முக்கிய செய்திகள்

Tuesday, February 14, 2012

எண்ணமே முகவரி.....

எண்ணமே முகவரி.....

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன" 

எண்ணம் போல் தான் வாழ்க்கையா... இது உண்மை தானா. "எல்லாமே அவங்க அவங்க எண்ணம் போல் தான் அமையும்" என்று சாமானியர்களும் சொல்ல கேட்கிறோம். "நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் " என்கிறது வேதம். உண்மை என்ன.
நல்லது செய்பவனின், நினைப்பவனின் வாழ்க்கை, நல்ல விதமாகவே அமையப் பெறும். நாம் "உண்மையிலேயே" நல்ல எண்ணம் கொண்டவராக இருத்தல் வேண்டும். "நல்ல எண்ணம் கொண்டவர்" மாதிரி இருக்கக் கூடாது. பிறகு தீதுக்கும், அதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. கெட்ட எண்ணம் கொண்டவனின் வாழ்க்கை - அடிதடி, கைகலப்பு என்கிற ரீதியில் தான் ஓடும் அல்லது வேறு வழியில் நிம்மதியற்ற விதமாக அமையும.

"நீங்க சொலறத எல்லாம் ஏத்துக்கவே முடியாது. மோச நாசம் பண்றவன் தான் நல்லா இருக்கான். பழி பாவத்துக்கு அஞ்சி, சாமிக்கு பயந்து வாழுறவன் எங்க நல்லா இருக்கான்" என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். விதிவிலக்காக, சொற்பமான பேர்களுக்கு அம்மாதிரியான வாழ்க்கை அமைய பெறுவதை தவிர்க்க இயலாது. அதே சமயம், இங்கே ஒருவன் நன்றாக
இருக்கிறான் என்பதை, எதை வைத்து தீர்மானிக்கிறோம். அவன் பணக்காரன் என்று சொல்லப்படுவதை வைத்து தான் தீர்மானிக்கிறோம்.

அப்படி பார்ப்பதை விட. நாம் "மன நிம்மதியாய், தன்னை சுற்றி உள்ளவர்களால் தொந்தரவற்ற நிலை அமைய பெற்று, நோயற்ற வாழ்க்கை அமையப் பெற்று இருப்பவனையே மகிழ்ச்சிகுரியவனாய் " நாம் பார்க்கிறோம்.சொல்கிறோம். சொந்த வீடு உள்ளது- ஆனால் இருபது
வருஷத்திற்கு லோன் கட்ட வேண்டும். கார் வைத்திருக்கிறார். அதற்கு ஐந்து
வருஷம் பணம் கட்ட வேண்டும். பார்க்கின்ற ஆடம்பர பொருட்களை எல்லாம்
வாங்குகிறார். கடன் அட்டை வைத்துள்ளார். அவரோடு நம் வாழ்வை ஒப்பிட்டு
பார்த்து, "அய்யோ அவர் சந்தோஷமாய் தான் இருக்கார்" என்று சொன்னால்,
அந்த சந்தோஷத்தை யார் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கலாம். கடனை அடைக்கக்கூடிய சாமர்த்தியம் உள்ளவன் பிழைப்பான். மற்றவன் முழிப்பான். விலை கொடுத்து வாங்கிய பொருள எத்தனை நாளைக்கு உங்களுக்கு சொந்தமானதாய்
இருக்கக்கூடும்.

எனது நண்பர்கள் சிலர், தங்க நகை தயாரிப்பு துறையில் இருக்கிறார்கள்.
எனது நண்பரின் முதலாளி மிக பெரிய பணக்காரர். அவரிடம் நிறைய பேர் பணி
புரிந்தார்கள். அவரிடம் பணிபுரிபவர்களில், யாரேனும் தனியாக தொழில் தொடங்க முன் வந்தால்- என்ன செய்வார் தெரியுமா? " பட்டறைல இருந்த நூறு கிராம் தங்கத்தை திருடி விட்டாய்" என்று வெளியேறி போக நினைக்கும் தன் பணியாளர் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து, அவனை வெளியேற விடாமல் தன் பணியாளாகவே வைத்திருக்க முயற்சிப்பார்.
இம்மாதிரியான எண்ணம் கொண்ட முதலாளிகள் நிறைய பேர், அத்துறையில் முன்பு இருந்தார்கள். தைரியசாலிகள், "உன்னால முடிஞ்சதை பாருய்யா" என்று வெளியேறுவார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்கள், அங்கேயே அடைபடுவார்கள். அன்றைக்கு, பல வருஷங்கள் முன்னால்-

அப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணி, கெட்ட எண்ணத்துடன் அடுத்தவரின்
வளர்ச்சியை தடுத்தவர்- இன்று சாப்பாட்டுக்கே கஷ்ட படுகிறார்.
இங்கே மூன்று விதமான எண்ணங்களையும், அதன் காரணமாக அமைந்த மூன்று விதமான வாழ்க்கையையும் பார்க்கலாம்.தைரியமான மனமும், எண்ணமும் கொண்டவன், தனக்கான சூழ்ச்சிகளை புறம் தள்ளி விட்டு வெளியே வந்து ஜெயிக்கிறான். அவன் எண்ணமே
அவன் வாழ்க்கையாகிறது. பயந்த சுபாவம் உள்ளவன், தன் பயத்தின் காரணமாகவே தான் நினைத்ததை அடைய முடியாமல் போகிறான். அவனது பய எண்ணமே, அவனது வாழ்க்கையாகிறது.

கெடுவான், கேடுநினைப்பான் என்கிற சொற்றொடருக்கேற்ப்ப,
அந்த முதலாளியின் கெட்ட எண்ணமே, அவரின் வாழ்க்கையாகி அவரின் குடி
கெடுத்தது. அவர் பிறரை தான் அழிக்க நினைத்தார். கடைசியில் அவரே
அப்படியானார். சபலப்படும் எண்ணமே, பலரின் வாழ்க்கை சீரழிய காரணமாகிறது.
நாம் சற்றே ஒதுங்கி நின்று-வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த... நன்றாக
வாழ்கிற, நன்றாக வாழாத என்று அனைவரின் வாழ்க்கையையும் உற்று நோக்கினால், அவரவர் எண்ணங்களே, அவரவர் வாழ்க்கையானதை காணலாம்.
அவ்வளவு ஏன். உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள். உங்களின் ஒவ்வொரு பெருமைபடக்கூடிய வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும் - உங்களது எண்ணமும், மனமும் தான் காரணமாய் உள்ளது என்பதை அறிவீர்கள் தானே.

No comments:

Post a Comment