முக்கிய செய்திகள்

Sunday, January 11, 2015

தமிழரின் அடையாளத்தை இழக்கும் நாம் !!


சமீபத்தில்தான்  இணையதளத்தில்  மதன் கமலிடம்  பேட்டி எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது வடஇந்திய பெயர்களின் மேல் சமீபகாலமாக தமிழர்கள் மோகம் கொண்டு இருப்பதை பற்றி கமல் சில வார்த்தைகள் கூறினார். தன் மகள் ஸ்ருதிக்கு கூட மின்னல் என்ற பெயரை வைத்திருக்கலாம் என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

சற்று சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்றே படுகிறது. நல்ல தமிழ் பெயர்களை வைக்க கூச்சப்படுகிறோமா நாம்?(என்னையும்  சேர்த்துதான் ) சற்றே சிந்தித்து பாருங்கள் .நம் வீட்டிலோ அல்லது நமக்கு தெரிந்த உறவினர் வீட்டிலோ சமீபத்தில் பிறந்த எத்தனை குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை வைத்துள்ளோம?;. கண்டிப்பாக திரிஷா ஷீலா அபினாஷா பமீலா ஹம்சிதா   ராகேஷ்,அஸ்வந்  சஞ்சய்,  என்ற பதில்கள்தான் அதிகமாக வெளிப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிகளிலும் இதே போன்ற பெயர்கள்தான் நிறைய உள்ளன. இதில் எவையுமே தமிழ்ப் பெயர்கள் இல்லை என்பதைப் பற்றி தமிழகப் பெற்றோர்கள் பலரும் கவலைப்படுவதில்லை. 

உசிலம்பட்டியிலும் கொண்டலாம்பட்டியிலும் கூட கபீஷ் மற்றும் கூபீஷ்கள் இருப்பது ஒரு வகையில் கலாச்சார அழிவு என்றே சொல்லத் தோன்றுகிறது. கலாச்சார சீர்கேடு அல்ல.கலாச்சார அழிவு.


சமீபத்தில் அறை நண்பர்களுடன் உரையாடல் அப்துல் கலாம் பற்றியது ,முந்நாள் ஜனாதிபதி தமிழனாகி கடைசியில் தமிழை பற்றி உரை  வந்தது ,நண்பர் கேட்டார் தமிழை வளர்க்க 10 வழிகள் சொல்லுங்கன்னு .......அத்துடன் அனைவரும் உரையாடலை முடித்துக்கொண்டோம் ,கேட்டது வேறு மொழி பேசுபவராக இருந்தால் தரும் விளக்கம் அவரையும் தமிழ் கற்க தூண்டியிருக்கும் ......

இதை உடனே கொச்சைப்படுத்தி தமிழ் வெறி என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக நமக்கு நம்முடைய பெயர்களின் மேல் உள்ள கூச்சங்களை மறுபரிசீலனை பண்ண வேண்டியது அவசியம். பெயரில் என்ன இருக்கிறது என்ற வறட்டு வாதங்களை தாண்டி குறைந்தபட்சம் தமிழில் இல்லாத எழுத்துக்களை பயன்படுத்தி பெயர் வைக்கமாட்டோம் என்றாவது ஒரு முடிவுக்கு வரலாமே?


ஸ,ஷ என்ற வார்த்தை இருந்தால் அந்த பெயர் மாடர்ன் பெயரா?

அல்லது நல்ல தமிழ் பெயர்களுக்கு பஞ்சமா? தமிழ் அழிகிறது என்று வருத்தப்படும் தமிழ் அறிஞர்கள் நல்ல தமிழ் பெயர்களை பண்டைய இலக்கியங்களில் இருந்தோ அல்லது எங்கிருந்தாவதோ தொகுத்து வெளியிட்டால் என்ன? இதை பற்றி மற்ற தமிழர்களின் கருத்து என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன்


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?
இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. 

ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
            இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 
            நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 
            அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 
நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். 
            இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா? 
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா? 
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 
            உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா! 
உலகம் போகிற போக்கு சரியில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், தமிழ் மீதும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் அக்கறையுள்ளவர்கள், தன் இனத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பெயர்கூட தமிழில் இல்லை என்ற நிலையை ஏற்கமாட்டார்கள். மக்களின் மன உணர்வுக்கேற்ப தமிழில் புதுமையான பெயர்களை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
தமிழறிஞர்கள்தான் இதனைச் செய்யவேண்டும் என்பதில்லை. தமிழ் மீது அக்கறை கொண்ட யாரும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். அழகான - புதுமையான தமிழ்ப் பெயர்களை உருவாக்குவோம். தமிழ்க் குழந்தைகளுக்கு ‘ஃபேஷனான’ தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்.
இங்கே சில பெயர்கள்
தூயா, நறுமணா, கவின், கதிர்,




மகிழ், நிலா, மெல்லிதழ், நலன்,
நித்திலா, இன்பா, இதயா.
நீங்களும் இதுபோன்ற பெயர்களை அனுப்பலாமே?
தமிழர் இல்லங்களில் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்ட இணைந்து செயல்படுவோம்.

No comments:

Post a Comment