முக்கிய செய்திகள்

Monday, July 30, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -11



உலக மனுச ஜீவன்கள்ல இரண்டு வகை. வாரம் பூரா வேலை பார்த்து லீவு கிடைச்ச உடனே சுருண்டு மருண்டு மரவட்டை மாதிரி படுக்கிற சாது சாதி. இன்னொன்னு லீவு வுட்டதும் தோள்ல துண்ட போட்டுட்டு கிளம்புற அல்லது பட்டய கிளப்புற பிரதி வாதி. முன்னர் சொன்ன குரூப் எல்லாம், குளிச்சேன் தூங்கினேன் சாப்பிட்டேன்னு சொல்லும் நம்ம கேட்டா, அதுவே அடுத்த குரூப், வார இறுதி, விடுமுறைன்னாலே, கேளிக்கை பொழுது போக்குன்னு உடனே கிளம்பிருவாங்க.

நாலு சக்கரமும் ஓடக் கூடிய வண்டிய (நல்லா பாருங்க, அல்லது கேளுங்க, கார் நாலு சக்கரத்தில இருந்தாலும், ஒடுறது என்னவோ இரண்டுதான், மத்த இரண்டும் உப்புக்குச் சப்பாணி (16 வயதினிலே கமல் அல்ல) மாதிரி சும்மா சுத்திக்கிட்டு இருக்கும்) எடுத்துக்கிட்டு, பாலைவனத்துக்கு போயி, டயர்ல உள்ள பாதிக் காத்த காத்து வாங்க விட்டுபுட்டு, ரோடே இல்லாத சொரி மண்ணுல வண்டிய ஓட்டுவாங்க. காத்து தான் பாலைவனத்துல P.W.D, அதாங்க ரோடு போடுற வேலை. அது பாட்டுக்கு போற வழிக்கு மண்ண குமிச்சு வைச்சுட்டு போயிடும். அந்த ஏற்ற இறக்கங்கள்ல வண்டி போறது ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் பயமாவும் இருக்கும். வானத்துல / காத்துல போயிருப்பீங்க, கடல்ல போயிருப்பீங்க, பாலைவனத்துல போறது ஒரு தனி அனுபவம். எல்லா இடமும் ஒரே மாதிரி தெரியும். காந்த துணையோட உள்ள காம்பஸ் மட்டும் இல்ல நாம் தொலைஞ்சு போற சான்ஸ் ரெம்ப அதிகம். இந்த பீதி பயணம் முடிந்ததும் தற்காலிக டெண்ட்ல* ரிலாக்சேஷன். நல்ல அரேபிய சாப்பாடு, பெண்கள் என்றால் கையில் மருதாணி, எகிப்தின்விசேஷமான பெல்லி டான்ஸ் (தொப்பை நடனம்), அரபி உடையணிந்து ஒரு ஃபோட்டோ, ஒட்டகத்தின் மேல் ஒரு ஒய்யார சவாரி. இந்த முழுதும் ஒரு பேக்கஜ் ஆக டெஸர்ட் டிரைவ் என்ற பெயரிலும், நம்மூர் கணக்கில் 3000 ரூபாயிலும் கிடைக்கும்.

கடலுக்குள்ள வாயில ஆக்ஸிஜன் குழாய கடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ள அப்படி என்னதாம்மா இருக்கு என்று பார்த்து வரலாம். அடிக்கடலுக்குள்ள மீனம்மா, மீன் மாமியார்ன்னு ஸ்பெஷலா பாட்டுப் பாடி ஆடலாம். போயிட்டு வந்த மக்கள் சொல்றாங்க, பழக்கப்படுத்தின டால்பின் வந்து நம்ம கிட்ட குஷி படுத்திட்டு போகுதுன்னு. என்ன நம்ம ஊர் காசில ஒரு 10000 ரூபா அம்புட்டுதேன், ஒரு அரை மணி நேரத்துக்கு.
இல்ல வானத்துல போயி பாராசூட் கட்டிக்கிட்டு, தொபுக்க்டீர்ன்னு கீழ குதிக்கலாம். கடல்ல டால்பினோட நீந்தி அதுக்கு ஒரு முத்தமும் தரலாம். அல்லது நமக்கு ரொம்ப பழகிப் போன தண்ணீர் பார்க் ! அதாங்க வாட்டர் அம்யூஸ்மெண்ட் பார்க் எல்லாம் சர்வதேச தரத்தில நம்ம பர்ஸ்ச பதம் பார்க்க பல் இளிச்சுகிட்டு நிக்குது. சரி ரேட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, சினிமா டிராமா பத்தி சொல்லுங்கன்னா.


தமிழ் படம் ஒடுற தியேட்டர் முந்தி ரெண்டு, மூணு இருந்துச்சு, இப்போ ஒண்ணே ஒண்ணு என் ஒன்றரை கண்ணுன்னு கலேரியாங்கிற பேரில இருக்கு.நமக்கு எப்போதுமே அபுதாபி  safeer maal சினிமாதான்,இதே துபாயா இருந்தா Grand Hayat இதுலதான் படம் பார்த்த பீலிங் இருக்கும் .


ஒவ்வொரு எமிரேட்டுலயும் ஒரு தியேட்டர் இருக்கு. அதென்ன ஒன்றரை, கலேரியா 1, 2ன்னு ரெண்டு தியேட்டர் இருந்தாலும் ஒண்ணு ரொம்ப பெரிசு (நம்ம நமீதா மாதிரி), அடுத்தது ரொம்ப சின்னது (நம்ம பாவனா மாதிரி). நம்ம வீட்டுல உட்கார்ந்து பாக்கிற மாதிரியே இருக்கும். ஒரு டிக்கெட் விலை திராம் 25 மட்டுமே (ரூ.400 வரை)... அதுக்கு கார்ல போய், அங்ஙனயே பார்க்கிங்போட்டா, அதுக்கு ஒவ்வொரு மணிக்கும் திராம் 10. ஆக, ரூ.400 குடுத்து டிக்கெட் வாங்கி "பில்லா 2" படம் பாத்தவியங்களுக்கு, பார்க்கிங் ரூ.525க்கு குறையாம... எவ்ளோ சல்லிசா இருக்கு இல்ல... சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம் என்று


.தமிழ் அசோசியேஷன் எல்லாம் இல்லையா என்ற கேள்விக்கு ஏன் இல்லாம ஒண்ணுக்கு பத்து இருக்கு என்று பதில்லலாம். அதுவே பக்கத்து சேர நாட்டுக்கு ஒரே அமைப்பு அம்சமா இருக்கு. ஒண்ணு மண்ணா இருக்கதால நல்ல அறுவடை மிதமிஞ்சிய மகசூல். நம்ம ஆளுங்க தான் மதம், வட்டாரம், பின்ன தான் "தலை"வனா இருக்கணும்னு இப்படி எல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு சகட்டு மேனிக்கு கடை துறந்ததாலே நீ பெரிசா நான் பெரிசா என்ற முக்கிய சண்டையில் முழு முச்சா இருக்காங்க. ஒத்துமையா ஒரே அமைப்பா இருங்கப்பா என்று ஒவ்வொரு மேடையிலும் எம்பெஸி ஆளுங்க கரிசனமாசொல்றதெல்லாம் ஆறிப்போன காப்பி மாதிரி. குடிச்சதும் தெரியல, செமிச்சதும் தெரியல. வருடா வருடம் நடக்கும் ஒரு கோலாகல கொண்டாட்டம் ‘துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்’. அக்கம் பக்கம் உள்ள அத்தனை சுத்து பட்டி அரேபிய நாடுகளும் வந்து கூடிக் கும்மாளம் போடும் திருவிளாதேன். ஊரே திருவிழா கோலம் பூண்டு, வெளியூர் வாசிகளால் தங்கும் விடுதிகள் எல்லாம் நிரம்பி வழியும், விமான போக்குவரத்து சில பல/ பல சில மடங்குகளாகும். இந்த ஒரு மாத வருமானம் சில ஹோட்டல்களுக்கு ஒரு வருடம் வரை தாக்கு பிடிக்க ஊதியம் தரும்.சரி அப்படி எங்கு கொண்டாட்டம். நம் ஊர் பொருட்காட்சி போல், ராட்டினம், பஞ்சு மிட்டாய் சமாச்சாரங்கள் ஒரு இடத்தில் உண்டு. அந்த இடத்திற்கு "க்ளோபல் வில்லேஜ்" என்று பெயர். உள்ளூர் கடைகள் முழுதும், தள்ளுபடி விலையில் வாடிக்கையாளரை கூப்பிட்டு பொருட்களை கையில் திணிப்பார்கள்.வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றாலும் அந்த சலுகை விலையில் நம் மனமே சபலப்படும்.

கேளிக்கை தொடரும் ...........................



Friday, July 20, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -10(புனித ரமலான் சிறப்பு பதிவு)


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html
  9. பாகம் -9   http://thanjavursiva.blogspot.com/2012/07/9.html

புனித ரமலான் நோன்பு மாதம் 


இஸ்லாம் மார்கத்தின் மூன்று முக்கிய கடமைகள் உண்டு. ஒன்று நாள் தவறாத ஐந்து வேளை பிரார்த்தனை, இரண்டாவது, வாழ்வின் ஒரு முறையாவது மேற் கொள்ள வேண்டிய மெக்காவிற்கான புனித பயணம், அடுத்தது ரமலான் நோன்பு.
கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது எல்லோரையும்  வியப்பில் ஆழ்த்தும் . கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

புனித மாதமாய் வரையறுக்கப்பட்டு, கடுமையான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உபவாசம், வருமானத்தில் ஒரு பகுதி தானம் செய்தல் என உள்ள உடல் தூய்மை செய்யும் மாதம். சூரிய காலெண்டர் பின்பற்றுவதால், ரமலான் மாதத்தின் தொடக்கம் நமக்கு முன் கூட்டியே தெரியாது. சவுதி அரேபியாவில் பிறை தெரிகிறதா என்று சொன்னதும் தான் நமக்கு தெரியும். இஸ்லாம் இங்கு அரசு மதமானதால் ரமலான் கூடுதல் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும்.

சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை பொது இடங்களில் வைத்து உண்ணவோ, குளிர் மற்றும் சூடான பானங்கள் குடிக்கவோ தடை, அவர்களுக்கும், பொது இடங்களில் நமக்கும். வீட்டினுள் வைத்து மட்டுமே உண்ண முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.....இஸ்லாம் அல்லாதவர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாவம், நோன்பு நேரத்தில் சிகரெட் சீக்ரெட் ஆகும்.

பன்னிரெண்டு மணி நேரம் உண்ணாத வயிறை முதலில் தண்ணீர், பழ ரசம் குடித்தும், பின்னர் பேரிச்சை, திராட்சை பழங்களை உண்டு, பின்னர் கஞ்சி போல உண்பதும் ஆன நோன்பு திறக்கும் விருந்தின் பெயர் இப்தார்.

பணி நேரம் 12-15 மணி நேரத்திலிருந்து 6-8 மணி நேரமாக குறைக்கப்படும். ரமலான் நோன்பிருக்கும் முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும்.

விடிகாலையில் நான்கு மணிக்கு இறுதியாய் உண்ணவோ, குடிக்கவோ செய்யலாம், அதன் பின் மாலை சூரிய மறைவுக்கு பின் தான். காலை நோன்பு திறந்தவுடன், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும்..... பின், மாலை நோன்பு முடிந்த உடன் ஹோட்டல்கள் அனைத்தும் திறக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு பார்சல் வசதி சில ஹோட்டல்கள் செய்து தரும். ஹோட்டல்களில் சாப்பிட முடியாது..... பார்சல் தருவதென்றால் ஓகே என்பார்கள்...... நோன்பு இருக்காதவர், அந்த பார்சல் வசதியை உபயோக படுத்தி கொள்ளலாம்..

இந்த ரம்ஜான் நேரத்து, மதிய உணவு சேவையை செய்ய விரும்பும் ஹோட்டல்கள் தனியாக ஒரு சிறப்பு லைசன்ஸ் துபாய் முனிசிபாலிட்டியிடம் இருந்து வாங்க வேண்டும்,  இது, அந்த ரம்ஜான் மாதம் முழுதுக்குமான சிறப்பு லைசன்ஸ் தொகை..... ஆனால் ஒன்று, இந்த சிறப்பு லைசன்ஸ் இல்லாமல், மதிய உணவு சேவையை யாரும் செய்ய முடியாது...... அதிகாரிகள், திடீரென்று உணவகங்களில் வந்து சோதனை செய்வார்கள்....... பிடிபட்டால், பெரிய தொகை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

ரமலான் மாதத்தை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இன்னொரு விசயம் தொடர்ச்சியாய் கிடைக்கும் விடுமுறை தான். ஆரம்பிக்கும் தேதி நிச்சயம் இல்லாததால், விடுமுறை என்று தொடங்கும் என்பதும் லாட்டரி சீட்டு போலத்தான். வார இறுதி விடுமுறையோடு சேர்த்து இத்தனை நாள் என்று ஏக்கத்தில் ஏங்கும் உழைக்கும் வர்க்கம்.

இங்கு தொழிளார்கள் முதல் மேலாளர்கள் வரை அனைவருமே மூன்று மாதம் முதலே எங்கு செல்லலாம் என்ற திட்டம் இருக்கும் .....இப்படிதான் போன வருஷம் நினைச்சோம் முடியல !!!
ஆனா இந்ததடவை எப்படியும் போய்டுவோமடானு ....கீழ் தட்டு தொழிலாளர்கள் நண்பர்களையும் உறவினர்களையும் காணவும் .....நடுத்தர வர்கத்தினர் பீச் ,துபாய் மால் ,அலைன் ஜூ ,புஜைறாஹ் பீச் ,என்று நண்பர்கள் கூட்டத்திடனும்.......... ,மேல் தட்டு வர்கத்தினர் ஓமன் ,மஸ்கட் ,சலாலாஹ் ,இந்தியான்னு அவர்களது பொருளாதார நிலமைகேற்ப திட்டம் இருக்கும் , இதல்லாம் நடக்குமான்னு கேட்டா ? வீங்குன விவாதம் விரிஞ்சு போச்சு (இதுவும் புதுசா!!!).


இது எதுலயும் சேர்க்காத குடி வர்க்கம் ஒன்னு இருக்கு !!!!! இது குடி ,சாப்பாடு ,தூக்கம்னு நாலு சுவர்களுக்குள் முடிக்கும் கூட்டம் .....கேட்டா குடும்ப நினைப்புனு  சொல்லும் ....
(ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம் ) 

விடுமுறை நிச்சயம் ஒரு பயணத்தின் துணை கொண்டு இனிமையாய் நகரும். முடிந்த பின் அடுத்த வருடம் இப்படி செய்ய வேண்டும் என்று இப்போதே திட்டமிடும்.

தொடரும் ............

இஸ்லாமிய நண்பர்களுக்கும் !!பதிவர்களுக்கும் !!இந்த புனித ரமலான் மாதம் இனிதே அமைய வேண்டுகிறேன் ...... 

Monday, July 9, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -9



  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html


கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாய் தனியாய் எங்களோடு வாழும் துரதிருஷ்டசாலி என்னருகில். லேசாய் தொண்டையை கனைத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன், ஏங்க குடும்பமாய் வாழக் கூடாதா என்று. அவ்வளவுதான் . மனிதன் புலம்பித் தீர்த்து விட்டார்.

குடும்பத்தை வைத்துள்ளவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.... விஷம் போல் ஏறிய வாடகை, பிள்ளைகளின் படிப்பிற்கான செலவு, விடுமுறை நாட்களில் வெளியே சென்று வர ஆகும் டாக்ஸி கட்டணம், ஹோட்டலில் சாப்பிடும் ஆகும் செலவு என்று.... பல்முனை தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்....


முன்பு அமீரக அரசாங்கம், திராம் 3,000/- சம்பளம் இருந்தால், உங்கள் குடும்பத்துடன் தங்கி இருப்பதற்கு விசா கொடுத்தது.... பின், அது திராம் 4000/- ஆனது, பின் திராம் 6000/-  இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் இருக்க முடியும் என்றொரு புது குண்டு போட்டது......


என்ன செய்வது..... இங்கு அவர்கள் வைத்தது தானே சட்டம்.... இஷ்டம் இருந்தால் இரு, கஷ்டமெனில் நாட்டை விட்டு வெளியேறு என்பது தானே அவர்கள் நம்மிடம் மறைமுகமாக சொல்லும் சேதி.....

கொடி பிடிப்பது, அரசாங்கத்தை எதிர்த்து கோஷம் இடுவது, அந்த கும்பலில், கலவரத்திற்கு வழிசெய்வது, அரசாங்க மற்றும் தனியார் வண்டிகளை கொளுத்துவது போன்ற விஷயங்கள் நமக்கு நம்மூரில் வேண்டுமானால் நடக்கலாம்.... இங்கு..... ஹூம்.....மூச்....... நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....

கேளிக்கை பொழுதுபோக்கு எனும் விஷயங்கள் தவிர்த்து, வளைகுடா பற்றியும் அதன் தன்மை பற்றியும்  8 பகுதிகளாக பார்த்து வந்தோம். இது ஒன்பதாவது , இன்னும் ஓரிறு பகுதிகளில் அதையும் சொல்லி நிறைவு செய்ய எண்ணுகிறேன் .

இது வரை வாசித்து வந்த உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.

சரி, துபாய் மிக சிறிய இடம் என்று பதிவில் குற்ப்பிட்டுள்ளீர்கள், பின்னர் எப்படி இத்தனை உலக பிரசித்தி பெற்றது.

இந்த கேள்வியில், வளைகுடாவின் வளர்ச்சி பற்றியும், ஏன் நம்ம ஊர் துபாய் போல இல்லை என்பதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒன்று இரண்டு காரணங்களை பார்ப்போமே.

இந்த அரசின் தொலை நோக்கு பார்வையும், நேர்மையான ஆற்றல் மிக்க செயல் திறனுமே.

நிர்வாகம் ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் தொழில் போலே நடக்கும். பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகை / கட்டணம் அவர்களுக்கு சேவையாய் சென்றடைகிறதா என்பதில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்ப்பார்கள். போலீஸ் அற*வே ல*ஞ்ச*ம் வாங்குவ*தில்லை...( ந**ம்மாளுங்க* யாரும் உள்ளூர் போலீஸ் டிபார்மெண்டில் வேலையில் இல்லை....)


எதிலும் உயர்வு, எங்கும் மேன்மை. இதுவே தாரக மந்திரம். இல்லையென்றால் உலகின் உயரமான, உலகின் பெரிய உள்ளரங்கு சந்தை, அல்லது கடலில் மண்ணைக் கொட்டி நிலமாக்கி ப்ளாட் போட்டு விற்போம்*, ஊருக்குள்ள பள்ளம் தோண்டி கடல் தண்ணி திறந்து விடுவோம், கடலுக்குள்ள மூச்சடக்கி போயி பவுண்டேஷன் போடுவோம்!!! அங்க ஒரு 50 மாடியில 7 நட்சத்திர ஓட்டல் கட்டுவோம், போன்ற சுதந்திர சிந்தனை எக்கச்சக்கம். 

இதெல்லாம் என்ன, சொல்லவே இல்லை என்பவருக்கு இத பத்தி விலாவாரியா அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.

எட்டு  வருசத்துக்கு முந்தி இந்த ஷேக் ஸாயித் ரோட்டில ஒண்ணுமே கிடையாது, இப்போ பாரு எத்தனை பில்டிங்கு, எனும் ஆச்சரிய வாக்கியம் மிக சகஜமாக இங்கு கேட்கும். ஆறு மாசத்தில இவ்வளவு மாறுதலா என வந்தவர் அதிசயிப்பார்.


ஒரு தமாஷ கேளுங்க, "உங்க ஆபிஸ் வரணும், வரைபடம் அனுப்புங்களேன்" என கேட்க "அட போய்யா, ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு புதுசு புதுசா மேப் போட்டு, போதும் போதும்னு ஆச்சு நீயே கண்டு பிடிச்சு வா" என சலித்து கொண்டார். இவருக்கே இப்படின்னா, பாவம் மேப் போட்டு விக்குற கம்பெனி பாடு.

6 லேன்ல எக்ஸ்பிரஸ்வேயா, ஒரு ஆறு மாதம் கொடு, 50 மாடியில காங்கிரீட் பில்டிங்கா, ஒரு இரண்டு வருசம் கொடு என்பது போல கற்பனைக்கு எட்டாத காலத்திட்டம் இங்கு சாஸ்வதம். கட்டுமான பணிகள் எல்லாம் திட்டமிட்ட தேதி, திட்டமிட்ட விதத்தில் இனிதே நிறைவேறும். இல்லையென்றால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.


அமெரிக்கா பெரிதாய் அஞ்சும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த முக்கிய புள்ளிக*ள், இரண்டு வருடங்களுக்கு முன் துபாய் வந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாய் பரவலான ஒரு கிசு கிசு உண்டு.
இந்தியா தேடிக் கொண்டு இருக்கும் ஒரு நிழல் உலக தாதா (தாத்தா அல்ல - அவ*ர் அவ*ரை விட பெரிய கேடி) தன் மகளுக்கு விமரிசையாய் கண்ணாலம் கட்டிக் கொடுத்தது இங்கே தான். எப்ப*டி........

அது எப்படி ஒரே நேரத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பாய் இருப்பது. அது தான், துபாய். தெளிவான சிந்தனை, கடுமையான சட்ட திட்டங்கள் (என்ன தான் தாதா வா இருந்தாலும் இங்க இருக்கச் சொல்ல பச்ச பிள்ள மாதிரி இருக்கணும், இல்லன்னா.....அதான் ஏற்க*ன*வே சொல்லிட்டோமே....)

கோடு கிழிப்பதில் இருக்குது இவர்கள் சூட்சமம். இத கேளுங்களேன். சரக்கு (மது) அடிக்க அனுமதி உண்டு. அதுவும் சில எமிரேட்டுகளில், குறிப்பிட்ட உணவு விடுதிகளில் மாத்திரம். குடிச்சோமா, சத்தம் இல்லாம போனோமான்னு இருக்கணும். இல்லாம சலம்புனீங்க, அவ்ளோதான், தூக்கிக்கிட்டு போயி உள்ள போட்டு, நொங்கி எடுத்து, அப்புறமா ஊர விட்டு நாடு கடத்திருவாங்க அம்புடுதேன்.

புனித ரமலான் மாதத்தின் போது, குடி/சரக்கு எங்கும் தடை செய்யப்படும்.... ஹோட்டல்கள், பார்கள் இந்த சமயத்தில் குடி/சரக்கு சப்ளை செய்யாது... அது போன்றதொரு உத்தரவு அவர்களுக்கு அரசாங்கத்தால் முறையாக முன்கூட்டியே அனுப்பப்படும்....
ஷார்ஜாவில் எப்போதுமே குடி/சரக்கு கிடையாது (பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட)... காரணம், அவர்கள் சவுதி அரேபியாவின் சட்ட திட்டத்தை பின்பற்றுவது தான்....

ஷார்ஜாவில் இருப்பவர் சரக்கு குடிக்க வேண்டுமெனில், இந்த பக்கம் இருக்கும் துபாய்க்க்கோ அல்லது அந்த பக்கம் இருக்கும் அஜ்மனுக்கோ தான் செல்ல வேண்டும்.... வ*ரும்போது போதையில் த*ள்ளாடிக்கொண்டே வ*ர*வேண்டும்.

வண்டிகளின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் விசயத்துல யாவாரத்த பாருங்க, கார் நம்பர் ப்ளேட்டுகள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் கொள்ளை விலை...ஒவ்வொரு டிஜிட் குறையும்போதும், நம்பர் ப்ளேட்டின் விலை அதிகமாகும்..
உதாரணமாக 4/5 மாதங்களுக்கு முன் ஒரு டிஜிட் கொண்ட நம்பர் ப்ளேட் அபுதாபி தொழிலதிபர் ஒருவரால் திராம் 27 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி) கொடுத்து எடுக்கப்பட்டது... இது கின்னஸ் சாதனை விலை, ஒரு நம்பர் ப்ளேட்டுக்கு….ப*டிக்கும் போதே சிறு மூச்சு, பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே...

காசு ஜாஸ்தி பண்ணு, ஆனா சேவைய உயர்த்து, இது தான் கொள்கை. டெலிஃபோன் சர்வீஸ் செய்யுறது ரெண்டு பேர், எடிஸாலட் மற்றும் டூ... இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..

சில தொழில் நுட்ப காரணத்திற்காக அமீரக அரசாங்கம், திடீரென அனைத்து டாக்சிகளின் நம்பர் ப்ளேட் நிறத்தை கருப்பு வெள்ளையிலிருந்து, மஞ்சள், கருப்பிற்கு மாற்ற சொல்லியது.... இரு தினங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்களின் நம்பர் ப்ளேட் நிறம் மாற்றப்பட்டுள்ளது.... அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?



அடுத்த பதிவு துபாயில் புனித ரமலான் நோன்பு மாதம் !!!!!!!!!!!!!!!!


Sunday, July 1, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -8


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html


துபாய் சூரியன்!!! சரிந்து, மெல்ல தவழ்ந்து மேற்கை முத்தமிட்டது. இரை தேடி அலுவலகம் வந்து அடை பட்ட மனித பற*வைகள், தம் கூட்டுக்கு செல்லும் ஆயத்ததில் மும்முரமாய் இருந்தனர். நாளை வந்தவுடன் முதலில் இந்த வேலை முடிக்க வேன்டும் என்று மனதில் குறித்துக் கொண்டு, வண்டிகள் நோக்கி தளர் நடை இட்டனர். எங்களுக்காக காத்து இருந்து எல்லோரும் அமர்ந்ததும் மெதுவாய் வண்டி கிளம்பியது.

வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் ஸ்விட்ச் போட்ட மாதிரி தலை பின்னோக்கி சாய்த்து, ஒரு சுகமான குட்டி தூக்கம். உச்ச ஸ்தாயியில் சில குறட்டை வேறு. ஏன் இது. சுவாரசியமாய் வெளியில் வேடிக்கை பார்க்க நம் ஊர் போல சுவரொட்டிகளோ, பேனர்களோ இல்லை, மற்றது இந்த ஊர் சீதோஷணம், பளீர் வெயிலும் சூடும், இமைகளை வந்து மூடி விடும் நம்மைக் கேட்காமலே.

சக பிரயாணிகள் அத்தனை பேரும் உறக்கத்தில். டிரைவரை தவிர ( நல்ல வேளை) என்னையும் தவிர. முதல் நாள் அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது, வீட்டு ஞாபகம். பிரிந்து வந்த உறவுகள் எல்லாம் மனக்கண் முன்னால் ஒடியது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழி மனதில், உடன் இருந்த போது தோன்றாத பாசம் வாட்டி, இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆவல் தூண்டும். பணமோ, நேரமோ, தூரமோ மாத்திரம் அல்லாது, அலுவலக அனுமதி என்னும் உச்சகட்ட தடைக்கல் நம் இயலாமையை ஏள*னம் செய்யும்.மீண்டும் அதே சாலை, வழுக்கிக் கொண்டு ஒடும் வண்டிகள். வழ*க்கமான
வாகன நெரிசல். எல்லா சாலையும் ஒரே மாதிரி தெரியுது. உள்ளூர் ஏரியாக்களும், சாலை பெயர்களும், நேற்று சுட்ட வடை போல* வாயில் நுழைய மறுக்கிறது. முதலில் தோன்றும், இது எல்லாம் தெரிந்த ஒட்டுனர் பெரிய பிஸ்தா வென்று. ஆறு மாதம் ஆனால் நமக்கே இதெல்லாம் தெரியும் என்பது அப்போது தெரியவில்லை

ரோடில் போகும் போது, போக்குவரத்து பற்றி கொஞ்சம் விரிவாய் பார்ப்போம். சாலை வழியே பிரதானம். பொது போக்குவரத்து பஸ்களும், டாக்ஸிகளும் கவைக்குதவாததால், நம் கால்களையே.... சாரி நம் கார்களையே நம்ப வேண்டிய நிலை. அதனால் தான் ஒற்றை ஆளாய் உட்கார்ந்து லாரி சைசில் உள்ள வண்டி ஓட்டி கொண்டு போவார் நம் அமீரகத்தின் ஆள்.ஒற்றை ஆளாய் உட்கார்ந்து ஒட்டும் வண்டியின் எண்ணிக்கைதான் சாலை நெரிசலின் பிள்ளையார் சுழி.

ஓட்டுனர் உரிமம், அதாங்க நம்ம ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது ரொம்ப கஷ்டம். அழ அழ வைத்து பின்னர் தான் கொடுப்பார். ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றால் பயிற்சி பள்ளிக்கு சென்று அட்மிஷன் வாங்க வேண்டும். அனுமதிக்கு முன் உங்கள் கண்ணை பரிசோதித்து கண் நல்லா தெரியுது என்ற சான்றிதளோடு செல்ல மறக்க கூடாது.

முதலில் சாலை விதி முறைகள் மற்றும் சாலை குறியீடுகள் எல்லாம் வகுப்பறையில் சொல்லி கொடுக்கப்பட்டு பின்னர் வண்டியில் ஏற வேண்டும். இதில் இரு நிலை. முதலில் நான்கு சுவர்களுக்கு உள்ளே ஓட்ட தெரிகிறது வண்டியை நிறுத்த தெரிகிறது என்று நிச்சயம் ஆனதும் சாலைக்கு வர அனுமதி. சாலையில் வாத்தியாரோடு பாடம் நடக்கும். பின்னர் வாத்தியார் (எம்.ஜி.ஆர்.அல்ல) ஓகே என்ற உடன் நமக்கு பரிட்சை.

எப்படி தான் அந்த தேர்வு பயம் கொண்டு வருவார்களோ அந்த ஆண்டவருகே வெளிச்சம். எத்தனை பெரிய சூரனும் படபடத்து பயத்தில் மூழ்குவான். மிக குறைவாய் பேசும் பரிசோதகர், எளிதாய் நம்மை பெயில் செய்வார். எட்டு பத்து தேர்வு எழுதியும், ஒரு லட்சம் ரூபா செலவழித்தும் இன்னும் கிடைக்கல என்ற மனித புலம்பல்கள், எங்கும் நிறைந்து இருக்கும்.

சரி ஏன் இத்தனை கெடுபிடி.

வண்டி வாங்கி ஒட்ட துவங்கிய முதல் இரு மாதத்தில், நாம் எப்படி ஓட்டினோம். அதுவே ஒரு இரண்டு மாதத்தில் பழகி, அனாயாசமாய் இது ஒரு வேலையே இல்லை என்று நினைத்தோம் அல்லவா. வண்டி ஓட்ட மூளையை பயன் படுத்தாமல், தன்னிச்சை உணர்வுக்கு விட்டு விடும் போது, கார் தானாய் ஓடும் அல்லவா. அப்படி ஒரு உயர்ந்த நிலை வரும் வரை உரிமம் இல்லை, உக்கி போடு தான். 120 கீ.மீ. வேகத்தில் செல்லும் சாலையில் முதல் நாளே நாம் ஓட்ட வேண்டாமா. கத்துகுட்டிகளின் தவறு அவர்களை மட்டும் அல்லாது, அடுத்தவரையும் கொல்லும் அல்லவா.

கார் வாங்குவது கத்திரிகாய் வாங்குவது போலதான். பழையது, புதியது, எல்லாம் எளிதில் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும், புதுப்பித்து 63 டெஸ்ட் பாஸ் செய்தாலே வண்டி ஓட்ட அரசு அனுமதி கிடைக்கும். அதாவது புளக்கத்தில் உள்ள வண்டிகள் எல்லாம் தங்க கம்பிகளே. எனவே தைரியமாக போய் வண்டி வாங்கலாம். ஒட்டை உடைசலை நம் தலையில் கட்டும் வேலை நடக்காது.

நம் ஊரில் லெக்ஸஸ் கார் வாங்க முடியுமா. ஜாகுவார், ரேஞ்சு ரோவெர் வாங்க முடியுமா. மிக பெரிய செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிகிற ஒரு கோடி ரூபா கார் இங்கே கொஞ்சம் இஷ்டமும் கொஞ்சம் கஷ்டமும் பட்டாலே போதுமானது. நம்ம ஊர் கணக்கிலே பிரமாதம் என்று கருதும் லான்செரும் டொயோட்டா கொரேல்லாவும் தான் இங்கே ஆரம்பம்.

துபாய் மற்றோரு கோண்த்தில் பார்த்தால்(2000-2008) புது பணக்காரன் என்றும் சொல்லலாம். சிலாகித்து சொல்ல வரலாறு இல்லை. 1950-களில் தோண்டி எடுத்த எண்ணையில் வண்டி ஒடும் என்று கண்டு பிடித்தவன் பிடி புதையல் என்று கொடுத்த வரம் இது.

பாலை வனம் உண்டானது எப்படி? வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் "ஞே" என்று விழித்த போது, காது முறுக்கி, "ஆ" என்று அலறவிட்டு, வாத்தியார் சொன்னது "வளமையான காடுகள் மண்ணில் புதைந்ததனால், வறட்சி ஏற்பட்டு பாலைவனம் ஆனது. புதைந்த காடுகளே பெட்ரோலியம் பொருட்களாக உருமாறி, .... தெரியுதா சோமாரி!!!

சில சமயம் இப்படித் தோன்றும். ஒரு காலத்தில், சில பல* நூற்றாண்டுகளுக்கு முன் நிச்சயம் துபாய் பூத்து குலுங்கி இருக்க வேண்டும். உயர்ந்த மரங்களும், பச்சை இலைகளும் நிறைந்து நம் ஊர் போல் இருந்து இருக்க வேண்டும். பின்னர் காடுகள் பூமி உள் சென்று பெட்ரோலாய் விளைந்து (??) இருக்க வேண்டும். இன்று அடர்த்தியாய் உள்ள கேரளா நாளை பாலைவனம் போல் ஆகுமோ ???? துபாய் அப்போது பச்சையாய் இருக்குமோ??? வேலை தேடி ஷேக் எல்லாம் சேட்டனிடத்தில் வருவாரோ????

கடுகை துளைத்து ஏழ் கடலை அடக்கிய குறள் நம் தமிழுக்கு அழகு என்றால், சாலையை துளைத்து ஸ்டேஷனை அடக்கிய மெட்ரோ துபாய்க்கு அணிகலனே. சாலைக்கு மேலே சில, பூமிக்கு கீழே பல என்ற ரயில் இருப்புப் பாதைகளும், ஸ்டேஷன்களும் ஜொலி ஜொலிக்குதே, கண்ணைப் பறிக்குதே!!.
ஆனால் துபாய் சூட்டில் ஒரு பிரச்சனை உண்டு. ஐந்து நிமிடம் சூரியனோடு உறவாட முடியாது. (இதில் அரசியல் உள் குத்து ஒனறும் இல்லை) நடந்தாலோ, நின்றாலோ தலை சுத்தி விடும். பாருங்களேன் இல்லை என்றால் குளுகுளுவென சாலை ஓர பஸ் ஸ்டாப் தேவையா. பின்னர் எப்படி ஸ்டேஷன் விட்டு வெளியில் வந்து நம் இலக்கு அடைய முடியும் என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்க வேண்டியது தான்.