முக்கிய செய்திகள்

Saturday, November 30, 2019

பாவத்தின் வாசல்

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம். “பளார்.” பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்தான். அறைந்தது அவளாகத்தான் இருக்கவேண்டும். நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான். அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான். இதுவரை அவன் ஒரு நாள் கூட டிக்கெட் எடுத்ததில்லை. அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கிய சட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும் ஒரு பிக்பாக்கெட்டை நினைவுபடுத்தியது.
முகத்தில் வயது கோளாறை பிரதிபலிக்கும் பருக்கள். அவளுக்கு நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். சுமாரான அழகு.


அவளிடமிருந்து அடி வாங்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். அதற்குள் இன்னொரு புண்ணியவதி எழுந்து..."என்ன பாத்துட்டு இருக்கீங்க....புடிச்சு வெளிய தள்ளுங்க...பொம்புளைங்கள உரசரதுக்குன்னே வர்றானுங்க....” என்றபடி அவனை நோக்கி பாய்ந்தாள். அவன் தலை குனிந்துகொண்டான். அவன் முகத்தில் அவமானம். இந்த காரியத்தை செய்தது அவனல்ல. அவனுடைய வயது. இந்த வயதின் பலவீனத்தை என்னை போல் ஒரு சைக்காலிஜிஸ்ட் தான் தெரிந்து வைத்திருக்க முடியும். எனக்கு அவன் தோள் மேல் கை போட்டு அவனுடன் அன்பாக ஆதரவாக பேசவேண்டும் போல் இருந்தது. தாய்ப்பால் குடிக்கிற போது தோன்றாத காமம் கன்ட்ராவி எல்லாம் இந்த இரண்டாங்கெட்டான் வயதில் தான் தோன்றுகிறது. சரியான புத்தி மதியும் குடும்ப சூழலும் இல்லாமல் மனதின் இழு சக்திக்கு பலி ஆகும் வாலிபர்கள் எத்தனை பேர். எனக்கு தெரியும். அந்த பெண்ணின் கோபத்துக்கு ஒரு ஞாயம் இருப்பது போல் இவனுடைய தாபத்துக்கும் ஒரு ஞாயம் இருக்கும்.


"என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க. காது மேல ரெண்டு போட்டு அடிச்சு வெளிய தள்ளுங்க" என்று அந்த அதிவீர பெண்மணி தொடர்ந்து ஆண்களை உசுப்பி விட்டபடியே இருந்தாள்.
நல்ல வேளையாக, பத்து பேர் சேர்ந்து கும்பலாக ஒருவனை அடிக்கிறபோது அதில் பதினொன்றாக தன்னையும் சேர்த்துக்கொண்டு தங்கள் வீரத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் கோழை ஆண்கள் யாரும் அந்த பேருந்தில் இல்லை. யாரும் அவனை அடிக்க தயாராய் இல்லை. நடத்துனர் விசில் ஊதினார். பேருந்து நடுவழியில் நின்றது. அவன் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை. தலை குனிந்தபடி கன்னத்தை தடவிக்கொண்டே நடக்க மட்டுமே வரம் பெற்ற ஒரு சவம் போல் அந்த பேருந்தை விட்டு கீழே இறங்கினான். அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அது அவன் மேல் கொண்ட மரியாதையினாலோ பயத்தினாலோ அல்ல சாக்கடை தண்ணீர் நம் மேல் தெறித்துவிடாமல் ஒதுங்கிக்கொள்கிற எச்சரிக்கை. நான் அவனையே இரக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த துள்ளல் அதிவீர பெண்மணி ஜன்னல் வழியாக கை வீசி ஏதோ ஆவேசமாக அவனை திட்டிக்கொண்டிருந்தாள். துப்பவும் செய்தாள். அறை கொடுத்தவள் மௌனமாக நின்றிருந்தாள். அவள் தான் செய்த காரியத்துக்காய் வருத்தப்பட்டிருக்கலாம்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது. இப்போது ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போது. பாப்கார்ன் வாங்கி ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிந்துகொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் அறையிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள் காளரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஐந்தாறு பேர் பின் தொடர்ந்து வந்தார்கள். போலீஸ்காரர் "ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளைன்ட் கொடுங்க" என்றார். மேனேஜர் அரை அடிக்கு குனிந்து போலீஸ்காரரிடம்...
"சார் கம்பிளைன்ட் வேண்டாம் சார். தியேட்டர் பேரு கெட்டுடும். சும்மா விசாரிச்சு மிரட்டி அனுப்பிடுங்க " என்றார். போலீஸ்காரர்கள் எப்படி விசாரிப்பார்கள் எப்படி மிரட்டுவார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பலி ஆட்டை போல் அவன் நின்றுகொண்டிருந்தான். எல்லோர் பார்வையும் அவன் மேல் படிந்திருந்தது. என் அருகில் இரண்டு சிறுமிகள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மற்றவளை பார்த்து


"திருடன்...திருடன்...எப்படி இருக்கான் பாரேன். பாக்கவே பயமா இல்ல....அதான் போலீஸ் புடிச்சிட்டு போகுது" என்றாள்.


எனக்கு இப்போதும் அவன் மேல் பரிதாபம் இருந்தது. என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அல்ல. நோயாளி. அவன் தண்டிக்கப்படவேண்டியவன் அல்ல. குணப்படுத்தப்பட வேண்டியவன். அவனுக்கு தேவை போலீஸ்காரர்களின் லட்டி அடியும் பூட்ஸ் மிதியும் அல்ல. அன்பான அரவணைப்பான வைத்தியம்.


கூட்டத்தில் இன்னொருவர்


"என் ஒயிப் வந்து கம்பிளைன்ட் கொடுக்க முடியாது சார். ஷீ இஸ் எ சென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயி. டீசன்ட் பேமிலி சார். நீங்க இவன இப்படியே விட்டுட்டா கூட கவலை இல்ல. ஆனா கம்பிளைன்ட் வேண்டாம் சார்." என்று மன்றாடினார்.


“சரி விடுங்க. கம்பிளைன்ட் எல்லாம் வேண்டாம். இந்த பொறுக்கிய நாங்க பாத்துக்கறோம்”


என்று போலீஸ்காரர் எல்லார் முன்னிலையிலும் அவன் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார். அந்த பளாரின் அதிர்ச்சியில் அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கு கைகள் உதறுவதை கவனித்தேன். உதறலில் பாப்கானில் இரண்டும் சில துளி கொக்ககோலாவும் தரையில் சிந்தியது. அந்த பெண்கள் அதற்கு மேல் காத்திராமல் தியேட்டருக்குள் ஓடினார்கள்.


இப்போது போலீஸ் அவனை இழுத்துக்கொண்டு கீழே போனது. கூட்டம் கலைய தொடங்கியது. சிலர் மட்டும் என்ன நடந்தது என மேனேஜரிடம் விசாரித்தார்கள் .அவர் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். இப்போது தான் அந்த பெண்மணியை கவனித்தேன். அவள் தான். பேருந்தில் அந்த பையனை கன்னத்தில் அறைந்தவள். மீண்டும் அவளையே தொடர்ந்து வந்து தொந்தரவு செய்திருக்கிறான். தியேட்டர் இருட்டில். அவள் மெல்ல நடந்து வந்து கணவன் அருகில் நின்றுகொண்டாள் எல்லோர் பார்வையும் அவள் மேல் நிலைபெற்றிருந்தது.....


"படம் வேண்டாங்க....வீட்டுக்கு போலாம்.... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க...."
என்றாள். அவர்கள் இருவரும் கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டரின் கேட்டை தாண்டி போகும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


மீண்டும் இரண்டு வாரம் கழித்து அவனை சந்தித்தேன். இப்போது அதே பேருந்தில். அந்த பெண்மணியின் அருகில் தான் அவன் நின்றிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. திடீரென பேருந்தில் செக்கிங் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக டிக்கெட்டை எடுத்து காட்டிக்கொண்டிருந்தோம். பரிசோதகர் அவனிடம் வந்தார்.
“டிக்கெட் எடு.”


அவன் மௌனமாய் இருந்தான்.


“டிக்கெட் எடுக்கலையா....எங்கேயிருந்து வற கீழே இறங்கு....”


அவன் முதுகை பிடித்து பரிசோதகர் தள்ளினார்.


எல்லோரும் அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது அந்த பெண்மணி பேசினாள்.


“சார்...அவன் ஊம சார்.....அவனுக்கும் சேத்து நானே டிக்கெட் எடுத்துட்டேன். இதா சார்.”


என்று ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் நீட்டினாள். அவர் டிக்கெட்டின் மேல் ஒரு டிக் அடித்து அவனுடைய கையில் திணித்தார். அவன் கவனமில்லாமல் அதை வாங்கி தன் சட்டை பையில் போட்டுக்கொண்டான். பேருந்து புறப்பட்டது.


இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவனை சந்தித்தேன். மெரினா பீச்சில். கடலுக்கு மிக அருகில் கடலை பார்த்தபடி நின்றிருந்தான். நான் அவனிடமிருந்து இருபதடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவன் கையிலிருந்து ஏதோ ஒன்று தவறியது. காற்றில் அது பறக்கத்தொடங்கியது. அவன் அதை பின் தொடர்ந்து வந்தான். ஒரு இடத்தில் கீழே விழுந்தது. குனிந்து எடுப்பதற்குள் அது மீண்டும் பறந்தது. காற்றில் பறக்கும் அந்த காகிதத்தை, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அந்த காகிதம் என் அருகில் என் காலடியில் விழுந்தது. அதை நான் எடுத்தேன். அவன் என்னை நோக்கி இப்போது ஓடி வந்துகொண்டிருந்தான்.
அந்த காகிதத்தை பார்த்தேன். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு.
அதன் பின்புறத்தில் குட்டி எழுத்துக்களால் இவ்வளவும் எழுதியிருந்தது.


“உன்னை குப்பை தொட்டியில் எறிந்த நான் பாவி. என் சுயநலத்துக்காக உன்னை அனாதை ஆக்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. தயவு செய்து என்னை பின் தொடராதே. என் கணவருக்கு நீ வந்த பாவ வாசல் தெரியாது. என்றும் உன் நினைவோடு உன் அம்மா.”


அவன் அந்த காகிதத்தை என் கையிலிருந்து கவனமாக வாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் அந்த பேருந்தில் வருவதில்லை.

படித்ததில் பிடித்தது..........

அன்புடன் தஞ்சை சிவா


Sunday, July 12, 2015

கணவனும் மனைவியும்...

உறவுச் சிக்கல்களில் உழன்று கொண்டிருக்கிறீர்களா? முதல் காரியமாக, உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தினீர்களா, என்று யோசித்துப் பாருங்கள்…



கணவன் – மனைவிக்கிடையே, பெரும்பாலான பிரச்சனைகள் மேற்சொன்ன காரணத்தாலே விளைகின்றன. மனிதர்கள் அனைவருமே ஒருதனி தீவுதான். ஒவ்ஒரு மனிதருகுள்ளும் உணர்வுக்குவியல்களே புதைந்திருக்கும். தங்களுக்குள்ளேயே பலவித போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், நண்பர்கள் என அனைவரிடமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழகுகிறோம். சிறு வயதில் கோபம் வந்தால் அடித்து உதைத்து அதை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய உரிமையை உடன் பிறந்தோரிடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்ந்த பிறகு நம் மனதிற்குள்ளேயே ஒரு ஃபில்டர் வைத்துக் கொள்கிறோம். தேவையற்ற விஷயங்களை வடிகட்டி விடுகிறோம். அந்தரங்கமான உணர்வுகளுக்கு சென்சார் போட்டு விடுகிறோம். எடிட் செய்த விஷயங்களையும், உணர்வுகளையும் மட்டுமே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். தொன்னூறு சதவீத தருணங்களில் நமக்குள்ளேயே பேசி, சிரித்து வெட்கப்பட்டு, ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பத்து, பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு திருமண பந்தத்திற்குள் நுழையும்போது மனசுக்குள் பூ பூக்கும். நமக்கென்று, நம்முடைய எல்லா உணர்வுகளையும் கொட்டித்தீர்க்க ஒரு துணை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கும்.

திருமணமான முதல் வாரம் முழுவதும் காதல்போதையில் மூழ்கிவிட்டு, ஹனிமூனுக்கென,.. மூட்டையைக் கட்டுவார்கள் பாருங்கள். இருவரின் முகத்திலும், கடைசியாகத் தெரியும் மனமார்ந்த உண்மையான சிரிப்பு அதுமட்டும்தான். தேனிலவுக்கு கிளம்பும் தம்பதிகளின் முகத்தில் தோன்றும் அந்த கடைசி புன்னகையை ஆசை தீரப் பார்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விட வேண்டாம். போனால் கிடைக்காது.

பத்து நாட்களுகு எந்த தொந்தரவுமில்லாத இனிமையான தனிமை என்ற கற்பனையில் மிதந்து செல்வார்கள். முதல் இரண்டு நாட்கள் பயணக் களைப்பு. ஊர் சுற்றதல் என ஓடிவிடும். அதற்கடுத்த நாட்களில் நிறை நேரம் இருப்பதால், ம்.. நாம நல்லா பேசி ஒருத்தரைப்பத்தி ஒருத்தர் புரிஞ்சுக்கலாமே.. என்று கணவன் ஆரம்பித்து வைப்பார்.. நாக்கில் சனி புகுந்துவிட்டது என்று அர்த்தம்.

இருபத்ததைந்து வருடங்களில் தனக்கு நிகழ்ந்த அனைத்தையும், இருபத்து நான்கு மணி நேரத்தில் மனைவியின் தலைக்குள் புகுத்திவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் தன் சிறு வயது ஞாபகங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பார். அந்த Chapter கொஞ்சம் interesting ஆக இருக்கும்.

பள்ளிக்கூடத்தல் தான் அடிவாங்கிய காட்சிகளைப் பற்றி விவரிக்கும்போது மனைவி விழுந்து விழுந்து சிரிக்கும் அழகில் மயங்கி இன்னும் விவரிப்பார். இதோடு நிறுத்தியிருந்தால் பரவபாயில்லை. மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக்கூடாது… என்று யாரோ உத்தமர் எப்போதோ ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்ததைப் படித்தது இப்போதுதானா நினைவுக்கு வந்து தொலைக்க வேண்டும்..?

பள்ளிக்கூடத்தில் பக்கத்து பெஞ்ச் மீனாவை தான் சைட் அடித்ததை “அழகி” பார்த்திபன் ரேஞ்சுக்கு உருகி உருகி விவரிப்பார். அப்போதே மனைவியின்முகம் எண்ணைய் கத்தரிக்காய் போல் சுருங்கி விடும். இவருக்கு அதெல்லாம் கண்ணில்பட்டால்தானே.

தனக்கும் தன் தாய்க்குமிடையேயான பாசப் பிணைப்ப்பை பத்தி பத்தியாக விவரிப்பார். “நீ அவருக்கு பணிவிடை செய்வது உன் முதல் கடமை” என்று சந்தடி சாக்கில் Advice செய்வார். மனைவிக்கு இலேசாய் பொச்சிவ்னெஸ் எட்டிப் பார்க்கும். இதற்குப் போய் சண்டை போடலாமா என்ற தயக்கத்தில் அமைதியாயிருந்து விடுவார்.

தன்னுடைய உயிர்த் தோழனைப் பற்றியும், நட்பைக்கூட கற்பைப் போலெண்ணும் தன் உயர்ந்த குணத்தையும் பற்றி லெக்சர் அடித்து, மனைவியை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பிறகுதான் அந்த கிளைமாக்ஸ் காட்சிக்கான விஷயத்தை தொடுவார்.

“குட்டி, நான் ஒரு விஷயத்தை சொல்வேன் தப்பா எடுத்துக்கக்கூடாது. என்னோட கஷ்டத்தைப் பகிர்ந்துக்கறதுக்கு உன்னைவிட்டா யார் இருக்கா?” என்ற பீடிகையில் ஆரம்பித்து, சுற்றி வளைத்து, ‘நான் ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தேன்..” என்ற பாயிண்ட்டில் முடிப்பார்கள். “போன மாசம்தான் அவளுக்கு கல்யாணமாச்சு. எனக்கு மனசு தாங்கலை.. ஆனாலும் அம்மா மனசு நோக்க் கூடாதுனு உன்னைக் கட்டிக்கிட்டேன்…”

இதைக் கேட்க கேட்க அவளுக்கு வயிறெரியும். காதலிச்சே சரி கல்யாணம் பண்ணிக்க தைரியம் வேண்டாம். செய்யறதை செஞ்சுட்டு இப்படி பொம்பளை மாதிரி புலம்பறியே என்ற வெறுப்பு ஒரு புறமும், நேற்று படுக்கையறையில் ஞாபகம் வராத விஷயம் இப்ப ஞாபகம் வந்திடுச்சா? இப்ப உருக வேண்டிய அவசியம் என்ன என்ற கோபம் மறுபுறமும் பொங்க, சண்டை தூள் பறக்கும். அநேகமாய் எல்லா கணவன் மனைவிக்கிடையேயும் வரும் முதல் சண்டை இதுவாகத்தானிருக்கும்.

இத்தனை வருடங்களாக வளர்த்த அம்மா அப்பாவிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத, அதற்கு தைரியமில்லாத உணர்வை மனைவியிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ஏன்…? இவ்வளவு வருடங்கள் இல்லாத மனச்சிக்கல் இப்போது புதியதாய் முளைத்து விட்டதா.

வாழ்க்கைத் துணையிடம் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்தான். ஆனால், இந்த காதல் விஷயத்தில் பிரயோஜனமிருக்கிறதா? தேவையற்ற சஞ்சலங்களை மனைவி மனதில் சுமத்துவதைத்தவிர, வேறு என்ன நடக்கிறது?

புதிதாய் ஏற்பட்ட ஒரு உறவில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் இப்போது பாதுகாப்பாற்ற உணர்வு மட்டுமே மனைவிக்கு எஞ்சி நிற்கும். ஆரம்பகாலகட்டத்தில் “நீ ரொம்ப அழகா இருக்கே தேவதையே பூமிக்கு வந்துட்டதோ – உலக அழகி போட்டிக்கு நீ போகலாமே…” என்ற சம்பிரதாய வார்த்தைகளோடு நிறுத்திக் கேளுங்கள்.

ஒருவர் மீது ஒருவருக்கு பிடிப்பும், புரிதலும் ஏற்பட்ட பிறகு மனதை வாட்டும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளல் அவசியம்தான். ஆனால், உங்கள் மனதில் தோன்றும் எல்லா குழப்பங்களையும், பயங்களையும் கொட்டும் குப்பைத் தொட்டியாக உங்கள் துணையைப் பயன்படுத்தாதீர்கள்.

இத்தனை வருடங்களாக எப்படி சுயமாக அலசி ஆராய்ந்து பிரச்சனைளைத் தீர்த்தீர்களோ அதே போல் இப்போதும் நடந்து கொள்ளுங்கள். முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளையும் இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். சரியான நேரத்தில் சரியான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

சிலருக்கு விஷயத்தை எங்கு ஆரம்பித்து, எப்படி முடிப்பது என்றே தெரியாது. முற்றுப் புள்ளியே வைக்காமல், கமாவிற்கு மேல், கமாவாப் போட்டுபேசிக் கொண்டே போவார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக நேரடியாக சொல்லுங்கள். உங்களுக்கே குழப்பமாக இருகும். விஷயத்தைப் பற்றி அடுத்தவரிடம் பேச வேண்டாம்.

உணர்வுகளின் உச்சக்கட்டத்திலிருக்கும் போது, எந்த கருத்தையும் வெளிப்படுத்த வேண்டாம். மனம் ஒரு அமைதி நிலைக்கு வந்பின்பு பேசுவதே நலம். இல்லையெனில், வார்த்தைகள் தவறாக வெளிப்பட்டுவிடும். கோபமோ, வருத்தமோ எதுவாயிருந்தாலும் கொஞ்சம் ஒத்திப்போடுங்கள். அந்த உணர்வுகளின் வீரியம் குறைந்தவுடன் பிரச்சனையை அலசுங்கள். உங்களது பலவீனத்தை அப்படியே வெளிப்படுத்திடவிட வேண்டாம்.

சிலர், ஒரு உத்வேகத்தில் தங்களது மனக்குறைகளையோ, அடுத்தவர்மீதான குற்றச்சாட்டையோ பேசத் துவங்குவார்கள். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியாது. தடுமாற்றத்தினால் நாகுழறும் அல்லது அழுகை பொங்கும் பேச முடியாமல், அழுகை தடுக்கும். இது போன்ற நிகழ்வார் சம்மந்தப்பட்ட அனைவருமோ ஒரு இக்கட்டான சூழலில், மாட்டிக்கொள்ள நேரிடும். உங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடு ஏற்படவும் காரணமாகிவிடும். அதனால், நூறு முறை மனதிற்குள் மறு பரிசீலனை செய்து, நிகழ்வுகளை rewind செய்து பார்த்து, அதன் பாதிப்புகளை மனதிற்குள்ளே அனுபவித்துவிட்டு, விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்லக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணவனும், மனைவுயும் தனித்திருக்கும் போது இருப்பதைவிட பல மடங்கு ஜாக்கிரதை உணர்வு, உறவுகளோடு சேர்ந்திருக்கும்போது அவசியம். உங்கள் துணையின் மேல் ஆயிரம்தான் கோபம் இருந்தாலும் அதை மற்றவர்களின் முன்பு வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் வாழ்க்கையே பறிப்போக் கூடிய அளவிற்கு பெரிய பிரச்சனைகளாயிருந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான தம்பதியர்கள் மற்றவர்கள் முன்னிலையில் தங்கள் துணையைக குறை சொல்வதையே ஒரு பொழுது போக்காக வைத்திருப்பார்கள்.

“எங்க, இவருக்கு ஒரு சின்ன விஷயத்தை உருப்படியா செய்யத் தெரிஞ்சா தானே…?” என்பதிலிருந்து, “இவ செய்யற ரசத்தை பார்க்கக்கூட முடியாது. அப்புறம் எப்படி சாப்பிடறது..?” என்பது வரை விரிப்பார்கள். இது போன்ற சின்ன சின்ன முடிச்சுகள் நூல் கண்டையே சிக்கலாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களது நியாயமான, உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாராட்டுக்களை மற்றவரின் முன்னிலையில் தெரிவியுங்கள். எதறகுமே இடம், பொருள் உண்டு. உணவு உண்பதற்கும், துணையுடன் கூடுவதற்கும் பிரைவஸி எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியத்துவத்தை உங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் கொடுங்கள்.

மன உணர்வுகளை சரியான வழியில், நாகரீகமான முறையில் வெளிபடுத்தக்கூடிய சக்தி மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதிகபட்சம் நாம் மனிதர்களாக வாழ்ந்தாலே போதும்.. அதையும் தாண்டியெல்லாம் புனிதமாக வேண்டாம்…!