முக்கிய செய்திகள்

Monday, February 20, 2012

பதின் பருவக்காதல் !!!!!!!!!!

பதின் பருவக் காதல்: பெற்றோர்கள் ஆலோசனை அவசியம்!
அரும்பாக இருந்து மலரும் பருவம் பதின் பருவம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த காலம்தான். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இலைமறை காயாக தெரியவேண்டிவை எல்லாம் நடுக்கூடத்திற்கே வந்து சேர்கிறது.

மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தற்கொலைக்கும் துணிகின்றனர்

பதின் பருவத்தில் காதல் என்பது அனைவரையுமே தொட்டுப் பார்ப்பது இயற்கை. ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றதும் ஊரையே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது அவர்கள் ஏதோ செய்யக்கூடாத தவறுகளை செய்வது போல பார்ப்பது அவர்களை தற்கொலை பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் போன்றவை பதின் பருவத்தினரை தற்கொலை வரை கொண்டு செல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக

ஒதுக்குவது ஆபத்து

குழந்தைகள் காதலில் விழுந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை குற்றவாளிகள் போல நடத்தவேண்டாம். இதுவே அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கும். மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு, எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, குழந்தைகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.

வெளியே அழைத்துச் செல்லுங்கள்

பதின் பருவத்தில் புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம். காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.

ஆபத்தாகும் தனிமை

மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

No comments:

Post a Comment