முக்கிய செய்திகள்

Saturday, July 9, 2011

இந்தியத் தொழிலாளர்

child-labour

- ஒரு தொழிலாளி
தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடையவனாகவிருக்கிறேன். பொதுவாய் நமது நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர்களைக் குறிக்கின்ற தேயன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலாளன் என்றால் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத்தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும்.
தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உப கருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அதுபோல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வஸ்துவும் அதற்கு உப கருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது.
இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆகமாட்டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமானன் அதிக இலாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிக கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலை நிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்மதிக்கமாட்டோம், முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடைய வேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும்தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது. இதைக் கூலிக்காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம்.
இவ்வித இயக்கம் உண்மையில் நம் தேசத்திற்கோ, நம் தேச மக்களுக்கோ எவ்விதத்திலும் அனுகூலமான இயக்கம் என்று சொல்லமுடியாது. இது மேனாட்டு வழக்கத்தை அனுசரித்தது. அங்குள்ள முதலாளிகளும், கூலிக்காரர்களும் கீழ்நாட்டுப் பணத்தையும், பதவியையும் கொள்ளையடித்து அதை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்கிற சண்டைதான் அங்கு தொழிலாளர் இயக்கமாய் விளங்குகின்றது. நம் நாட்டிலோ தொழிலாளி அதிகக்கூலி கேட்க கேட்க முதலாளி, மக்கள் வாங்கும் பொருள்களின் மேல் அதிக விலையை வைத்து, மக்களிடம் பொருள்பறித்து, சிறிது தொழிலாளிக்குக் கொடுத்து மிகுதியைத் தான் எடுத்துக்கொண்டு முன்னிலும் தான் அதிக இலாபம் சம்பாதித்தவனாகி விடுகிறான். உதாரணமாக, ரயில்வே, டிராம்வே தொழிலாளர்களின் இயக்கங் களை எடுத்துக்கொள்வோம். சென்னை டிராம்வே, ரயில்வே தொழிலாளர் கள் தங்கள் எஜமானர்களான கம்பெனிக்காரர்களிடத்தில் அதிகக்கூலி கேட்டார்கள். எஜமானர்களும் முதலாளிகளுமான கம்பெனிக்காரர்களோ கட்டணமாகிய டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தினார்கள். இவ்வகையில் ஜனங்களின் பணத்தைப் பறித்து தொழிலாளர்களுக்குக் கொஞ்சம் கொடுத்து விட்டு மேற்கொண்டும் தாங்கள் இலாபம் அடைந்தார்கள். இதில் எவருடைய பொருள் நஷ்டமடைந்தது? முதலாளிகள் பொருளா? இம்மாதிரியான நடவடிக்கைகளை சுருக்கமாகக் கூறின் கூட்டுக்கொள்ளை யென்றுதான் சொல்லவேண்டும்.
இவ்வித இயக்கங்களாலும், நடவடிக்கைகளாலும் தேசம் ஒருபொழுதும் முன்னேற்றமடையாது. ஏழைகளும் பிழைக்க முடியாது. இவ்வித இயக்கங்கள் நடத்துவதைவிட பொதுவுடமைத் தத்துவங்கள் நடத்து வது குற்றமென்று சொல்ல முடியாது. இம்மாதிரி இயக்கங்கள் நாட்டின் உண்மைத் தொழில் அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் கொஞ்சமும் உதவி செய்யாது. இதுமாத்திரமன்றி இவ்வியக்கங்களை நடத்தும் தொழிலாளர்களின் தலைவர்களோ வென்றால் பெரும்பாலும் முதலாளிகளும் எஜமானர்களுமாகவேதான் இருக்கிறார்கள். தொழிலாளி களின் கஷ்டமும் கூலிக்காரர்களின் கஷ்டமும் ஒரு சிறிதும் அறியாமல் தொழிலாளரின் உழைப்பினாலும், கூலிக்காரரின் அறியாமையினாலும் பிழைக்கின்ற இவர் கள் இவ்வியக்கத்தை நடத்துகின்றனர். இது எப்படி முன்னுக்கு வரும்? இதுவரை நம் நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தன? எவ்வளவு மறைந்தன? எவ்வளவு வெற்றியடைந்தன? எவ்வளவு தோல்வியடைந்தன? எவர் ஒழுங்காக நடத்தினர்? என்பதைக் கவனித்தால் இவற்றின் பலனை நன்கு அறியலாம்.
தொழிலாளிகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த நாட்டில் முன்னுக்கு வரவேண்டுமாயின், தொழிலாளர்கள் தாங்கள் கற்ற தொழிலைக் கொண்டு தாங்களே ஒரு தொழில் தங்களிஷ்டம்போல் செய்து தொழில் திறத்தையும் ஊழியத்தையும் அறிந்து அத்தொழிலின் பலன்களை நாட்டாருக்குக் கொடுத்து நாட்டாரை அனுபவிக்கச் செய்து, அதன் ஊதிய முழுவதும் தாங்களே அடையும்படியான நிலைமை நாட்டிற்கு என்று வரு கின்றதோ அன்றுதான் தொழிலாளரின் நிலைமை முன்னேற்றமடையுமே அல்லாமல் கைத்தொழில் அழிக்கப்பட்டுப்போன காரணத்தால் முதலாளிகள் இயந்திரங்களை அதிகம் அமைத்து திக்கற்றவர்களை கூலிக்கமர்த்தி, அவர்களிடம் கொடுமையான வேலை வாங்கி, அதன் பயனாய் கொள்ளை அடிப்பது போன்று இலாபத்தைச் சம்பாதித்து அவை வேலைக்காரர்களும் பொதுஜனங்களும் அடையாதபடி நடுவிலிருந்துகொண்டு முதலடித்து, தானே அனுபவித்து வருவதால் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது.
இதுவரை தொழிலாளரின் கதி இப்படியாயினும் இனி எதிர்காலத்திலாவது தொழிலாளர் தங்கள் குழந்தைகளையும் மற்றும் தொழில் வேண்டியவர்களும் தாங்கள் கற்கும் தொழிலைக்கொண்டு மற்றொருவர் பிழைக்கும் மார்க்கமான தொழிலா யல்லாமல் தாங்கள் செய்யும் தொழிலின் பலன்களை முற்றிலும் தாங்களே அனுபவிக்கும் படியான தொழில்களைக் கற்றுக் கொடுப்பதுடன் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் இயக்கங்களை முதலாளிகளும் எஜமானர்களும் தலைமை வகித்து நடத்த விடாமல் தானே தன் கையைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளியோ, அல்லது கூடுமானால் தன் கைக் கொண்டு வேலை செய்து அதன் முழுப்பயனையும் தானே அடையும் படியான உண்மையானதும் சுதந்திரமுடையதுமான ஒரு தொழிலாளியோ இயக்கத்தை தலைமை வகித்து நடத்தும்படி வந்தால், இன்றைக்கே இல்லா விடினும் கூடிய விரைவிலாவது தொழிலாளிகளும்,தொழிலாளரின இயக்கங்களும் நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடியவைகளாக விளங்கும். இல்லாதவரையில் தலைவர்கள் என்போர் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளவோ, முதலாளிகள் கொள்ளை அடிக்கவோ, தொழிலாளிகள் என்போர் சண்டித்தனம் செய்து வயிறு வளர்க்கவோதான் முடியும்.
-  பெரியார், (´குடிஅரசு´ கட்டுரை - 28.06.1925)

No comments:

Post a Comment