முக்கிய செய்திகள்

Wednesday, July 6, 2011

அனுபவமே எழுத்துகளாக...

மனநலம் மற்றும் தன்னம்பிக்கை குறித்து எழுதப்படும் கட்டுரைகளை வாசித்து விட்டு ஒருவர் சொன்னார். "அப்படி இருங்க... இப்படி இருங்கன்னு எழுதறது மிக மிக சுலபம். வாழுந்து பார்க்கிறவர்களுக்கு தான் அதிலுள்ள கஷ்டம் தெரியும். அடி வாங்கினவனுக்கு தானே வலி தெரியும். இந்த வலியை கூட உன்னால் தாங்கிக்க முடியாதான்னு கேட்கறது மிக எளிது" என்றார். அவர் சொன்ன கருத்தில் உடன்பாடில்லாமல் இல்லை.

எழுதுபவர்கள் அனைவரும், வாழ்க்கையில் அடிபட்டு கொண்டே இருப்பவர்களாக தான் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி இருக்கும் போது, அவர்கள் எழுதும் எழுத்தில் எத்தனை சதவிதம் ஏற்புடையதாக, ஏற்று கொள்ளக் கூடியதாக, அனுபவத்தை தாங்கி இருக்கும் என்றும் அவர் கேட்டார். தங்களது புத்தகங்களால், அது தருகின்ற வருமானத்தால் பணக்கார வாழ்க்கையை, காரில் வந்து இறங்குகிற வாழ்க்கையை அடைந்து விட்ட எழுத்தாளர்களை பார்த்தமையால் அவருக்கு அந்த கேள்வி மனதில் எழுந்திருக்கக் கூடும்.

எழுத துவங்கிய காலத்தில், அவர்கள் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களையும் சந்திருக்கக்கலாம் என்பதையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளலாம். சினிமாவில் "கதாநாயகனாக, நல்லவனாக வாழ்கிறவன் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் இருக்கிறானா" என்று அறிந்து கொள்ள ஆர்வப்படும் சராசரி ரசிகனின் மனநிலையை போல், அந்த கேள்வியை பார்க்கலாம் அல்லது படைப்பின் நம்பகத்தன்மையை கவனிப்பதற்காக அவ்விதம் சொல்லலாம்.

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில், இதே மாதிரியான தொணியில் ஒரு கேள்வி வந்தது. "எழுதுபவர்கள் என்ன மாதிரியான வாழ்க்கை வாழுகிறார்கள்... அவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை உள்ளதா? சிக்கல்களை பார்க்க மட்டும் செய்கிறார்களா அல்லது அனுபவிக்கவும் செய்கிறார்களா? அதிலிருந்து மீள்கிறார்களா? அல்லது சும்மா கதை கட்டுகிறார்களா" என்கிற ரீதியில் அந்த மின்னஞ்சல் இருந்தது. மேலும் அவரே "நானும் இது போல எழுத விரும்புகிறேன். சில ஆலோசனைகள் தந்து உதவுங்கள்" என்றார். அந்த மின்னஞ்சலால் எழுந்தது - இந்த பதிவு.

"பிறர் எப்படி எழுதுகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் எனக்கு என் அனுபவமே எழுத்தாகிறது. இங்கே எழுதப்படும் சிக்கல், வேதனை, இழப்பு என்று எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு கணத்திலாவது அனுபவித்து அறிந்திருப்பேன். இப்போதும் கூட ஏதேனும் ஒரு சிக்கல் என்னை அழுத்தி கொண்டிருக்கலாம். அதிலுருந்தும் கூட நிச்சயம் மீள்வேன் என்று நம்புகிறேன். அந்த அனுபவமே நாளை ஒரு பதிவாகலாம். அவரிடம் "நான் எதை கடைபிடிக்கின்றேனோ - அதையே எழுதுகிறேன்" என்றேன்.

மகாத்மா காந்தியடிகள் "என்னால் கடைப்பிடிக்க முடியாத ஒன்றை, பிறரை கடைப்பிடிக்கும் படி சொல்லி வற்புறுத்த மாட்டேன்" என்றார். அவர் தனக்காக அதை சொன்னாலும், எல்லோருக்குமானதாக நாம் எடுத்து கொள்ளலாம். முக்கியமாக எழுத்தாளர்களுக்கு. "செகண்ட் இன்னிங்க்ஸ்" என்றொரு பதிவு எழுதி இருந்தேன். நிறைய பேரால் பாராட்டப்பட்ட பதிவு. வீழ்ச்சிக்கு பிறகு எழுந்த மனிதர்கள் குறித்த பதிவு அது. பீனிக்ஸ் பறவையை போல, தோல்வியிலிருந்து உயிர்த்தெழுந்த பல மனிதர்களின் வாழ்க்கையை பார்த்து, பார்த்து - பிறகு அதே வாழ்க்கையை நானும் அமைய பெற்றப் போது, அதிலிருந்து மீண்டெழுந்த போது - அது ஒரு புது வித அனுபவமாகி பதிவாக்கினேன்.

மேலும் அதை சிறப்பாக, இன்னும் உண்மை தன்மையுடன் எழுத வேண்டும் என்று நினைத்த போது, தோல்வியிலிருந்து உயிர்த்தெழாத மனிதர்களின் வாழ்க்கையையும் பார்த்தேன். இருவருக்கும் ஒரே மாதிரியான வீழ்ச்சி கிடைக்கிறது. "ஒருவரால் மட்டும் எழ முடிகிறது... மற்றவரால் ஏன் எழ முடியவில்லை" என்பதை ஆழ்ந்து நோக்க தெரிய வேண்டும். எல்லாவற்றையும் பார்த்திருந்து விட்டு, "அவருக்கு யோகம் இல்லாம்ம போச்சு" என்கிற முடிவுக்கு வந்து விடக்கூடாது. அப்படி எழுதி விட்டால் நாம் தேடியதற்கு எந்த அர்த்தமில்லாமல் போய்விடும்.

இன்னொரு சமயத்தில், இன்னொரு அனுபவம் கிடைத்தது... அது மனதை வருத்தக்கூடிய ஒன்று. ஆனால் அதற்காக கவலைப்படவில்லை. அது குறித்து சிலர் ஆச்சர்யப்பட்டனர். அவர்களிடம் இதை தான் சொன்னேன். "சில அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைத்திடாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் சில அனுபவங்களை வாங்கி விட முடியாது. எனக்கு அந்த அனுபவம் கிடைத்திருக்கிறது. அப்போது தானே அதிலிருந்து ஜெயித்த கதையை பற்றி எழுத முடியும்" என்றேன்.


சில பிரச்சனைகள், நரக வேதனை என்பார்களே - அதற்கு ஒப்பானது. அதிலிருந்தும் மீண்டு வந்து இருக்கலாம். அழகாக சொல்வார்கள் இப்படி. "கீழே விழுவது தவறல்ல... திரும்ப எழ முயற்சிக்காமல் இருப்பதே தவறு..." என்று, அதனால் தான் எனது தளத்தில், முகப்பில் இந்த வாசகம் வைத்துள்ளேன். "உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது வெற்றியன்று... போராட்டமே".

No comments:

Post a Comment