முக்கிய செய்திகள்

Saturday, April 28, 2012

பண்பாடு---வாழ்க்கை ஒழுக்கம்


ல நூற்றாண்டுகளைக் கண்ட மரம், ஒரு நாள் ஓங்கியடித்த புயலில் வேரோடு மண்ணில் விழுந்து கிடந்தது. வன்மை முறுக்கேறிய இத்தனை பெரிய மரம் எப்படி ஒரு நாள் புயலை எதிர்த்து நிற்க முடியாமல் விழுந்து விட்டது என்கிற விவரம் புரியாமல் ஊர் மக்கள் ஒன்றுகூடி வியந்து நின்றனர். அப்போது அங்கே ஒரு துறவி வந்து சேர்ந்தார். ''இவ்வளவு வலிமை மிக்க மரம் ஒரு நாள் புயலில் எப்படி விழுந்திருக்க முடியும்?'' என்று கூடி நின்ற மக்களில் ஒருவன் துறவியைக் கேட்டான்.
மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் துறவி உற்றுப் பார்த்தார். வெளித் தோற்றத்தில் வலுவாகத் தோன்றிய மரத்தின் உள்ளே ஒரு பெரிய பொந்து வீழ்ந்திருந்ததைக் கண்டவர், ''நண்பர்களே! இந்த மரத்தின் வீழ்ச்சி ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. பல நாட்கள் உள்ளே நிகழ்ந்த உள் அழிவுதான், இன்று இந்த மரம் புயலை எதிர்கொள்ள முடியாமல் விழுந்து கிடப்பதற்குக் காரணம். எந்த ஒன்றுமே ஒரு நாள் நிகழ்வில் வீழ்வதில்லை என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்'' என்றார்.

பண்பாடு என்பது மின்னலைப் போல திடீரென்று தோன்றி, புயலைப் போல ஒரு நாளில் மறைந்து விடுவதில்லை. பண்பாடு என்பது ஓர் இனம் காலம் காலமாகப் பழகி வரும் வாழ்க்கை ஒழுக்கம். 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகை கூறும். 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வாழும் மண்ணின் மரபுகள் பண்பாடாக மலரும். காலப்போக்கில் வாழ்க்கையில் படிந்து கிடக்கும் அசுத்தங்கள் அகன்று மனிதனின் சிந்தனை செழுமையுறும்போது பண்பாடு சிறக்கிறது.

இந்தியப் பண்பாடு ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது. அன்பு, இரக்கம், கருணை, அகிம்சை, எளிமை, விருந்தோம்பல், மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டுதான் இந்தியப் பண்பாடு உருவானது. அடுத்தவர் பொருளின் மீது ஆசையற்ற வாழ்க்கைதான் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம். தர்மத்தின் வழி நடப்பதுதான் அவனவன் சுதர்மமாகப் போற்றப்பட்டது.


விக்டோரியா பேரரசிக்கு ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ்முல்லர் எழுதிய கடிதத்தில் 'அறம் சார்ந்த வாழ்க்கை முறையை அறிய உலகம் இந்தியாவின் பக்கம் முகம் திருப்ப வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

இன்று அந்த சுதர்மம் உலகமயமாக்கல், வணிகக் கலாசாரத்தில் பொய்யாக, கனவாகப் போய்விட்டது.


மாறாத சமய நம்பிக்கைகளும் மண்ணின் மரபார்ந்த வாழ்க்கை நெறிகளும் கூட்டுக் குடும்பத்தின் கட்டுமானம் குலைந்து விடாமல் நீண்ட காலம் காப்பாற்றி வந்தன. அவற்றையும் மீறி மேலை நாட்டுக் கலாசாரக் காற்று மெல்ல மெல்ல கிராமங்களின் கூட்டுக் குடும்பங்களில் வீசத் தொடங்கியது.

கண்டதையும் வாங்கிக் குவிக்கிற 'நுகர்பொருள் நாகரிகம்' கிராமத்து மனிதர்களையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. கல்வி வளர்ச்சி, வேலை தேடி நகர்ப்புறங்களை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. 


விளைவு.. 'நான் நன்றாக இருந்தால் போதும்' என்று நினைக்கிற 'தனிநபர் சுகபோகம் மட்டுமே வாழ்க்கையின் ஒரே நோக்கம்' என்று மனித மனோபாவம் மாறியது. 

முதியோரும் பெற்றோரும் சுமக்க வேண்டாத சுமைகளாயினர். பொருளாதார சக்திகள் குடும்ப உறவுகளைக் கூறு போட்டன. கூட்டுக் குடும்பக் கட்டடம் தகர்ந்து தரைமட்டமானது. தெரு வழியே வருகிற அந்நிய மனிதர்கள் உட்கார்ந்து செல்வதற்காகவே கட்டப்பட்ட திண்ணை வைத்த வீடுகள் காணாமல் போய், 'நான்.. எனது..' என்ற அளவில் எல்லாமும் சுருங்கிப் போனது. வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வோர் அடியும் வணிகமயமானது.

குளிர்ந்த நீரில் விறைத்துக் கிடக்கும் ஆமையை சமைத்து உண்பவர்கள், முதலில் அதை உலையில் போடுவார்கள். உலை நீரின் வெப்பம் தொடக்கத்தில் வெதுவெதுப்பாக இருக்கும். அந்த இதமான வெப்பம் ஆமைக்கு இன்பமாக இருக்கும். அந்த சுகம் தரும் போதையில் ஆமை கொதிகலனில் நின்றும் ஓடியும் ஆனந்தக் கூத்தாடும். வெப்பம் கூடியதும் ஆமை அழியும். முதலில் இன்பம் தருவதே பின்பு துன்பமாகும். தேவையும் ஆசையும் அதிகரித்தால் அமைதியும் நிம்மதியும் பறிபோகும். 


காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு அகப் பகைகளை அழிக்க சிந்தனை, சொல், செயலைத் தூய்மை செய்ய வேண்டும் என்பதுதான் நம் பண்பாட்டின் அடித்தளம். பழையன கழிந்து புதியன புகும் ஆசைகளைச் சீரமைத்து, சினம் தவிர்த்து, கவலை ஒழித்து நாம் வாழ முற்படுவோம். 


                                         


No comments:

Post a Comment