முக்கிய செய்திகள்

Sunday, June 10, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -2

பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html?spref=fb


பாகம் -2

ஃபாரின் காசால் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் உயர்த்திய சில வெற்றியின் கதைகள் உண்டு, அதே போல, ஃபாரின் வந்தும் நிறைவேறாத கனவுக்கதைகளும், வராமலேயே அந்த முயற்சியில் தோற்று போன கண்ணீர் கதைகளும் உண்டு.

சரித்திரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் பெயர் போன நம் இந்திய தேசத்தில் குடும்ப பொறுப்புக்களும் பாரங்களையும் தன் கடமை என எண்ணி, மகிழ்வாய் பொறுப்பாய் வாழும் எத்தனை எத்தனையோ நெஞ்சங்களின் உண்மையன்பு நமக்கு தெரியும் தானே.


அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-jumeirah-beach-hotel.jpg

கட்டிக் கொடுத்து கரையேத்த இரண்டு பெண்கள், குடும்பத்துல சம்பாத்தியம்ங்கிறது நான் தான் ….. எனக்கும் சரியான படிப்பு இல்லை, வேலையும் இல்லை. இனி என்ன செய்யலாம் என்று நினைத்த போது, திகைப்பானது… வாழ்வே கேள்வி குறி ஆனது. ஆனாலும் இந்த கஷ்டம் ஊருக்கும் உறவுக்கும் பேசும் செய்தியானது. ஊரும் உறவும் இது குறித்து உற்சாகமாக அல்லவா பேசுகிறது. சமுகத்தின் கேலிப் பேச்சு சிலது, இதயத்தை துளைக்கும். ஆழமாய் சென்று ஆற முடியாத ரணங்கள் ஏற்படுத்தும்

அப்போது தான், அக்கம் பக்கத்து வீட்டு அனுபவம், அன்னிய தேச சம்பாத்தியம் பற்றி கேட்ட கதை தீர்வு போலே தோன்றும். எங்க பையன் துபாய்ல வேலை செய்யறான், மாசத்துக்கு இத்தனை பணம் அனுப்புறான் என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகள்.

அப்படியா !!! அவ்வளவு வருமானம் வருமா… பரவாயில்லையே என வாழ்வு சிறிது நம்பிக்கை தரும்.

சரி எப்படி போவது. எவ்வளவு பணம் வேண்டும், என திக்கு தெரியாமல்.... அங்கும், இங்கும், இங்கும், அங்கும் சுற்றி ஒரு வழியாக ஒரு பயணத் தரகர் அறிமுகம் கிடைத்துவிடும். அவரை சந்திக்க, அவரின் அலுவலகத்தின் உள்ளே போகும்போதே, ஆஹா… ஏதோ சொர்க்கத்தின் கதவுகளையே திறந்து கொண்டு போவது இருக்கும்.

ஆச்சரியம், பிரமிப்பு அகலாமலேயே அவரின் அலுவலகத்தில் கால் குழையும்...... கனவுகளை விற்பனை செய்யும் அந்த ஆபிஸ் அறையில் அவரது குளுகுளு அறையும்,சுவரில் உள்ள ஆகாய விமான படமும், தலை சுற்றி ஏதோ ஒரு புதிய உலகுக்கு இழுத்து செல்லும்.

அது ஏன், என்னன்னு தெரியல எல்லா ஏஜெண்ட் ஆபிஸ்லயும் ஒரு பொம்மை விமானம் இருக்கும். … ஃபாரின் மேன் பவர் ஆபிஸ் என்றாலே அதற்கென சில அடையாளங்கள்… வரவேற்பறையில் கூட்டமாய் சில மனிதர்கள். நம்பிக்கை முகத்தில் ஒளிர் விட உலகையே வென்ற தோரணையில் அங்கே அமர்ந்திருக்கும் பயணம் செய்ய காத்திருக்கும் கூட்டம். இந்த கூட்டத்தில் நிச்சயம் ஒரு ப்ரஹஸ்பதி இருப்பார். அவர் முன்னமே இது போல் பல நாடுகள் சுற்றிய உலகம் சுற்றும் வாலிபர்.

அவரையும் அவர் பேச்சையும் கேட்க ஒரு கூட்டமே அவரருகில் நிற்கும். அவரும் சளைக்காமல் 24 மணி நேர செய்தி சேனல் மாதிரி ஒரே செய்தியை பலருக்கும் பட்டுவாடா செய்வார். அவர் அளந்து விட்ட கதைகள் நாம் முந்தைய பாகத்தில் விவாதித்தது. எது... ????? பெட்ரோலும், பிரியாணியும்.

அவர் அளந்து விடும் கதைகளில் மிகப் பெரிய சுவாரசியம் இருக்கும். இடையிடையே புரியாத பாஷயில் பேசுவார். விசா, இக்காமா என்று புதிய வார்த்தைகள் சொல்லி மசாலா தடவி… போட்டு தாளிப்பார். விசா இல்லேண்ணா, அந்த நாட்டுல வாழ முடியாது. உசிருக்கு எப்படி மூச்சுக்காத்தோ, அதே மாதிரி ஒரு நாட்டுல தங்குறதுக்கு விசா… இப்ப புரியுதா… என தத்துவ ரீதியில் அடித்து விடுவார். 

நாடுகளை பற்றியும், நடப்புகளை பற்றியும் விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வேறு வேறு நாட்டின் பல காசுகளை (நோட்டையும் தான்) எடுத்து காண்பிப்பார். இந்த ரூபாய் ஒண்ணு குடுத்தா, நம்ம ஊர்ல, 10 ரூபாய், இதோ இருக்கே, இத குடுத்தா, நம்ம ஊர்ல, 130-140 ரூபாய் என்று .......... விளக்கம் தந்து பாடம் எடுப்பார். வெளி நாட்டு கரன்ஸியை …,.ம்… பாருங்க… தொட்டு பாருங்க என நம்மிடம் கொடுப்பார். அந்த காகிதத்தை வாங்கியதும் ஏதோ ஒரு உணர்ச்சி, புல்லரித்து சந்தோசம் பொங்கும்.

அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-dubai-desert.jpg

சரேலென, சட்டை பையில் கை விட்டு, ஃபாரீன் சிகரெட் எடுப்பார். ஸ்டைலாய் பத்த வைத்து, நமக்கும் தானம் செய்வார். நீளமாய் வெள்ளையாய் ஒரு ஸ்டைலாய் இருக்கும். தீ பற்ற வைக்க ஒரு லைட்டர் வைத்திருப்பார். ஸ்டைலாக ஒரு சர்க்கு சர்க்கி… தீயில் பற்ற வைத்து குப்குப்பு என சிக்கு புக்கு ரயில் வண்டி ஓட்டுவார்.

ஊரில் செய்யது பீடி குடித்தவர் சொல்லுவார், ம்… இப்போல்லாம், "ஃபாரீன் சிகரெட் தான் ஒத்துக்குது. இல்லேன்னா, தொண்டை பிடிச்சிகுது". அவர் கொடுத்த சிகரெட்டை புகைத்து கொண்டே, கனவுகளோடே இவன் சிகரெட் பிடிப்பான். துளைத்து துளைத்து கேள்விகள் கேட்பான். அவர் சட்டை பையில் திருப்பி வைத்த, அந்த நோட்டுக்களையே பார்த்து கொண்டிருப்பான். அவன் மனதில் தோணும் .....நாமும் இதுபோல் நிறைய சம்பாதிக்கணும் ......... ஃபாரீன் சிகரெட் வாங்கி புகையை ஸ்டைலா வெளியே ஊதித்தள்ளணும்.....

உள்ளே சென்றால் ஏஜெண்ட், அவர் வெளியில் பார்த்த ஃபாரீன் ரிட்டர்ன்னுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. நம்பிக்கையையும் கனவையும் டன் டன்னாக டண்டணக்கா டணக்குடண்ணா என கூவி கூவி விற்பார்.
முக்காலே மூணு வீசம் தொலைபேசியிலே பேசுவார். நமக்கு சொல்ல விரும்பும் சேதிகளை அவர் போனில் பேசுவார். (இந்த காட்சி நம் கவுண்டமணி சூரியன் படத்தில் பேசும் டகால்டி தொலைப்பேசி காட்சி போலவே இருக்கும்). ஆனாலும், ஒட்டு கேட்டது உண்மை என்று, அப்புராணியாய் நம்பியும் விடுவோம்.

நாம் அவரை உன்னிப்பாக கவனிக்கிறோமா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, தாறுமாறாக, என்ன என்னவோ பேசுவார். "நாளைக்கு ஐம்பது பேர் சவுதி போயி ஆகணும், .... என்னது, விசா கிடைக்காதா, ஹலோ, கிடைக்கலேன்னா, சவுதி ராஜா கிட்ட சொல்லு, கொல்லிமலை சோலமலை சார் கண்டிசனா சொல்லிட்டாருன்னு... ஆமா .... நாளைக்கே வந்தாகணும் ....... ஊர்ல எல்லாரையும் நாளைக்கே வர சொல்லிட்டோம்ல .....நமக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு." அது என்னிக்கும் மாறாது....


ஃபோனை வைத்து விட்டு நம்மிடம் சொல்வார்… கவர்மெண்டுல நமக்கு நல்ல செல்வாக்கு. இப்ப பாருங்களேன், நான் பேசுனது இமிக்ரேஷன் ஆபிஸ் டைரக்டர் கிட்ட…!!!! அப்படியா என அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அந்த ஊருக்காரருக்கு தமிழ் தெரியுமா, இல்ல கொல்லிமலை சோலமலை எல்லாம் விளங்குமா என கேள்வி கேட்காமலேயே இருப்போம்.

அவர் பேச்சு இன்னும் தேன் தடவியது போலே இருக்கும். தம்பி, இப்போ நீங்க குடுக்கற இந்த பணம், செலவு இல்ல, முதலீடு என்று. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், பயணம் நிச்சயம். ஊருக்கு போன 8-10 மாசத்துலயே அங்க லட்ச ரூபாய் சம்பாதிச்சுடலாம். நாளைக்கே பணத்தோடு வந்துடுங்க...... 
அப்புறம் சீரியசாய் பைல் எல்லாம் உருட்டு… ஏதோ ஒரு பேப்பரை உருட்டி விட்டு சொல்வார். பரவாயில்லையே நீ அதிர்ஷ்ட சாலிதாம்பா. வர்ற சனவரில அடுத்த பேச்சுல (batch) அனுப்பிடறேன், நீ காச மட்டும் டைமுக்கு வந்து கட்டிடு..

அப்புறம் என்ன, பளபளப்பாய் உடை அணியலாம், பாரின் செண்ட் போடலாம். விதம் விதமாய் உண்ணலாம். சமுதாய மதிப்பு பெருகும். வீட்டின் கடன்களும், கடமைகளும் ஒரு ஐந்து வருடத்தில் முடித்து விடலாம். இதை விட வேறு என்ன வேண்டும். லேசாக கண்ணை மூடினால், புகையுடன் கூடிய கனவுதான்...........

இது போக, ஒரு 1-2 வருசத்துல, ஊருக்கு திரும்பி வந்தீன்னா, ஊர்க்கார பய அம்புட்டு பேரும், தன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, கல்யாணம் பண்ணிக்கோன்னு வரிசைல வந்து நிப்பானுவ. கனவுகளை விற்றுக் கொண்டே, கல்யாண பேச்சை கொணர்ந்து, பையனை வளைத்து விடுவார். பையனின் முகமும் 100 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகும். இதையும் கவனித்து உபரியாய் இன்னும் கூட சொல்வார்… தம்பி, எல்லாத்துக்கும் நேரம்ன்னு ஒண்ணு இருக்குது… இப்போவே கல்யாண களை வந்துடிச்சி பாருங்களேன்… எனவும் சொல்லுவார்.

அதே மப்பில் திரும்பி வந்து, கடனை, உடனை வாங்கி, காடு கரையை வித்து, எப்படியோ பணம் தேத்தி, பாழாய் போன ஏஜெண்டிடம் தந்து… பின்னர் வெந்து நொந்து ஏமாந்தவர் என நிறைய பேர். ஏமாற்றத்தில் துவண்டு வாழ்க்கையையே தொலைத்தவரும் உணடு. ஏமாற்றப்பட்டது கூட மறைந்து விடும்… சில ஏச்சுக்கள் மட்டும் அப்படியே மனதில் நிற்கும்…. 'எனக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் பாரின் போற மூஞ்சியா' என்ற பொறாமையின் உச்சகட்ட வசவுகளையும் கேட்டு …. உண்மை என வாடிய மலர்கள் பல.

இதை விட கொடுமை. பயணம் எல்லாம் ஏற்பாடு ஆகி வீட்டில் எல்லாம் பிரியாவிடை பெற்று ஜம்மென்று கிளம்பி விடுவார். "இன்னைக்கு சென்னை பம்பாய் ப்ளைட், நாளை மறுநாள் பம்பாய்ல இருந்து நேர பாரின்". சில சமயம் நடப்பது என்னவோ பம்பாய் சென்று மாத கணக்கில் காத்திருக்கும் கொடுமை உண்டு. அங்கேயும் பெரிய கும்பல் இருக்கும். 
நம்மைப்போல ஒரு குரூப்பு ஏற்கனவே அங்கிருக்கும். நிறைய நம்மை போலவே ஆட்கள் உண்டு. விசா ஒன்றிற்காக வாழும் ஒரு கூட்டம், பயணத்தின் ஒரு கட்டம். காலை விடிந்தால் இன்று விசா வரவேண்டும் என்று பிரார்த்தனைகள்.

போயிட்டு வாரேன் என்று சந்தோசமாய் சொல்லி விட்டு செல்லும் பக்கத்து அறை தோழன் கண்ணில் நிறைவான். சரி… இவன் இன்று!!! நான் என்று …!!!!என்ற ஏக்கம். இந்த நிச்சயமிலாத நரகத்தில், சில காலம் வாழ்ந்த நிகழ்வுகளும் உண்டு. எப்படியோ ஒரு வழியாக விசா வந்துவிடுகிறது. வாங்கிய விசாவுடன் துபாய் செல்லும் அந்த ப்ளைட்டில் நாமும் செல்வோமா… வாருங்கள் டிக்கெட் எடுக்காமல்… விசா வாங்காமல் அவனோடு சென்று துபாய் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்….


(தொடரும்.........)

2 comments:

  1. இந்த Word Verification ஐ தூக்குங்க பலர் படிச்சிட்டு அப்படியே போய்விடுவாங்க.
    அப்புறம் மேலே உள்ள லிங்கை சொடுக்கினால் ஏதோ ஒரு பக்கமும் சேர்ந்து வந்து தொல்லை கொடுக்குது அதையும் முடிந்தால் மாற்றவும்.

    ReplyDelete
  2. சிவா! சான்சே இல்ல.. செம செம :-)

    நீங்க எழுதியதைப் படித்து ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது எனக்கு, நிஜமாகவே. எக்சலன்ட் ரைட்டிங். சும்மா டெம்ப்ளேட் கமெண்ட் என்று எண்ண வேண்டாம்.. நிஜமாக கலக்கலாக இருந்தது.

    ரொம்ப நாள் முன்னாடியே புக்மார்க் செய்து வைத்து இருந்தேன்.. இன்று தான் படிக்க முடிந்தது. ரணகளமா இருக்கு. என் மனமார்ந்த பாராட்டுகள்.

    உங்க எழுத்துக்கள் பார்த்து எனக்கு பொறாமையா கூட இருந்தது :-)

    ReplyDelete