முக்கிய செய்திகள்

Sunday, July 1, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -8


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html


துபாய் சூரியன்!!! சரிந்து, மெல்ல தவழ்ந்து மேற்கை முத்தமிட்டது. இரை தேடி அலுவலகம் வந்து அடை பட்ட மனித பற*வைகள், தம் கூட்டுக்கு செல்லும் ஆயத்ததில் மும்முரமாய் இருந்தனர். நாளை வந்தவுடன் முதலில் இந்த வேலை முடிக்க வேன்டும் என்று மனதில் குறித்துக் கொண்டு, வண்டிகள் நோக்கி தளர் நடை இட்டனர். எங்களுக்காக காத்து இருந்து எல்லோரும் அமர்ந்ததும் மெதுவாய் வண்டி கிளம்பியது.

வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் ஸ்விட்ச் போட்ட மாதிரி தலை பின்னோக்கி சாய்த்து, ஒரு சுகமான குட்டி தூக்கம். உச்ச ஸ்தாயியில் சில குறட்டை வேறு. ஏன் இது. சுவாரசியமாய் வெளியில் வேடிக்கை பார்க்க நம் ஊர் போல சுவரொட்டிகளோ, பேனர்களோ இல்லை, மற்றது இந்த ஊர் சீதோஷணம், பளீர் வெயிலும் சூடும், இமைகளை வந்து மூடி விடும் நம்மைக் கேட்காமலே.

சக பிரயாணிகள் அத்தனை பேரும் உறக்கத்தில். டிரைவரை தவிர ( நல்ல வேளை) என்னையும் தவிர. முதல் நாள் அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது, வீட்டு ஞாபகம். பிரிந்து வந்த உறவுகள் எல்லாம் மனக்கண் முன்னால் ஒடியது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழி மனதில், உடன் இருந்த போது தோன்றாத பாசம் வாட்டி, இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆவல் தூண்டும். பணமோ, நேரமோ, தூரமோ மாத்திரம் அல்லாது, அலுவலக அனுமதி என்னும் உச்சகட்ட தடைக்கல் நம் இயலாமையை ஏள*னம் செய்யும்.மீண்டும் அதே சாலை, வழுக்கிக் கொண்டு ஒடும் வண்டிகள். வழ*க்கமான
வாகன நெரிசல். எல்லா சாலையும் ஒரே மாதிரி தெரியுது. உள்ளூர் ஏரியாக்களும், சாலை பெயர்களும், நேற்று சுட்ட வடை போல* வாயில் நுழைய மறுக்கிறது. முதலில் தோன்றும், இது எல்லாம் தெரிந்த ஒட்டுனர் பெரிய பிஸ்தா வென்று. ஆறு மாதம் ஆனால் நமக்கே இதெல்லாம் தெரியும் என்பது அப்போது தெரியவில்லை

ரோடில் போகும் போது, போக்குவரத்து பற்றி கொஞ்சம் விரிவாய் பார்ப்போம். சாலை வழியே பிரதானம். பொது போக்குவரத்து பஸ்களும், டாக்ஸிகளும் கவைக்குதவாததால், நம் கால்களையே.... சாரி நம் கார்களையே நம்ப வேண்டிய நிலை. அதனால் தான் ஒற்றை ஆளாய் உட்கார்ந்து லாரி சைசில் உள்ள வண்டி ஓட்டி கொண்டு போவார் நம் அமீரகத்தின் ஆள்.ஒற்றை ஆளாய் உட்கார்ந்து ஒட்டும் வண்டியின் எண்ணிக்கைதான் சாலை நெரிசலின் பிள்ளையார் சுழி.

ஓட்டுனர் உரிமம், அதாங்க நம்ம ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது ரொம்ப கஷ்டம். அழ அழ வைத்து பின்னர் தான் கொடுப்பார். ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றால் பயிற்சி பள்ளிக்கு சென்று அட்மிஷன் வாங்க வேண்டும். அனுமதிக்கு முன் உங்கள் கண்ணை பரிசோதித்து கண் நல்லா தெரியுது என்ற சான்றிதளோடு செல்ல மறக்க கூடாது.

முதலில் சாலை விதி முறைகள் மற்றும் சாலை குறியீடுகள் எல்லாம் வகுப்பறையில் சொல்லி கொடுக்கப்பட்டு பின்னர் வண்டியில் ஏற வேண்டும். இதில் இரு நிலை. முதலில் நான்கு சுவர்களுக்கு உள்ளே ஓட்ட தெரிகிறது வண்டியை நிறுத்த தெரிகிறது என்று நிச்சயம் ஆனதும் சாலைக்கு வர அனுமதி. சாலையில் வாத்தியாரோடு பாடம் நடக்கும். பின்னர் வாத்தியார் (எம்.ஜி.ஆர்.அல்ல) ஓகே என்ற உடன் நமக்கு பரிட்சை.

எப்படி தான் அந்த தேர்வு பயம் கொண்டு வருவார்களோ அந்த ஆண்டவருகே வெளிச்சம். எத்தனை பெரிய சூரனும் படபடத்து பயத்தில் மூழ்குவான். மிக குறைவாய் பேசும் பரிசோதகர், எளிதாய் நம்மை பெயில் செய்வார். எட்டு பத்து தேர்வு எழுதியும், ஒரு லட்சம் ரூபா செலவழித்தும் இன்னும் கிடைக்கல என்ற மனித புலம்பல்கள், எங்கும் நிறைந்து இருக்கும்.

சரி ஏன் இத்தனை கெடுபிடி.

வண்டி வாங்கி ஒட்ட துவங்கிய முதல் இரு மாதத்தில், நாம் எப்படி ஓட்டினோம். அதுவே ஒரு இரண்டு மாதத்தில் பழகி, அனாயாசமாய் இது ஒரு வேலையே இல்லை என்று நினைத்தோம் அல்லவா. வண்டி ஓட்ட மூளையை பயன் படுத்தாமல், தன்னிச்சை உணர்வுக்கு விட்டு விடும் போது, கார் தானாய் ஓடும் அல்லவா. அப்படி ஒரு உயர்ந்த நிலை வரும் வரை உரிமம் இல்லை, உக்கி போடு தான். 120 கீ.மீ. வேகத்தில் செல்லும் சாலையில் முதல் நாளே நாம் ஓட்ட வேண்டாமா. கத்துகுட்டிகளின் தவறு அவர்களை மட்டும் அல்லாது, அடுத்தவரையும் கொல்லும் அல்லவா.

கார் வாங்குவது கத்திரிகாய் வாங்குவது போலதான். பழையது, புதியது, எல்லாம் எளிதில் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும், புதுப்பித்து 63 டெஸ்ட் பாஸ் செய்தாலே வண்டி ஓட்ட அரசு அனுமதி கிடைக்கும். அதாவது புளக்கத்தில் உள்ள வண்டிகள் எல்லாம் தங்க கம்பிகளே. எனவே தைரியமாக போய் வண்டி வாங்கலாம். ஒட்டை உடைசலை நம் தலையில் கட்டும் வேலை நடக்காது.

நம் ஊரில் லெக்ஸஸ் கார் வாங்க முடியுமா. ஜாகுவார், ரேஞ்சு ரோவெர் வாங்க முடியுமா. மிக பெரிய செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிற ஒரு கோடி ரூபா கார் இங்கே கொஞ்சம் இஷ்டமும் கொஞ்சம் கஷ்டமும் பட்டாலே போதுமானது. நம்ம ஊர் கணக்கிலே பிரமாதம் என்று கருதும் லான்செரும் டொயோட்டா கொரேல்லாவும் தான் இங்கே ஆரம்பம்.

துபாய் மற்றோரு கோண்த்தில் பார்த்தால்(2000-2008) புது பணக்காரன் என்றும் சொல்லலாம். சிலாகித்து சொல்ல வரலாறு இல்லை. 1950-களில் தோண்டி எடுத்த எண்ணையில் வண்டி ஒடும் என்று கண்டு பிடித்தவன் பிடி புதையல் என்று கொடுத்த வரம் இது.

பாலை வனம் உண்டானது எப்படி? வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் "ஞே" என்று விழித்த போது, காது முறுக்கி, "ஆ" என்று அலறவிட்டு, வாத்தியார் சொன்னது "வளமையான காடுகள் மண்ணில் புதைந்ததனால், வறட்சி ஏற்பட்டு பாலைவனம் ஆனது. புதைந்த காடுகளே பெட்ரோலியம் பொருட்களாக உருமாறி, .... தெரியுதா சோமாரி!!!

சில சமயம் இப்படித் தோன்றும். ஒரு காலத்தில், சில பல* நூற்றாண்டுகளுக்கு முன் நிச்சயம் துபாய் பூத்து குலுங்கி இருக்க வேண்டும். உயர்ந்த மரங்களும், பச்சை இலைகளும் நிறைந்து நம் ஊர் போல் இருந்து இருக்க வேண்டும். பின்னர் காடுகள் பூமி உள் சென்று பெட்ரோலாய் விளைந்து (??) இருக்க வேண்டும். இன்று அடர்த்தியாய் உள்ள கேரளா நாளை பாலைவனம் போல் ஆகுமோ ???? துபாய் அப்போது பச்சையாய் இருக்குமோ??? வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ????

கடுகை துளைத்து ஏழ் கடலை அடக்கிய குறள் நம் தமிழுக்கு அழகு என்றால், சாலையை துளைத்து ஸ்டேஷனை அடக்கிய மெட்ரோ துபாய்க்கு அணிகலனே. சாலைக்கு மேலே சில, பூமிக்கு கீழே பல என்ற ரயில் இருப்புப் பாதைகளும், ஸ்டேஷன்களும் ஜொலி ஜொலிக்குதே, கண்ணைப் பறிக்குதே!!.
ஆனால் துபாய் சூட்டில் ஒரு பிரச்சனை உண்டு. ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் அரசியல் உள் குத்து ஒனறும் இல்லை) நடந்தாலோ, நின்றாலோ தலை சுத்தி விடும். பாருங்களேன் இல்லை என்றால் குளுகுளுவென சாலை ஓர பஸ் ஸ்டாப் தேவையா. பின்னர் எப்படி ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்து நம் இலக்கு அடைய முடியும் என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்க வேண்டியது தான்.

4 comments:

  1. துபாய் மட்டுமல்ல நம்மை போன்று சொந்த நாட்டை விட்டு வந்தவர்களுக்கு அணைத்து நாடுகளுமே சாபமே

    ReplyDelete
  2. துபாய் மெட்ரோ ஆரம்பிப்பதற்கு சிங்கப்பூர் சென்று அங்கு மெட்ரோவில் வேலை செய்தவர்களை அழைத்துவந்ததாக கேள்வி.
    இன்று வரை புரியாத கேள்வி...பாலைவனத்தில் அவ்வளவு உயர கட்டிடங்களுக்கும்,வீடுகளுக்கும் தேவை என்ன? குளிர்சாதன வீட்டில் தங்கணும், மகிழுந்தில் போகனும் இப்படி பல.

    ReplyDelete
  3. உங்களுடய இந்த கட்டுரை படிப்பதற்கு செம இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  4. உங்களின் எழுது நடை சிறப்பாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள் .... வாழ்த்துகள்.......

    ReplyDelete