முக்கிய செய்திகள்

Monday, July 30, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -11



உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. முன்னர் சொன்ன குரூப் எல்லாம், குளிச்சேன் தூங்கினேன் சாப்பிட்டேன்னு சொல்லும் நம்ம கேட்டா, அதுவே அடுத்த குரூப், வார இறுதி, விடுமுறைன்னாலே, கேளிக்கை பொழுது போக்குன்னு உடனே கிளம்பிருவாங்க.

நாலு சக்கரமும் ஓடக் கூடிய வண்டிய (நல்லா பாருங்க, அல்லது கேளுங்க, கார் நாலு சக்கரத்தில இருந்தாலும், ஒடுறது என்னவோ இரண்டுதான், மத்த இரண்டும் உப்புக்குச் சப்பாணி (16 வயதினிலே கமல் அல்ல) மாதிரி சும்மா சுத்திக்கிட்டு இருக்கும்) எடுத்துக்கிட்டு, பாலைவனத்துக்கு போயி, டயர்ல உள்ள பாதிக் காத்த காத்து வாங்க விட்டுபுட்டு, ரோடே இல்லாத சொரி மண்ணுல வண்டிய ஓட்டுவாங்க. காத்து தான் பாலைவனத்துல P.W.D, அதாங்க ரோடு போடுற வேலை. அது பாட்டுக்கு போற வழிக்கு மண்ண குமிச்சு வைச்சுட்டு போயிடும். அந்த ஏற்ற இறக்கங்கள்ல வண்டி போறது ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் பயமாவும் இருக்கும். வானத்துல / காத்துல போயிருப்பீங்க, கடல்ல போயிருப்பீங்க, பாலைவனத்துல போறது ஒரு தனி அனுபவம். எல்லா இடமும் ஒரே மாதிரி தெரியும். காந்த துணையோட உள்ள காம்பஸ் மட்டும் இல்ல நாம் தொலைஞ்சு போற சான்ஸ் ரெம்ப அதிகம். இந்த பீதி பயணம் முடிந்ததும் தற்காலிக டெண்ட்ல* ரிலாக்சேஷன். நல்ல அரேபிய சாப்பாடு, பெண்கள் என்றால் கையில் மருதாணி, எகிப்தின்விசேஷமான பெல்லி டான்ஸ் (தொப்பை நடனம்), அரபி உடையணிந்து ஒரு ஃபோட்டோ, ஒட்டகத்தின் மேல் ஒரு ஒய்யார சவாரி. இந்த முழுதும் ஒரு பேக்கஜ் ஆக டெஸர்ட் டிரைவ் என்ற பெயரிலும், நம்மூர் கணக்கில் 3000 ரூபாயிலும் கிடைக்கும்.

கடலுக்குள்ள வாயில ஆக்ஸிஜன் குழாய கடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ள அப்படி என்னதாம்மா இருக்கு என்று பார்த்து வரலாம். அடிக்கடலுக்குள்ள மீனம்மா, மீன் மாமியார்ன்னு ஸ்பெஷலா பாட்டுப் பாடி ஆடலாம். போயிட்டு வந்த மக்கள் சொல்றாங்க, பழக்கப்படுத்தின டால்பின் வந்து நம்ம கிட்ட குஷி படுத்திட்டு போகுதுன்னு. என்ன நம்ம ஊர் காசில ஒரு 10000 ரூபா அம்புட்டுதேன், ஒரு அரை மணி நேரத்துக்கு.
இல்ல வானத்துல போயி பாராசூட் கட்டிக்கிட்டு, தொபுக்க்டீர்ன்னு கீழ குதிக்கலாம். கடல்ல டால்பினோட நீந்தி அதுக்கு ஒரு முத்தமும் தரலாம். அல்லது நமக்கு ரொம்ப பழகிப் போன தண்ணீர் பார்க் ! அதாங்க வாட்டர் அம்யூஸ்மெண்ட் பார்க் எல்லாம் சர்வதேச தரத்தில நம்ம பர்ஸ்ச பதம் பார்க்க பல் இளிச்சுகிட்டு நிக்குது. சரி ரேட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, சினிமா டிராமா பத்தி சொல்லுங்கன்னா.


தமிழ் படம் ஒடுற தியேட்டர் முந்தி ரெண்டு, மூணு இருந்துச்சு, இப்போ ஒண்ணே ஒண்ணு என் ஒன்றரை கண்ணுன்னு கலேரியாங்கிற பேரில இருக்கு.நமக்கு எப்போதுமே அபுதாபி  safeer maal சினிமாதான்,இதே துபாயா இருந்தா Grand Hayat இதுலதான் படம் பார்த்த பீலிங் இருக்கும் .


ஒவ்வொரு எமிரேட்டுலயும் ஒரு தியேட்டர் இருக்கு. அதென்ன ஒன்றரை, கலேரியா 1, 2ன்னு ரெண்டு தியேட்டர் இருந்தாலும் ஒண்ணு ரொம்ப பெரிசு (நம்ம நமீதா மாதிரி), அடுத்தது ரொம்ப சின்னது (நம்ம பாவனா மாதிரி). நம்ம வீட்டுல உட்கார்ந்து பாக்கிற மாதிரியே இருக்கும். ஒரு டிக்கெட் விலை திராம் 25 மட்டுமே (ரூ.400 வரை)... அதுக்கு கார்ல போய், அங்ஙனயே பார்க்கிங்போட்டா, அதுக்கு ஒவ்வொரு மணிக்கும் திராம் 10. ஆக, ரூ.400 குடுத்து டிக்கெட் வாங்கி "பில்லா 2" படம் பாத்தவியங்களுக்கு, பார்க்கிங் ரூ.525க்கு குறையாம... எவ்ளோ சல்லிசா இருக்கு இல்ல... சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம் என்று


.தமிழ் அசோசியேஷன் எல்லாம் இல்லையா என்ற கேள்விக்கு ஏன் இல்லாம ஒண்ணுக்கு பத்து இருக்கு என்று பதில்லலாம். அதுவே பக்கத்து சேர நாட்டுக்கு ஒரே அமைப்பு அம்சமா இருக்கு. ஒண்ணு மண்ணா இருக்கதால நல்ல அறுவடை மிதமிஞ்சிய மகசூல். நம்ம ஆளுங்க தான் மதம், வட்டாரம், பின்ன தான் "தலை"வனா இருக்கணும்னு இப்படி எல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு சகட்டு மேனிக்கு கடை துறந்ததாலே நீ பெரிசா நான் பெரிசா என்ற முக்கிய சண்டையில் முழு முச்சா இருக்காங்க. ஒத்துமையா ஒரே அமைப்பா இருங்கப்பா என்று ஒவ்வொரு மேடையிலும் எம்பெஸி ஆளுங்க கரிசனமாசொல்றதெல்லாம் ஆறிப்போன காப்பி மாதிரி. குடிச்சதும் தெரியல, செமிச்சதும் தெரியல. வருடா வருடம் நடக்கும் ஒரு கோலாகல கொண்டாட்டம் ‘துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்’. அக்கம் பக்கம் உள்ள அத்தனை சுத்து பட்டி அரேபிய நாடுகளும் வந்து கூடிக் கும்மாளம் போடும் திருவிளாதேன். ஊரே திருவிழா கோலம் பூண்டு, வெளியூர் வாசிகளால் தங்கும் விடுதிகள் எல்லாம் நிரம்பி வழியும், விமான போக்குவரத்து சில பல/ பல சில மடங்குகளாகும். இந்த ஒரு மாத வருமானம் சில ஹோட்டல்களுக்கு ஒரு வருடம் வரை தாக்கு பிடிக்க ஊதியம் தரும்.சரி அப்படி எங்கு கொண்டாட்டம். நம் ஊர் பொருட்காட்சி போல், ராட்டினம், பஞ்சு மிட்டாய் சமாச்சாரங்கள் ஒரு இடத்தில் உண்டு. அந்த இடத்திற்கு "க்ளோபல் வில்லேஜ்" என்று பெயர். உள்ளூர் கடைகள் முழுதும், தள்ளுபடி விலையில் வாடிக்கையாளரை கூப்பிட்டு பொருட்களை கையில் திணிப்பார்கள்.வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றாலும் அந்த சலுகை விலையில் நம் மனமே சபலப்படும்.

கேளிக்கை தொடரும் ...........................



Friday, July 20, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -10(புனித ரமலான் சிறப்பு பதிவு)


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html
  9. பாகம் -9   http://thanjavursiva.blogspot.com/2012/07/9.html

புனித ரமலான் நோன்பு மாதம் : 


இஸ்லாம் மார்கத்தின் மூன்று முக்கிய கடமைகள் உண்டு. ஒன்று நாள் தவறாத ஐந்து வேளை பிரார்த்தனை, இரண்டாவது, வாழ்வின் ஒரு முறையாவது மேற் கொள்ள வேண்டிய மெக்காவிற்கான புனித பயணம், அடுத்தது ரமலான் நோன்பு.
கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது எல்லோரையும்  வியப்பில் ஆழ்த்தும் . கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

புனித மாதமாய் வரையறுக்கப்பட்டு, கடுமையான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உபவாசம், வருமானத்தில் ஒரு பகுதி தானம் செய்தல் என உள்ள உடல் தூய்மை செய்யும் மாதம். சூரிய காலெண்டர் பின்பற்றுவதால், ரமலான் மாதத்தின் தொடக்கம் நமக்கு முன் கூட்டியே தெரியாது. சவுதி அரேபியாவில் பிறை தெரிகிறதா என்று சொன்னதும் தான் நமக்கு தெரியும். இஸ்லாம் இங்கு அரசு மதமானதால் ரமலான் கூடுதல் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும்.

சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை பொது இடங்களில் வைத்து உண்ணவோ, குளிர் மற்றும் சூடான பானங்கள் குடிக்கவோ தடை, அவர்களுக்கும், பொது இடங்களில் நமக்கும். வீட்டினுள் வைத்து மட்டுமே உண்ண முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.....இஸ்லாம் அல்லாதவர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாவம், நோன்பு நேரத்தில் சிகரெட் சீக்ரெட் ஆகும்.

பன்னிரெண்டு மணி நேரம் உண்ணாத வயிறை முதலில் தண்ணீர், பழ ரசம் குடித்தும், பின்னர் பேரிச்சை, திராட்சை பழங்களை உண்டு, பின்னர் கஞ்சி போல உண்பதும் ஆன நோன்பு திறக்கும் விருந்தின் பெயர் இப்தார்.

பணி நேரம் 12-15 மணி நேரத்திலிருந்து 6-8 மணி நேரமாக குறைக்கப்படும். ரமலான் நோன்பிருக்கும் முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும்.

விடிகாலையில் நான்கு மணிக்கு இறுதியாய் உண்ணவோ, குடிக்கவோ செய்யலாம், அதன் பின் மாலை சூரிய மறைவுக்கு பின் தான். காலை நோன்பு திறந்தவுடன், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும்..... பின், மாலை நோன்பு முடிந்த உடன் ஹோட்டல்கள் அனைத்தும் திறக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு பார்சல் வசதி சில ஹோட்டல்கள் செய்து தரும். ஹோட்டல்களில் சாப்பிட முடியாது..... பார்சல் தருவதென்றால் ஓகே என்பார்கள்...... நோன்பு இருக்காதவர், அந்த பார்சல் வசதியை உபயோக படுத்தி கொள்ளலாம்..

இந்த ரம்ஜான் நேரத்து, மதிய உணவு சேவையை செய்ய விரும்பும் ஹோட்டல்கள் தனியாக ஒரு சிறப்பு லைசன்ஸ் துபாய் முனிசிபாலிட்டியிடம் இருந்து வாங்க வேண்டும்,  இது, அந்த ரம்ஜான் மாதம் முழுதுக்குமான சிறப்பு லைசன்ஸ் தொகை..... ஆனால் ஒன்று, இந்த சிறப்பு லைசன்ஸ் இல்லாமல், மதிய உணவு சேவையை யாரும் செய்ய முடியாது...... அதிகாரிகள், திடீரென்று உணவகங்களில் வந்து சோதனை செய்வார்கள்....... பிடிபட்டால், பெரிய தொகை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

ரமலான் மாதத்தை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இன்னொரு விசயம் தொடர்ச்சியாய் கிடைக்கும் விடுமுறை தான். ஆரம்பிக்கும் தேதி நிச்சயம் இல்லாததால், விடுமுறை என்று தொடங்கும் என்பதும் லாட்டரி சீட்டு போலத்தான். வார இறுதி விடுமுறையோடு சேர்த்து இத்தனை நாள் என்று ஏக்கத்தில் ஏங்கும் உழைக்கும் வர்க்கம்.

இங்கு தொழிளார்கள் முதல் மேலாளர்கள் வரை அனைவருமே மூன்று மாதம் முதலே எங்கு செல்லலாம் என்ற திட்டம் இருக்கும் .....இப்படிதான் போன வருஷம் நினைச்சோம் முடியல !!!
ஆனா இந்ததடவை எப்படியும் போய்டுவோமடானு ....கீழ் தட்டு தொழிலாளர்கள் நண்பர்களையும் உறவினர்களையும் காணவும் .....நடுத்தர வர்கத்தினர் பீச் ,துபாய் மால் ,அலைன் ஜூ ,புஜைறாஹ் பீச் ,என்று நண்பர்கள் கூட்டத்திடனும்.......... ,மேல் தட்டு வர்கத்தினர் ஓமன் ,மஸ்கட் ,சலாலாஹ் ,இந்தியான்னு அவர்களது பொருளாதார நிலமைகேற்ப திட்டம் இருக்கும் , இதல்லாம் நடக்குமான்னு கேட்டா ? வீங்குன விவாதம் விரிஞ்சு போச்சு (இதுவும் புதுசா!!!).


இது எதுலயும் சேர்க்காத குடி வர்க்கம் ஒன்னு இருக்கு !!!!! இது குடி ,சாப்பாடு ,தூக்கம்னு நாலு சுவர்களுக்குள் முடிக்கும் கூட்டம் .....கேட்டா குடும்ப நினைப்புனு  சொல்லும் ....
(ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம் ) 

விடுமுறை நிச்சயம் ஒரு பயணத்தின் துணை கொண்டு இனிமையாய் நகரும். முடிந்த பின் அடுத்த வருடம் இப்படி செய்ய வேண்டும் என்று இப்போதே திட்டமிடும்.

தொடரும் ............

இஸ்லாமிய நண்பர்களுக்கும் !!பதிவர்களுக்கும் !!இந்த புனித ரமலான் மாதம் இனிதே அமைய வேண்டுகிறேன் ......