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப்பிள்ளைகள் இருந்தா, ஒரேமாதிரி ட்ரெஸ் தச்சுக்கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா,கருவாட்டுக்குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்தி விடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ..கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல்போனோ, டி.வி. ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்லமாட்டீங்க..! 

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறிவகையறாஇருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர்குக்கர், காப்பிமேக்கர், வாக்குவம்கிளீனர், பிரெட்டோஸ்ட்டர், மைக்ரோவேவ்அவன், கேஸ் அடுப்புலக்ரில்இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்கமாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறு பண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர்பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க.. 

20. இந்த விவரம்லாம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்குசொல்லனும்னு நெனைச்சி மனசு பரபரக்கும்.. 

தமிழன் பா.. 

Monday, April 23, 2012

உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !--" உத்திரமேரூர் "

ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..