முக்கிய செய்திகள்

Thursday, May 31, 2012

போய்ச் சேராத பயணங்கள்

ஒரு நாடு... நாமெல்லாம் அதிகம் கேள்விப்படாத ஏதோவொரு நாடுன்னு வச்சிக்குங்களேன். அந்த நாட்டுல என்ன, "விசேஷம்'னா, அங்க விளையற பயிர்களிலேயே, சுண்டைக்காய் தான் ரொம்பச் பெருசு. வேற எந்த பயிருமே அதைவிட சிறுசு தான். இப்படி இருக்குறப்போ, நம்ம நாட்டுல இருந்து, பெரிய மனுஷர் ஒருத்தர், ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க, அந்த நாட்டுக்குப் போறார். நல்ல அழகான அரங்கம்; பிரமாதமான கூட்டம். நம்ம தலைவர் தான், மிக முக்கிய விருந்தினர். அவருக்கு மாலை, மரியாதையெல்லாம் ஏக தடபுடலா நடக்குது. அந்த நாட்டுக்காரர் ஒருத்தர், நம்ம தலைவரை அறிமுகம் செய்து வைக்க வர்றாரு... "நண்பர்களே... தலைவர் பத்தி சொல்லியே ஆகணும்; இவரை மாதிரி ஒருத்தரைப் பார்க்கறதே ரொம்ப அபூர்வம். இவர் செய்திருக்கிற பணிகள் எல்லாம் சொல்லி மாளாது. சுருக்கமா சொல்லணும்னா, இவர் ஒரு சுண்டைக்காய்' என்றார்.

நம்ம தலைவர் அப்படியே, "ஷாக்' ஆயிட்டாரு. இருக்காதா பின்னே...? அத்தனை பேர் முன்னால, தன்னை அவமானப் படுத்திட்டாங்கன்னு, அவருக்கு எக்கச்சக்க கோபம். மேடையை விட்டு, இறங்கறதுக்கு போயிட்டாரு. மேடையில இருந்தவங்க, கீழ உட்கார்ந்துக்கிட்டு இருந்தவங்கன்னு யாருக்கும் ஒண்ணுமே புரியல. அறிமுகம் பண்ணி வச்ச அந்தப் பேச்சாளர் மீண்டும், "தலைவர் கோவிச்சுக்க கூடாது; நாங்க ஏதாவது தப்பா சொல்லியிருந்தா, தயவு செஞ்சி மன்னிச்சிருங்க. நாங்க ஒத்துக்கிடறோம். நீங்க உண்மையிலேயே ஒரு சுண்டைக்காய் தான்...' என்றார். தலைவர் நேரே மைக்கிட்ட வந்தாரு. "யாரைப் பார்த்து சுண்டைக்காய்ன்னு சொல்றே? இன்னொரு தரம் அப்படி சொன்னே... நடக்கறதே வேற'ன்னு, "வெறித்தனமா' அதாவது, இயல்பா கத்த ஆரம்பிச்சுட்டாரு. என்ன நடந்ததுன்னு புரிஞ்சிருக்குமே? அந்த நாட்டை பொறுத்த மட்டும், சுண்டைக்காய் தான் ரொம்பப் பெரிசு. ஆனா, இங்க இருந்து போனவருக்கு, பூசணிக்காய் தான் பெரிசு. ஏன்னா, இவரு பூசணிக்காயை பார்த்திருக்காரு. அதனால, இவருக்கு சுண்டைக்காய் சின்னதுன்னு தெரிஞ்சிருக்கு. அந்த நாட்டுல இருக்கிறவங்களும், பூசணிக்காய்ன்னு ஒண்ணு இருக்கு; அது சுண்டைக்காயை விடவும் ரொம்பப் பெரிசுங்கிறதை புரிஞ்சுப்பாங்க... எப்போ? அவங்களே பூசணிக்காயை நேரில் பார்க்குறப்போ இல்லையா?

எதுக்கு இந்த கதை இப்போ? நம் இந்தியாவில், குறிப்பா தமிழகத்துல, இதுதான் இன்றைய நிலை. சுண்டைக்காய்களைத் தான் நாம் மிகப் பெரியதாகப் பார்த்து, பிரமித்துக் கொண்டிருக்கிறோம். "பெரியோரை வியத்தலும், இலமே... சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே' என, பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, உலகுக்கெல்லாம் பறை சாற்றியது நம் தமிழ்மொழி. ஆனால், இன்றோ? உயர்ந்த சிந்தனை, உலகளாவிய பார்வை, ஊருக்கு நல்லது என்றால் உலகமே எதிர்த்து நின்ற போதும், உரக்கச் சொல்லும் உளத்திண்மை, உண்மைக்காக உயிரையும் தரத் துணியும் உத்தம குணம் எல்லாம், குயில் பாட்டுல பாரதி சொல்வதைப் போல, "பொய்யாய்க் குனவாய்ப் பழங்கதையாய் போனதுவே...' யார் காரணம்? நாம் தான் காரணம். எது நம்மை இப்படி மாற்றியது. "மூளைச் சோம்பல்!' இது என்ன புதிதாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இந்தச் சொல் வேண்டுமானால், புதிதாக இருக்கலாம். இந்தச் செயல் நம்மில் மிகப் பெரும்பாலோர், மிக விரும்பிச் செய்து வருவது தான். மூளைச் சோம்பல் தான், நம்மிடையே இன்று வெகு வேகமாக பரவி வரும், கொடிய நோய். ஆழமான நூல்களைப் படிப்பதில்லை, அறிவார்த்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில்லை, தீர்க்கமாக யோசித்து, தீர்மானமாகச் செயல்படுவதில்லை என்பதில், நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம். எதையும் மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, நுனிப்புல் மேய்வதையே மேதாவிலாசமாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அனைத்தினும் மேலாய், சுயமானதாய் இருந்தே தீர வேண்டும். இத்தகைய அறிவு நிரம்பப் பெற்ற அறிவார்ந்த, சமுதாயமாகத் தான் நாம் இருந்தோம்; படிப்படியாகத் தான், மாறிப் போனோம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில், பெரும்பாலோர் அதிலும் குறிப்பாய் இளைஞர் சமுதாயம், இத்தகைய மூளைச் சோம்பலுக்கு அடிமை பட்டு போய் விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கேளிக்கைககள் தாம், இளமையின் அடையாளம் என, முதன்மைப்படுத்தப் படுகிறது. போதாக்குறைக்கு அறிவார்த்த விவாதம் என்ற பெயரில், அருதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளுடன் வெட்டி மன்றங்கள், ஆண்கள் மீசை வைத்துக் கொள்வது ஏன் என விவாதங்கள், உணவுப் பண்டம் பெயரில் வரும் தமிழ்ப் பண்டிகையின் பெயர் என்ன என்று, கோடி ரூபாய்க்கு வழிகாட்டும் கடினமான கேள்வி... மொத்தத்தில், இது தான் அறிவின் உச்சம் என்று நாம் ஒப்புக் கொண்டு விட்டோம். அரசியல், அதிலும் உள்ளூர் அரசியல்; சினிமா, அதிலும் தமிழ் சினிமா; மற்றும் கிரிக்கெட் ஆகிய மூன்றும் தாம், நம் பொதுஅறிவின் விஸ்தீரணம். இவை பற்றிய புள்ளி விவரங்கள் தான், நம் ஞானத்தின் நீளம், அகலம், உயரம், ஆழம், பருமன், பலம் எல்லாமே என்று ஆக்கி வைத்திருக்கிறோம். இந்த மூன்றின் கூட்டு அல்லது கலவை தான், இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டின் கோடானு கோடி இளைஞர்கள் மீதும், தொடர்ந்து இடையறாது நடத்தப்பட்டு வரும் இந்த படையெடுப்பு தான், நம் தேசத்தின் வளமான எதிர்காலத்துக்கு எதிரான மிகப்பெரிய சவால். பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என, எல்லாமே மிகக்குறுகிய "சிலபஸ்'க்குள் அடங்கி விடுகின்றன; அதற்குள் இருப்பனவற்றை கரைத்துக் குடித்து விட்டால் போதும் என்பது தான் இன்றைய நிலை. மதிப்பெண் மட்டுமே, ஒருவரின் அறிவுக்கான மதிப்பீடாக இருக்க முடியாது. ஆனால், நாம் அதைத் தான் முடிந்த முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். விளைவு... கல்வி வளர்ந்த அளவுக்கு, அறிவு வளராமல் போயிற்று. கேளிக்கை என்ற பெயரில், கேலிக் கூத்துகள்; பொழுதுபோக்கு என்ற போர்வையில், போதை ஊட்டும் காட்சிகள்; "டைம் பாஸ்' வடிவில், "டைம்-பாம்'கள். இது கூடப் பரவாயில்லை. உப்புப் பெறாத விஷயங்களை எல்லாம் ஊதி பெரிதாக்கி, மிகப்பெரிய சிந்தனையாகப் பேசுவதும், விவாதிப்பதும், நம் அறிவை ஆழப்படுத்துவதாக இல்லை; வெறுமனே, "படுத்துவதாக' மட்டுமே இருக்கிறது.

சென்ற தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு தளத்திலும், "பெரியவர்கள்' இருந்தனர். இன்று? அரைக்காசு பெறாத வறட்டுச் சிந்தனைகளைத் தாம், நகைச்சுவை முலாம் பூசி, அறிவார்த்த தத்துவங்களாக அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். நாமும் ஒவ்வொரு விழா நாளிலும் விடாமல் பார்த்தும், கேட்டும், கைதட்டி ரசித்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற அன்றாட உரையாடல்களை, இன்று அரங்கங்களில், "விவாதங்களாக' பார்த்துக் கொண்டிருக்கிறோம். யாருடைய ஆலோசனைகளும் இன்றி, தனது சொந்த புத்தியிலேயே எதையும் தீர்மானித்துக் கொள்ளக் கூடிய சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் உலகளாவிய பிரச்னைகளைப் போல் நீட்டி முழக்கிப் பேசுபவர்களை, சிந்தனையாளர்களாக நாம் வியந்து பார்க்கிறோம். ஆம்... நிஜத்தில் அறிவு என்ற பெயரில், இங்கே அறியாமை தான் கூறு போட்டு விற்கப்படுகிறது. புரிந்து கொள்வோம், மிகச் சிறியதை மிகப் பெரியதாக எண்ணி மயங்கிக் கிடந்தால், பின் உண்மையில் மிகப் பெரியது நம் கண்ணுக்கு என்றைக்குமே தெரியாமல் போய் விடும். மிகச் சாதாரணமானதை, விளம்பர வெளிச்சம் மிகப்பெரிய சாதனையாக்கிக் காட்டுகிறது. இந்த உண்மையை இளைஞர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் ஒழிய, பழையபடி ஓர் அறிவார்ந்த சமுகமாக நாம் மலர முடியாது. நாம் பூசணிகளை அடையாளம் கண்டு, அவர்களின் பின் செல்லப் போகிறோமா அல்லது சுண்டைக்காய்களையே பெரிதாய் எண்ணி, சுகம் காணப் போகிறோமா?

No comments:

Post a Comment