முக்கிய செய்திகள்

Wednesday, July 6, 2011

அவர்களின் காதல்...சிறுகதை.

"சாதாரண சின்ன விஷயம் இது. இதற்காக நீ என்னை உதாசினப்படுத்தறதோ இல்லை என்னை விட்டு பிரிஞ்சு போயிடுவேன்னு சொல்றதோ சரியல்ல" என்றான் சேகர், ரம்யாவை பார்த்து தன் விரல் நகங்களை கடித்து துப்பியவாறு.

ரம்யா அவனை பார்த்தாள். "இது சின்ன விஷயம் தான். ஆனால் நீ எதையும் என் மீது திணிக்க விரும்புகிறாய். உன் விருப்பங்களை என் விருப்பங்களாக நீ மாற்ற முனைகிறாய். என் விருப்பங்களை நீ உன் காலில் போட்டு மிதிக்கிறாய்"

"நான் உன் ஆளுமையின் கீழ் இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். கல்யாணத்துக்கு முன்பே இப்படின்னா, நாளை கல்யாணத்துக்கு பிறகு உன்னை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. நீ உட்கார் என்றால் நான் உட்கார வேண்டும். நில் என்றால் நிற்க வேண்டும்"

"ரம்யா. உனக்கு வர வர என்னை பிடிக்கல. இப்போ உன் வட்டம் பெரிசாயிடுச்சு. ஆண்களின் நட்புகளும் உனக்கு அதிகமாய் கிடைக்குது. அதனால் என்னை விட அழகா உள்ள வேறு எவரையும் லவ் பண்ண விரும்பறியா?" என்று கேட்டான்.

ரம்யாவுக்கு கோபம் வந்தது. "என்ன பேசுறோம்னு தெரியுதா சேகர்? ஏன் நான் எது செய்தாலும், அதை செய்யாதே, இதை செய்யாதேன்னு சொல்றே. நீ போன மாசம் ஜிம்னாஸ்டிக் போட்டில கலந்துக்கிட்டே. ஜட்டியோட நிற்கணும். அதனால் அந்த போட்டில கலந்துக்காதேன்னு உன்னை நான் சொன்னேனா? உன்னை ஊக்குவிக்கலயா. அது மாதிரி என்னை ஊக்குவிக்க வேணாம்மா. இது ஆடை அலங்கார போட்டி. பேஷன் ஷோ. அழகி போட்டி கூட கிடையாது."

"நீ கலந்துக்கறது எனக்கு பிடிக்கல" என்றான் மொட்டையாக.

"சேகர், நீ என்னை உண்மையிலேயே லவ் பண்றியா? என்னை நீ உன் லைப் பார்ட்னரா நினைக்கல. நான் ஒரு அடிமையா இருக்கணும்னு எதிர்பார்க்கிறே சரியா"

சேகர் இப்போது எதுவும் பேச விரும்பாதவன் போல சற்று தள்ளி போய் அமர்ந்தான். கொஞ்ச நேரத்தில் புல் தரையில் படுத்து ஆகாயத்தை வெறித்து பார்க்க துவங்கினான். பேச ப்ரியப்படாத மாதிரி நடந்து கொண்டான். "நீயே பேசப் பிரியப்படாத போது நான் ஒன்றும் உன்னிடம் வலுக்கட்டாயமாக பேச முயல மாட்டேன்"என்று எண்ணியவாறு ரம்யா, கையோடு வைத்திருந்த கேட்லாக் புக்கை பார்க் ஆரம்பித்தாள். அது புதிய ஆடைகளின் டிசைன் புத்தகம். புத்தகத்தை புரட்டினாள். மனம் அதில் பதிய மறுத்தது.

இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? தவறு யார் மீது. நான் எது செய்தாலும் இவனுக்கு பிடிப்பது இல்லை. போன மாசம் காலேஜில் ஒரு விழா. நாடகம் நடந்தது. ரம்யாவுக்கு நாடகத்தில் நடிக்க இஷ்டம் உண்டு. பெயர் கொடுத்தாள்.

அன்று மாலை சேகரிடம் தான் நாடகத்தில் நடிக்க இருப்பதை சொன்னபோது கோபப்பட்டான். "என்கிட்ட கேட்காம நீ எப்படி பேர் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டான்.

"நீ மட்டும் என்கிட்ட கேட்டுக்கிட்டா பேர் கொடுத்து இருக்கே" என்று கேட்டாள் ரம்யா. சேகர் எதுவும் பேசவில்லை. இதே மாதிரி இன்னொரு முறையும் சண்டை.

ரம்யா என்.ஸி.ஸியில் இருக்கிறாள். பக்கத்திலுள்ள ஒரு மலையில் இரண்டு நாள் மலையேற்ற பயிற்சி முகாம் நடந்தது. ரம்யாவுக்கு எதிலாவது ஈடுபட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவளும் கலந்து கொண்டாள்.

அப்படி அவள் அந்த பயிற்சிக்குச் செல்வது சேகருக்கு பிடிக்கவில்லை. "பொம்பளைகளுக்கு இது தேவையா? காலேஜ்க்கு வந்தோமா, போனோமான்னு இல்லாம்ம" என்று ஆரம்பித்தான்.

"அப்படியா, நானும் அப்படி தானே இருந்தேன். காலேஜுக்கு வர்றதும், படிக்கிறதும்மா. நீ தானே என் மனசை கெடுத்தே. காதல்ங்கிற பூதத்தை என்னுள் திணிச்சே. காலேஜில் படிக்கிற பொண்ணுக்கு லவ் தேவையா?" என்று ரம்யா கேட்க, சேகர் மௌனித்தான். "நீ என்னை ரெம்ப பயமுறுத்தறே ரம்யா. நான் ஏதாவது சொன்னா உன்னை விட்டுபோயிடுவேங்கிற. நான் உன் நல்லதுக்கு தானே சொல்றேன். எங்க போனாலும் எல்லா ஸ்டூடண்ட்ஸ் பார்வையும் உன் மீது தான் விழுது"

"அழகாக உள்ளது என் குற்றமா சேகர். ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிற நான் குற்றவாளியா? நீ என் நன்மைக்கு சொல்றதா எனக்கு படல. உனக்கு பயம் என் மீது. என் வட்டம் பெரிசாக, பெரிசாக நா உன்னை விட்டு போயிடுவேனோன்னு. நீ என்னை ஊக்குவிக்காம மட்டம் தட்டிட்டே இருந்தா தான் உன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டு, இந்த லவ் நமக்கு தேவையானு நான் யோசிக்க வேண்டியது வரும். மற்றப்படி யாரும் என்னை ஒன்றும் செய்திட முடியாது. என் மனசில் இந்த நிமிஷம் வரை உன்னை தவிர்த்து வேறு யாரும் இல்ல"

"இந்த நிமிஷம் வரைன்னா. அப்போ அடுத்த நிமிஷம் உன் மனசில் வேறு யாரும் வர வாய்ப்பிருக்கா" என்றான் கேலியாக.

"இருக்கு. அது நீ நடந்துக்கிற முறையை பொறுத்து"

அன்று அந்த பிரச்சனை அத்தோடு முடிந்தது. இது மாதிரி பல விஷயங்கள் - இருவருக்குமான பேதத்தை அறிவுறுத்தியப்படி, "எதனால் இன்னும் இவனது காதலை சுமந்து கொண்டிருக்கிறோம்" என்று தெரியவில்லை.

இவன் மீதுள்ள காதலை விட, எனக்கு என் லட்சியம், ஆர்வம் வலிமையானது. இவனுக்காக நான் அதை இழக்கவா? இல்லை அதற்காக இவனை இழக்கவா?

நிச்சயம் ஏதாவது ஒன்றை தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய் முடியாது.

அடுத்த வாரம் ஆடை அலங்கார போட்டி நடைபெற இருக்கிறது. அதில் நான் கலந்து கொள்வதில் இவனுக்கு உடன்பாடில்லை. தினமும் அதன் பொருட்டு சண்டையிடுகிறான்.

கலந்து கொண்டு விட்டால் இன்னும் நிறைய சண்டையிடுவான். என்ன செய்வது. இவனோடு பேசி பார்ப்பது. இவன் சிறிதளவாவது எனக்காக விட்டு கொடுக்க வேண்டாமா? விட்டு கொடுத்தால் தானே காதல். விட்டு கொடுத்தால் காதல் வாழும். இல்லை...?

"ரம்யா கிளம்பலாமா. டைம் ஆயிடுச்சு" சேகர் எழுந்து வந்து கேட்டான். புல்லை தட்டிவிட்டவாரே ரம்யாவின் தோளை தொட்டான். ரம்யா புக்கை மூடினாள். அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

"ஸாரி ரம்யா, உன்னை புண்படுத்தற மாதிரி பேசி இருந்தா"

அவன் எப்போதும் இப்படி தான், பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஈஸியாய் ஒரு ஸாரி சொல்வான்.

ரம்யா சிரித்தாள்.
"சேகர். நா ஒண்ணு சொல்றேன். முழுசா கேளு. அப்புறம் உன் முடிவை சொல்லு. அடுத்த மாதம் இமயமலைக்கு போற மலையேற்ற குழுவில் நானும் இருக்கேன். அதை உன்கிட்ட சொன்னேனா"

"இல்லையே. பைனல் இயர் உனக்கு. தேவையா இது உனக்கு. எவ்வளவு சொன்னாலும் தெரிய மாட்டேங்குது உனக்கு" என்றான் சேகர் கோபமாய்.

"திரும்ப ஒரு காரணம் கிடைச்சாச்சு சேகர். நாம சண்டை போட. எதுவரைக்கும் இப்படியே சண்டை போடறது சொல்லு. நான் எது செய்தாலும் உனக்கு பிடிக்கிறது இல்ல. அதாவது, உனக்கு பிடிக்கிற மாதிரி நான் எதுவும் செய்யறதில்ல. அப்படி செய்ய எனக்கு தெரியல. சரியா? எப்படி இனி நம்மால் சேர்ந்து இருக்க முடியும்? நீ ஒரு துருவம்னா நான் ஒரு துருவம்."

சேகர் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

"சேகர் இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தை விடுன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இதையே உன்னால் தவிர்க்க முடியலயே. என் உயிரோடு கலந்த சில விஷயங்களை என்னால் எப்படி தவிர்க்க முடியும்"

"அதற்காக நான் சிகரெட் பிடிக்காம இருக்க முடியுமா? வேணும்னா நீயும் பிடி. நீ தான் மாடர்ன கேர்ளாச்சே"

ரம்யா சிரித்தாள். "சேகர். நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னதும் நானும் லவ் பண்றேன்னேன். கொஞ்சம் கூட யோசிக்காம. அப்ப எனக்கு காதல்னா மயக்கம், போதை, நீயும் அழகா வேற இருந்தீயா. சரின்னேன். ஆனா இப்ப

யோசிக்கையில், இந்த அழகால் எதுவுமே இல்லன்னு தோணுது. ஒருத்தர் மேல ஒருத்தர் சந்தேகப்படுறோம். அழகை அடிமைப்படுத்தவே முயல்கிறோம் "

"ஒரு வேளை, ஒருத்தரின் திறமை, புத்தி, அறிவு - இதனால் நாம் ஈர்க்கப்பட்டு இருந்தா, இத்தனை சண்டை தோன்றி இருக்காதோன்னு தோணுது. நான் கெட்டு போயிடுவேன்னு நீ பயப்படறே. இல்லையா? "

"சீ, அசிங்கமாக பேசாதே"

"இல்ல சேகர். உண்மை தான். இத்தனை நாள் பழகியும் நீ என்னை பற்றி தெரிஞ்சுகிட்டது அவ்வளவு தான்."

சேகர் சிகரெட்டை தூக்கி எறிந்தான். "நான் என்ன செய்யணும்னு நினைக்கிறே ரம்யா"

"நல்ல கேள்வி. நீயும் நானும் தனி தனியா உட்கார்ந்து யோசிக்கணும். நாம பார்வைக்கு அழகானவர்களா இருந்தா மட்டும் போதாது. மனசிலும் அழகானவர்களா இருக்கணும். இரண்டு பேருமே மனசை கழுவுவோம்."

"திரும்ப ஒருவரை ஒருவர் புதுசா சந்திப்பது போல சந்திப்போம். அப்ப இந்த அழகை தவிர்த்து வேறு ஏதாவது உன்னையும், என்னையும் கவருதான்னு பார்ப்போம். அப்ப நீ நேசிக்கக் கூடிய வகையில் நானும், நான் நேசிக்க கூடிய வகையில் நீயும் இருந்தா - காதலிக்கலாம். அதுவரை பிரிவோம். சரியா? " என்று எழுந்தாள்.

அவன் சரி என்றானா? இல்லையா? என்று பார்க்காமல் ரம்யா நடக்க ஆரம்பித்தாள். ஒரு பாரம் நீங்கினாற் போல இருந்தது.

குமுதத்தில் வந்த சிறுகதை.

No comments:

Post a Comment