முக்கிய செய்திகள்

Wednesday, November 9, 2011

மூன்று வகை மனிதர்கள்



நான் என் வாழ்வில் கண்ட மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தி உணர்ந்திருக்கிறேன்..

இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை மனிதனாகவே 
இருக்க முயற்சித்து வருகிறேன்..
இதோ என் வகைப்பாடு..







சிந்திப்போர் 
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!

அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!

சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!

பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!

மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!

கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!

வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!

காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!

வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!


வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!

துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!

பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!

தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!

அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!

Tuesday, November 8, 2011

நேர் நேர் தேமா


     வைரமுத்து சொன்னது போல "யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அந்த வகையில் தன் பணி நிமித்தம் காரணமாக எடுத்த சில பேட்டிகளை புத்தக வடிவமாக்கி இருக்கிறார் "நீயா நானா " கோபிநாத். திரையில் நாம் காணும் பேட்டி பிரபலங்களின் மனதை மட்டுமே பதிவு செய்கிறது. ஆனால், இந்த புத்தகத்தின் மூலம் பேட்டி எடுப்பவரின்  மனதையும் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு.
      பேட்டிகளை எழுத்தாக்கம் செய்யும் போது எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் வார்த்தைகளைக்  கையாண்டு இருக்கிறார். அதற்காக பேட்டி காணும் முன் ஏற்பட்ட படபடப்பு, மனதில் தோன்றிய கேள்விகள் என அற்புதமாக நம்மை அந்த இடத்திற்கே கூட்டி சென்று விடுகிறார்.

     "ஒரு சுய முன்னேற்ற நூலில் கூறிய அனைத்தும் உனக்கு ஒத்துவராது. உனக்கு என்ன தேவையோ, அதை நீ எடுத்துக் கொள்", என யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல பல்துறை சாதனையாளர்களின் பேட்டிகளின் தொகுப்பு என்ற வகையில் இது முக்கியமான படைப்பாக மனதிற்குப்படுகிறது. 


புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் கூறியுள்ளதாவது:
     அரிச்சந்திரன் நாடகம் பார்த்து காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்வார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையை அது அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்திபோல் முடிவு செய்திருக்க வேண்டும்.

     இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

     என் வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் முன்னேற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

     அவற்றை இனம் கண்டு ஆராய்கிற நுட்பத்தை, தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கிக் கொள்ளும் சிந்தனையைப் புத்தகத்தைப் படிப்பவரே கொண்டு வரவேண்டும் காந்தி கொண்டு வந்ததைப் போல. வேண்டுமானால் இந்த புத்தகம் அதற்குரிய ஆர்வத்தைத் தூண்டலாம்.

     இது சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஏற்பாடு இல்லை. அவர்கள் கடந்து வந்த பாதையில் கற்றுக் கொண்ட உத்திகளை முன்வைக்கிற முயற்சி. 

     இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெலாம் உறுதி தருவதற்கில்லை. தன்னம்பிக்கை நம்முள் இருந்து தான் பிறக்கிறது என்பதை நானும் தீவிரமாக நம்புகிறேன். என்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்த புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும்.

     எழுதியது கோபிநாத் - ஆக இருக்கட்டும்.
     படிக்கிறவர்கள் காந்தி - ஆக இருங்கள்.
     அது தான் என் வேண்டுகோள்.
நன்றியுடன்,
கோபிநாத்.

நூல் விவரம்:- 
பெயர்: நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

..சொல்லாததும் உண்மை...............


..சொல்லாததும் உண்மை

    

     "பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதேமாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள்ஏனென்றால்பொய் உன்னை வாழ விடாதுஉண்மை உன்னை சாக விடாது", என்றார் விவேகானந்தர்.

     இன்று நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், உண்மையை எப்படி எதிர்கொள்வது என்பதே. உண்மை பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அன்றோஇந்த உலகத்தில் சொல்ல மறுக்கிற விஷயங்களும்சொல்லாமல் மறைக்கிற வீஷயங்களும் மட்டுமே தற்போது உண்மையாக இருக்கின்றன.உண்மை பேசுகிறவன் பலர் பார்க்க கயிற்றின் மேல் நடக்கிறவன் போலஎல்லாருக்கும் அந்த தைரியம் வந்துவிடாதுஆனால்,அவனது செய்கையை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.மேற்கொண்டு அவனுக்கு எதுவும் கிடைக்காது!

     மௌனத்தை வார்த்தைகளால் என்றுமே வெல்ல முடியாது.ஏனென்றால் மௌனம் என்பதுதான் உண்மைவார்த்தைகளால் மௌனத்தை விளக்க முடியும்ஆனால்நம்மால் என்றுமே மௌனத்தை உருவாக்க முடியாதுமௌனம் சில நேரங்களில் தண்டனைசில நேரங்களில் மன்னிப்பு!

    நிர்வாணமே உண்மைஆனால்நம்மால் அந்த நிர்வாணத்தை எதிர்கொள்ள முடியுமாஎதிர்க்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லைஅதை ஒப்புக்கொள்ளவாது முடியுமாஇந்த உலகத்தில் சொல்லாமல் போகின்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் போவதில்லை
          
    வாழ்க்கை அபூர்வம் என்றால்அதை அணு அணுவாக வாழ்பவன்அபூர்வங்களின் அபூர்வம்அப்படி ஒரு அபூர்வக் கலைஞன் தான் "பிரகாஷ்ராஜ்". அவரது "...சொல்லாததும் உண்மைஎன்கிற தொடர் ஆனந்த விகடனில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்துபிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.  உண்மையை சொல்வதே தைரியமான விஷயம் என்றால்ஒரு ஊடகத்தின் வாயிலாக உண்மையை உரக்க சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!

     தாயன்புகாதல்காமம்நம்பிக்கைநம்பிக்கை துரோகம்,நட்புதிமிர்கர்வம்பயம், பிரிவு என ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதைகளை உண்மையாக திரும்பி பார்க்கிற தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாதுஒரு விஷயத்தை உண்மையாக பார்ப்பதற்கும்நமக்கு வசதியாக பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளதுபிரச்சனை என்னவென்றால்நமக்கு எது வசதி என்பதில்எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.



    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்எந்த மனிதனும் காமத்துடனான தன் அனுபவத்தை எவரிடமும் அவ்வளவு எளிதில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்காந்தி  தன் தந்தை இறக்கும் தருவாயில்தன் உடல் பசியை தீர்க்க தன் மனைவியை அழைத்ததையும்தனது வயதோகிய காலத்தில் தன் துறவர வாழ்க்கையின் மீது தானே சந்தேகம் கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டதையும் இந்த உலகத்துக்கு வெளிப்படையாக சொன்னார்அதே துணிச்சலை பிரகாஷ்ரஜிடமும் பார்க்கிறேன்.

    சகமனிதனின் அனுபவம் தானே நமக்கு வாழ்க்கை பாடம்?  

நூல் விவரம்:- 
பெயர்: ...சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்
வெளியீடு: விகடன் பிரசுரம்

யார் பிக் பாஸ்?


யார் பிக் பாஸ்?


உடல், ஆன்மா, மனம் ஆகியவைகளின் மொத்த கலவைதான் உயிருள்ள மனிதன். இவற்றில் ஏதாவது ஒன்று தனக்கு தேவையில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. அப்படி சொல்வானானால் அவன் மனிதனாக இருக்க முடியாது. பிறக்கும்போதே இவை நம்முடன் வருபவை. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.
சரி அதற்கென்ன இப்போ என்கிறீர்களா?
இந்த மூன்றில் யார் பிக் பாஸ் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதால் சிந்தனை குதிரையைத் தட்டி விட்டேன்.
இதைப் பற்றி எழுதுவதற்கு முன் இவை குறித்த எனது தேடல் நீண்டது. வளைத்தளம், வளைப்பூக்கள் என தேடி பார்த்தேன். இருப்பினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. எனக்குள் தேட முயன்றபோது கிடைத்ததை பதிவு செய்கிறேன்.
ஒன்றை விட்டு இன்னொன்று இயங்க முடியாது என்பது இந்த மூன்றுக்கும் தெரியும்அப்படியிருக்கையில்தேவையா இப்படியொரு விபரீத போட்டிஎன்கிறீர்களா?
போட்டி என்று வந்து விட்ட பிறகு இனிமேல் என்னசெய்வது?
ஆன்மாமனம் ஆகியவற்றால் இயக்கப்படுவதால் மனித உடல் சற்று பலவீனமானவனாக எனக்கு தெரிகிறது.
மற்ற இரண்டும் சற்று பலம் பொருந்தியதாகவும்,ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன.
இரண்டும் மனிதனுக்குள் இருந்து செயல்பட்டுகொண்டிருப்பவைஇவற்றில் முழு முதற்காரணமாகவிளங்குவது மனம்இதைப் பற்றிக் கூற வேண்டுமானால்,மிகவும் வேகமாக செயல்படக் கூடியதுகுப்பைகளைகொட்டுவதைப் போல நொடிக்கொரு தரம் எண்ணங்களைபிரசவித்து கொண்டிருக்கும்.
அந்த எண்ணக் குப்பைகளில் சில நேரம் மாணிக்கங்கள்கிடைப்பதுண்டுஅவ்வாறு கிடைக்கும் மாணிக்கங்களால்மனிதன் சுடர்விட்டு ஒளிர்வதும் உண்டு.
மனிதனின் ஒவ்வொரு செயலும் இதன்கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
இதன் எல்லா எண்ணங்களும் ஒன்றுபோல்இருப்பதில்லை.சீரழிக்கவும்சீர்படுத்தவும் செய்யும்எண்ணங்களை உருவாக்கும் அதிசய கருவி இது.
மகிழ்ச்சியான தருணங்களில் துள்ளி குதிக்கும்காதல்,காமம்பாலியல் உறவுகள் போன்ற விஷயங்களின்போதுகுத்தாட்டமும் போடும்ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்துவிட்டாலோ நோயில் விழுந்து பாயில் படுத்தவனைப்போல கிடக்கும்.
இதனால் உருவாகும் உணர்ச்சிகளுக்கு வடிக்காலாகஇருப்பவன்தான் மனிதன்இன்னும் சொல்லப் போனால்இது கண்ணுக்குத் தெரியாத மாயாவி.
மனிதனின் செயலுக்கு இது பிண்ணனி என்பதுஎல்லோருக்கும் தெரியும்ஆனால்இதை யாரும் குறை கூறுவதில்லை.
வில்லில் இருந்து புறப்பட்டு வந்து அம்பு தாக்கும்போது,தாக்குண்டவர் அம்பின் மீதுதான் கோபம் கொள்கிறாரேதவிரஅது புறப்பட்டு வந்த வில்லின் மீதுகோபப்படுவதில்லைஅதுபோலதான் இது தப்பித்துக்கொள்ளும்.
மனிதனை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்ற இதை ஒருபிக்பாஸ் என்றே கருதலாம்.
இதேவேளையில் இதை எதிர்த்துப் போட்டியிடும் ஆன்மாவின் பலமும் என்ன என்பதை தெரிந்துகொண்டால் இறுதி முடிவு எடுத்து விடலாம்.
ஆகாய விமானத்தில் ரகசிய பெட்டி ஒன்றுவைக்கப்பட்டிருக்குமாம்அதனை பிளாக் பாக்ஸ் என்றுகூறுவார்களாம்வானத்தில் செல்லும் ஆகாய விமானம்ஏதேனும் விபத்துக்குள்ளாக நேரிட்டால்விபத்து நடந்தஇடத்தில் முதலில் தேடப்படுவது இந்த கருப்புப்பெட்டியைத்தானாம்ஏனென்றால்விமானம் எப்படிவிபத்துக்குள்ளானது என்ற தகவல் அதில் துல்லியமாகபதிவாகி இருக்குமாம்அதை வைத்து காரணத்தைக்கண்டுபிடித்து விடுவார்களாம்.
ஒருவகையில் இதுவும் அந்த பிளாக் பாக்ஸைபோலத்தான் செயல்படுகிறது.
மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் எப்படி மனம்காரணமாகிறதோஅந்த செயலின் மூலம் ஏற்படும் சாதக,பாதக நிகழ்வுகளை பதிவு செய்து நேரம் கிடைக்கும்போது,அதை மனிதனுக்கு ரீவைண்ட் செய்து காண்பிப்பதில் இதுமுக்கிய பங்காற்றுகிறது.
மனிதன் பிறக்கும்போதே மனதைபோல் இதுவும்அவனுக்குள் இயங்க தொடங்கி விடுகிறது.
மனதில் தோன்றும் எண்ணம் நல்லனவாக இருந்தால்முதலில் பாராட்டி அதை நிறைவேற்றுவதற்கு உதவுவதுஇதுதான்.
அதே வேளையில் தீய எண்ணம் உருவாகுமானால்முதலில் எச்சரிக்கை மணி அடித்துஅதனால் உண்டாகும்ஆபத்தை உணர்த்துவதும் இதுதான்.
இது நல்ல எண்ணங்கள் உருவாகும்போது மகிழ்ந்துமனதுடன் கை குலுக்கிக் கொள்ளும். இதன் பாராட்டுமழையில் நனையும் மனமும் உடனே மனிதன்மூலம்அதனை வெளிப்படுத்தி அவனுக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறது.
தவறான எண்ணமாக இருந்தால் மனதுடன் கடுமையானவிவாதம் செய்யும். சிலநேரங்களில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போராட்டமே நடக்கும்இவர்களின்போராட்டத்தால் மனிதனும் மிகுந்த சஞ்சலத்திற்குஆளாகிறான்அந்நேரத்தில் இதன் பேச்சை மனம் கேட்கமறுப்பதோடு அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் தீவிரமுயற்சி எடுத்து மனிதனை அதில் சிக்க வைத்து விடுகிறது.இதுவோ வாயடைத்து அமைதியாகி விடுகிறது.
கடவுளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்றநம்பிக்கை ஆன்மிக சிந்தனை உள்ளவர்களுக்குஇருக்கிறதுஅதேபோல் பாவம்சொர்க்கம்நரகம் என்றசிந்தனை உள்ளவர்கள் பெரும்பாலும் இதனை துணையாகஅழைத்துக் கொண்டு இறைவனை நாடுவர்.
இது எனக்குள் இருக்கிறது என்ற உணர்வு இல்லாதநிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வேகத்தின் செயல்பாடு மனம்இதன் செயல்பாடோஅமைதிப் புரட்சி.
எண்ணங்களை பிரசவிப்பதுஅதை நிறைவேற்றுவது எனசெயல்படும் மனம்அடுத்ததொரு புதிய எண்ணம்உருவானவுடன் பழைய எண்ணத்தையோ, அதனால்அடைந்த லாபநஷ்டத்தையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
ஆனால்இதுவோ மனதின் ஒவ்வொரு எண்ணத்தையும்,அதனால் நிகழும் விளைவுகளையும் தனக்குள் பதியவைத்துக் கொள்ளும்.
மனிதன் துன்பத்திற்குள்ளாகும்போது மனம் கை கழுவிவிடும்இதுவோமனிதனின் இந்த நிலைக்கு நீதான்காரணம்நான் அப்போதே கூறினேன் கேட்கவில்லைஎன்று கூறி தான் பிடித்து வைத்திருக்கும் படத்தைரீவைண்ட் செய்து காண்பித்து தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று உணர்த்தும்.
பூமியை விட்டு பிரியும்போது மனமும்அது இயக்கியமனித உடலும் அழிந்து விடுகின்றனஆனால் இதற்கு அழிவு என்பதே இல்லைஇது இன்னொரு உயிருக்குள்வைக்கப்பட்டு மீண்டும் பிறக்கும் என்கின்றனர் அடுத்தபிறவியை நம்புபவர்கள்.
எல்லா மதங்களும் இதற்கு முக்கியத்துவம்கொடுக்கின்றன.
மரணத்திற்கு பின் இன்னொரு உலகம் உண்டுமனிதனின்ஆன்மா கடவுளின் நியாயத்தீர்ப்புக்காக கடவுளின் முன்புநிறுத்தப்படும்அப்போது அந்த ஆன்மாவின் பதிவுப்படிதீர்ப்பு கிடைக்கும்அதன்பிறகு சொர்க்கமோநரகமோகிடைக்கும் என்ற நம்பிக்கையும் நம்மில் பலரிடம் உள்ளது.
ஆகஇத்தகைய செயல்பாடுகளின் மூலம் மனதை விடஇது அதிக பலம் பொருந்தியதாகவே காணப்படுகிறது.
மனிதன்மனம்ஆன்மா ஆகிய இந்த மூன்றுக்கும்இடையே உருவான போட்டியில் இப்பிறவியை கடந்தும்உயிரோடு இருக்கும் ஆன்மாதான் பிக் பாஸ் என்றமுடிவை நான் எடுத்து விட்டேன்.
வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்து லாப,நஷ்டங்களை நான் கணக்கிட்டபோது எனக்குள் இருந்தஆன்மாவை கண்டுகொண்டேன்.
என் வாழ்க்கையின் காலகட்டத்தில்நான் நடந்துவந்தபாதையில் பதிவு செய்து வைத்திருந்த எனதுசெயல்பாடுகளும்அவற்றின் மூலம் நான் எத்தகையவன்என்பதை உணர்த்தியதே என் ஆன்மாதான்.
இதன் மூலம் என் மனம் பிரசவிக்கும் எண்ணங்கள்நல்லவையா? தீயவையா என்பதை இப்போது என்னால் உணர்ந்துக் கொள்ள முடியும்.
நான் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையைஆன்மாவிடம் இருந்து என் மனம் பெற்றுத் தருகிறது.அதன்படி என் ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கண் மூடி திறப்பதற்குள் காலம் மிக வேகமாக கடந்துகொண்டிருக்கிறதுஇனி இந்த உலகில் வாழும் நாட்களில்எனக்கான ட்ராக்கில் ஒழுங்காக ஓடி என் ஓட்டத்தைமுடிக்கவே முயற்சிக்கிறேன்.
என் முடிவை தெரிவித்து விட்டேன்.
இனி இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?


மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?


நண்பர்களே.....! இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதை அலசுவோம். 
மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

இருக்க வேண்டியவை: அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை,  கருணை, சாந்தம், மன்னிப்பு, அடக்கம், அமைதி, மானம், ஒழுக்கம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, இன்னும் பல.....

இருக்கக் கூடாதவை:  பேராசை, கோபம், பொறாமை, பிடிவாதம், துரோகம், அவசரம், பொய் பேசுதல், சோம்பேறித்தனம், வஞ்சகம், திருட்டு, கொலை, கொள்ளை, சூது, பிறன்மனை நோக்குதல், இன்னும் பலப்பல.....
இது போல பல குணங்களோ பண்புகளோ இருந்தாலும் அவற்றில் முதன்மை குணம் என்னவாக இருக்க வேண்டும்? யோசித்து பார்த்துக் கொண்டே இருங்கள்... முடிவில் தெரிந்து கொள்வோம்.

இது ஒன்று மட்டும் இருந்தால் மற்ற எல்லா குணங்களும் பண்புகளும் இதற்கு பின்னால் வந்து விடும் என்பது என்னுடைய கருத்து. உங்களின் கருத்துகள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மனிதனின் நல்ல குணங்களையும் பண்புகளையும் பற்றி மட்டுமே இங்கு ஆராய போகிறோம்.....

முதலில் அன்பு, பாசம்... பாசமென்பது நம் பெற்றோர்களிடம், குழந்தைகளிடம் மற்றும் நம் உறவினர்களிடம் நாம் பாசமாக இருப்பது. அன்பென்பது நமக்கு தெரியாதவர்களிடம் அன்பை செலுத்துவது. எல்லாரிடமும் எப்போதும் அன்பாக இருக்க முடியுமா? எல்லாரிடமும் அன்பாக இருப்பவர்கள், எல்லா உயிர்களிடமும் (மனிதனை தவிர) அன்பாக இருக்கிறார்களா? அதுவும் இன்றைய காலத்தில்? ஆனால் எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டுமென்றால் பொறுமை வேண்டும், கோபம் இருக்க கூடாது, நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள வேண்டும்.  ஏன்னென்றால், அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. ஆக, மனிதனுக்கு முதன்மையாக அன்பு/பாசம்/கருணை/சாந்தம்/பணிவு இருந்தால் போதுமா?
அடுத்து விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவர்கள். இவர்களை உலகம் இளிச்சவாயன் என்று கூறுகிறது. எல்லாவற்றையும் எப்போதும் விட்டுக் கொடுப்பவரை 'ஏமாந்த சோணகிரி' என்று சிரிக்கிறது. உங்களுக்கு உண்டான உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்க தேவையில்லை. ஏன்னென்றால்,ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி. ஆக, மனிதனுக்கு முதன்மையாக விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் போதுமா? பார்ப்போம்...

தவறு செய்யாத மனிதனே கிடையாது. முதலில், செய்த தவறை ஒத்துக் கொள்ள தைரியம் வேண்டும். அவனை மன்னிக்க பெரிய மனது வேண்டும்.  ஏன்னென்றால், மன்னிக்க தெரிந்தவனே மனிதன்! ஆனால், மன்னித்து ஏற்றுக் கொள்பவன் இறைவன்! ஆக, மனிதனுக்கு முதன்மையாக மன்னிக்கும் தன்மை/தைரியம்  இருந்தால் போதுமா?

ஒவ்வொன்றுக்கும் சில விளக்கங்கள் தரலாம். நீள் பதிவு ஆகி விடும் என்பதால்................ அடுத்ததாக அறம், ஈகை, தானம், உதவி, தவம், நன்றி, நட்பு, ஆர்வம், ரசனை - இவை எல்லாமே பொருள் இருப்பவர்களிடம் இருக்கும். பொருள் இல்லாதவர்களிடம் ...? இவை எல்லாமே மனிதனுக்கு தேவை தான். ஆனால், முதன்மையாக இருக்க வேண்டிய குணம் - ஒரு சின்ன கதை மூலம்:

அந்த காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தருவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். செக்கச் செவலென்று இருந்த பழத்தை பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஒரு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் குரு அந்த தாயிடம், "பழம் நன்றாக உள்ளது, நன்றி" என்று சந்தோசமாக தெரிவித்தார். ஆனால், அந்த தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறியவுடன் இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்த தாய் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்கு சென்றார். சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவே, ஒரு பழத்தை சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை  பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்த தாயிடம் சொல்லிருக்கலாமே? இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். அதற்கு குரு, "சீடர்களே, அந்த தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளை சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதை சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, " சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்த தாயின் முன்பு செய்திருப்பீர்கள். அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்கு தெரியும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை" என்று கூறினார்.

இந்த கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன? அந்த தாய் சந்தோசப்பட, குரு முகத்தை கூட சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்த பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும்.

Friday, November 4, 2011

அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.


எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம்.
இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம்.  இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.
“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.
அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.
பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?
பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.
தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள்.
“சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்கு” என பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான் “சிக்கன் சூப் ஃபார் த சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.
140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.
“ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்கு” என்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.  பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.
வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்

Wednesday, November 2, 2011

மறைபொருள் தெரிகிறதா..?


ழை, பணக்காரன்
அறிவாளி, முட்டாள்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்

என எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்குமான காரணத்தை வாழ்க்கை மறைத்து ஐந்து இரும்புக் கதவுகளுக்குள் வைத்துப் பூட்டிவைத்திருக்கிறது.

இந்தக் கதவைத் திறந்து பார்த்தவர்கள் மட்டுமே திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்!

வியாபாரியின் பார்வைபட்ட பின் 
குப்பை கூட பணமாகிவிடுகிறது!

குட்டிக்கரணம் போடுவதால்
குரங்கு கூடத் திரும்பிப்பார்க்கப்படுகிறது!

முன்னோருக்கு உணவுபடைக்க
காக்கை கூட அதன்மொழியில் அழைக்கப்படுகிறது!

கடையில் லாபம் பெறுக
கழுதைகூட நிழற்படமாகிவிடுகிறது!

இப்படி உயிரற்ற, உயிருள்ள இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றும்..
ஏதோ புரிந்துகொண்டிருக்கின்றன..


இல்லையென்றால்..


நமக்கு ஏதோ புரியவைக்க முயற்சிக்கின்றன.

விலைமதிப்பில்லாத
இந்த இயற்கைக் கூறுகள் கூட
தேவை, தனித்தன்மை காரணமாக

விலை மதிக்க முடியாதவையாக ஆவிடுகின்றன!

விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
தன்னை உணர்ந்துகொள்ளாததால்
விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!

அதனால்..

கொம்பை மறந்த மாடுபோல
துயர வண்டி இழுக்கிறான்!

மந்தையில் பிரிந்த ஆடுபோல
திருதிருவென விழிக்கிறான்!

தாயின்றி அழும் குழந்தைபோல
அழுது தவிக்கிறான்!

வாழ்க்கையின் மறைபொருளை அறிந்துகொள்ள மனிதன் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல....

எத்தனையோ பேர் வாழ்க்கையின் இந்த மறைபொருளை அறிந்து, உணர்ந்து சாதித்திருக்கிறார்கள்..

இன்னொருவன் உண்பதால் நம் பசி தீராது!!

நாமே உழைப்போம்..

உடலால் உழைத்து உழைத்து மாடாகியது போதும்!!
அறிவால் உழைத்து உலகாளுவோம்!!


இதோ மறைபொருள் திறக்க ஐந்து திறவுகோல்கள்!


1. நான் ஏன் பிறந்தேன்?

2. என் தனித்தன்மை என்ன?

3. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

4. நான் ஏன் இவர்களோடு இருக்கிறேன்?

5. நான் ஏன் இன்னொருவர் சென்ற பாதையில் செல்லவேண்டும்?

இந்தக் கேள்விகளே நான் உங்களுக்குத் தரும் திறவுகோல்கள்!!


என்ன நண்பர்களே மறைபொருள் தெரிகிறதா..??